‘சிறப்பான சிறுதானியங்கள் இருக்க, நூடுல்ஸ் எதற்கு?’

நிமிடங்களில் தயாராகும் ‘மேகி’ நூடுல்ஸ் எனும் துரித உணவில் உடலுக்கு ஒவ்வாத ஈயம் அதிக அளவில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த உணவு படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தத் தடை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதுதான் கேள்விக்குறி.

அதிகமாகத் துன்பத்துக்கு ஆளாகும் மனிதன், ‘நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்’ என்று தன்னைத்தானே நொந்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், நூடுல்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிட்டாலே நம் உடலின் ஆரோக்கியம் நொந்துவிடும் என்பது நிதர்சனம் என்பது தற்போது தெள்ளத்தெளிவாகி விட்டது.

இந்நிலையில், நல்உணவு குறித்த விழிப்பு உணர்வை ஊட்டும்விதமாக பேசும்  சென்னையைச் சேர்ந்த  சித்த மருத்துவர் வேலாயுதம். “அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிக அளவிலும், மிதமான உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்த அளவிலும் சிறுதானியங்களைச் சாப்பிட்டு வந்தாலே... பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவரைத் தேடத் தேவையில்லை” என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

“கோதுமை கோலோச்சியதால் இன்று நமக்கே நமக்கான சிறுதானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மிடமிருந்து மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியம், பணக்காரர்களின் உணவாகத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. கோதுமையில் குடலுக்கு ஒவ்வாமையைக் கொடுக்கும் ‘குளுட்டின்’ என்ற நச்சுப்பொருள் இருப்பதால், அது மலச்சிக்கலை உண்டாக்கும். இந்த உண்மையை இன்று பலரும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவாகவும், நுண்சத்துகள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகவும், உடல் சோர்வு இல்லாமலும் இருக்கும். சாமையில் இருக்கும் நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. வரகுக்கு, கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் இருப்பதோடு, நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும் குணமும் உண்டு. கேழ்வரகுக்கு, குடல்புண்ணைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு” என்ற வேலாயுதம், நிறைவாக,

“இப்படி சிறுதானிய உணவுகள் எதை எடுத்துக்கொண்டாலும் உடலுக்கு நன்மை தரும் பலன்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் இன்னும் சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாய் இருக்கின்றன. சிறுதானியங்களைப் பொறுத்தவரை உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இருக்கின்றன” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

‘சிறுதானியத்தால் எனக்கென்ன நன்மை?’, ‘ஏன் சாப்பிட வேண்டும்?’, ‘இயற்கை உணவை எங்கே தொலைக்கிறோம்?’ உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள  அருமையான வாய்ப்பு. சென்னையில், பசுமை விகடன்-அவள் விகடன் இணைந்து, ஜூன் 27-ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடத்தும் ’நல்உணவு சிறுதானிய விருந்து’ நிகழ்வில் கலந்துகொண்டு, சித்தமருத்துவர் வேலாயுதம்.... உள்ளிட்ட வல்லுநர்களின் பயனுள்ள கருத்துகளைக் கேட்டுப் பயன்பெறலாம். சத்தான சிறுதானிய உணவுகளை ருசித்து பலம் பெறலாம்.

பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick