Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close.

உலக திட்டங்கள் வேண்டாம்... உள்ளூர் திட்டங்களே தீர்வு!

நீர்க் கொள்கையின் பிதாமகன் ராமசாமி அய்யர், சமீபத்தில் மரணமடைந்தார். அவரைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். மத்திய அரசின் நீர்வளத் துறைச் செயலாளர் எனும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, அவர் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்த நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள் பலவும்... பாரம்பர்ய நுட்பங்களே. அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதில்தான் அவர் உறுதியாக இருந்தார். அந்த வகையில், 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னை ஐ.ஐ.டி-யில், ராமசாமி அய்யர் ‘நீராதாரங்களுக்கான திட்டமிடல்: பெரிய அணைகளும் மேம்பாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய விஷயங்கள், இங்கே உதாரணமாக இடம் பிடிக்கின்றன.

அணைகள் கட்டப்பட வேண்டும்... வறண்ட நதிகளை நோக்கி வற்றாத நதிகளின் நீரைத் திருப்பிவிட வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில், அணைகள் கட்டப்படுவதன் பின்னணியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள் இடையேயான கூட்டுச்சதி, மக்களின் பேரழிவு, இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்று பலவிஷயங்களையும் எடுத்து வைக்கிறார் ராமசாமி.

பறிக்கப்பட்ட பாரம்பர்ய நீர் உரிமை!

“நான் 85-ம் ஆண்டு முதல் 87-ம் ஆண்டு வரை நீர்வளத் துறைச் செயலாளராக இருந்தபோது, ‘தேசிய நீர்க் கொள்கை’ உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தேன். அப்போது தேசிய அளவில் நீர்க் கொள்கை என்று எதுவுமில்லை. பெரிய திட்டங்களில்தான் அரசின் கவனம் இருந்தது. நீர்வள அமைச்சகம், அப்போது பொறியாளர்களால் நிரம்பியிருந்தது. நீர்வளங்களுக்கான திட்டமிடல் என்பது வெறும் சிவில் இன்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட விஷயம் என்றே கருதப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன், நீர்வளங்கள் உள்ளூர் விஷயமாக இருந்தன. அவற்றை மக்களே நிர்வகித்தனர். பிரிட்டிஷ் காலத்தில், நவீனத்தின் வரவால், இயற்கை வளங்களின் உரிமை, மக்களிடமிருந்து அரசுக்குச் சென்றது. அவற்றின் மேலாண்மையோ... மக்களிடமிருந்து தொழில்நுட்பவாதிகள், பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்றது.

பேரணைகள்... ஒரு கண்ணோட்டம்!

உண்மையில், பெரிய தொழில்நுட்பங்கள் என்கிற பெயரில் ‘மேலிருந்து கீழாகச் செயல்படும் மக்கள் பங்கேற்பில்லாத இத்தகைய திட்டங்கள்’தான், ‘மேம்பாட்டுக்கானச் சின்னங்கள்’ என்று நம்புவதற்கு நாம் கற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், ஆண்டுகள் உருண்டோட, பல காரணங்களால் இந்த மயக்கம் தெளிய ஆரம்பித்திருக்கிறது. காரணம். அவை, பெரும் செலவு செய்யப்பட்டு வளங்களை, கபளீகரம் செய்யக்கூடிய காலத்தை விரயமாக்கும் திட்டங்களாக இன்று பார்க்கப்படுகின்றன. பொறியாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் ஒரு கூட்டுச்சதியில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட மக்களை யாரும் கலந்தாலோசிப்பதில்லை. 

இத்திட்டங்களுக்கு ஆதரவாக வைக்கப்படும் ஒரு முக்கியமான வாதம், இவற்றின் மூலம் கிடைப்பதாகச் சொல்லப்படும் பெரிய அளவிலான சமூக நன்மை. ஆனால், நிதர்சனத்தில் அப்படி எதுவும் நடப்பதேயில்லை. எனவேதான், இத்திட்டங்களை எதிர்த்து மக்கள் இயக்கங்கள் உருவாகியுள்ளன.

பேரணைகளிலுள்ள பிரச்னைகள்!

இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, விவசாய நிலங்களும், காடுகளும் காணாமல் போகின்றன. காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. விலங்குகளும், தாவரங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன. உயிர்ப்பன்மயம் காணாமல் போகிறது. மக்கள் (குறிப்பாக பழங்குடிகள்) மற்றும் இயற்கை மீது வன்முறை நிகழ்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுருங்குகின்றன. திட்டமிடுவதைவிட அதிவேகத்தில் வண்டல் படிகிறது. இதனால், திட்டத்தின் ஆயுட்காலம் குறைகிறது. அணையில் நீர் கிடைப்பதால், நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு அருகிலுள்ள மக்கள் அவற்றை அதிகம் சூறையாடுகின்றனர். கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டாலும், மிகக் குறைந்த அளவு நீரே கடைமடையை அடைகிறது. நீர்த்தேக்கம், மலேரியா, யானைக்கால் என்று பல நோய்களை உருவாக்குகிறது.

பரந்த நிலப்பரப்பில் நீர் தேங்கி, உப்புத் தன்மையை உருவாக்குகிறது. நல்ல செழிப்பான விவசாய நிலம், பயன்படுத்த முடியாத நிலமாக மாறுகிறது. மீண்டும் மீண்டும், ஒவ்வொரு அணைத் திட்டத்திலும் இவைதான் நடக்கின்றன.

பாடம் சொல்லும் பாலைவனப் பாசனம்!

சர்தார் சரோவர் திட்டத்துக்கான ‘நர்மதை மறுகுடியமர்வுக் கொள்கை’ மிகவும் முற்போக்கானது என பேசப்படுகிறது. அது ஓரளவுக்குத்தான் உண்மை. இழந்த நிலத்துக்கு ஈடாகக் கொடுக்க நிலம் கிடைக்கவில்லை. கூட்டுக் குடியமர்வு உறுதியளிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை. சில நேரங்களில், மிகத் தொலைவிலுள்ள அறிமுகமேயில்லாத இடங்களில் குடியமர்த்தப்படுவதால், அங்கே ஏற்கெனவே வசிக்கும் சமூகங்களுக்கும் இவர்களுக்கும், சுமூக உறவில்லாமல் போகிறது. ராஜஸ்தான் கால்வாய்த் திட்டத்தில், பாலைவனத்தில், பாசன விவசாயத்தை அறிமுகப்படுத்தியதை வைத்தே இந்தத் திட்டங்களின் எதிர்மறை விளைவுகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.

சமூக, சுற்றுச் சூழல் பார்வை!

இத்திட்டங்களின் அனைத்து பாதிப்புகளையும் முன்பே கணிப்பது மிகவும் சிரமமான காரியம். வருமுன் கணிக்க முடியாத பல விஷயங்களை, ஒவ்வொரு திட்டத்திலும் நாம் பார்க்க முடிகிறது. சிறந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சர்தார் சரோவர் திட்டத்தில் கூட, முன்பே கணிக்க முடியாத விஷயங்கள் உள்ளன. அணை வந்த பிறகு, கீழ் நீரோட்டப் பகுதியைச் சார்ந்த மக்கள், மீனவர்கள் என்ன செய்வார்கள்? என ஆய்வு செய்யப்படவில்லை.

சில பாதிப்புகளை உண்மையாகவே சரி செய்ய முடியாது. ஓடுகிற நீரைத் தடுத்து நிறுத்தும்போது, நீங்கள் அதன் உயிர் கட்டமைப்பை முழுவதும் மாற்றுகிறீர்கள். நீர், நஞ்சாகிறது. நீர்வாழ் உயிரினங்கள் மடிகின்றன. நீங்கள் வேறு வகையான மீன்களை வளர்ப்போம் என்று சொல்லலாம். ஆனால், அது ஆரம்பத்திலிருந்த உயிரினங்கள் மற்றும் அவற்றின் உயிர்ச்சூழலின் மீது திணிக்கப்பட்ட பேரழிவை ஈடு செய்யாது. அணை கட்டி நதியைத் தடுத்தால், அதன் உயிர்க் கட்டமைப்பு மாறுவதைத் தடுக்க முடியாது. இங்கே ஒரு காட்டை மூழ்கடித்து விட்டு, வேறொரு இடத்தில் இன்னொரு காட்டை உருவாக்குவோம் என்று நீங்கள் சொன்னால், அதுவும், உயிர்ச்சூழலில் ஏற்படும் இழப்பை ஈடு செய்துவிடாது.

‘நீரின் அளவு, காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப சமமின்றி பரவியுள்ளது’ என்று தங்களின் திட்டங்களை நிறைவேற்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். அதாவது, 365 நாளும் மழை பெய்வதில்லை. மழை சில மாதங்களில், சில இடங்களில் மட்டுமே பெய்கிறது என்கிறார்கள். ‘நீர்மிகு மண்டலங்களிலிருந்து, வறண்ட மண்டலங்களுக்கும், ஈரப்பதமுள்ள பருவத்திலிருந்து, வறண்ட பருவத்துக்கும் நீரை எப்படி கொண்டு செல்வீர்கள்?’ என்று கேட்டால்... ‘அறிவியலும், தொழில்நுட்பமும் இதை சாத்தியமாக்கும்’ என்கிறார்கள். ‘கடலுக்குச் செல்லும் நீர் அணைத்தும் வீண். எனவே, நீரைத் தடுத்து, வறண்ட பருவத்துக்கும், நிலத்துக்கும் பயன்படுத்துவது’ என முடிவுக்கு வருகிறார்கள். குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு, இவ்வளவு நீர் தேவை என்று கணக்கீடு செய்கிறோம். இதை நீங்கள் பூர்த்தி செய்ய, விநியோகத் தீர்வு தேவைப்படுகிறது. விநியோகத் தீர்வு, பெரிய திட்டங்களை உருவாக்குவதாக முடிகிறது.

உள்ளூர்த் தீர்வுகளே கரைசேர உதவும்!

தற்போதைய நுகர்வு முறை, நம்மை சமாளிக்க முடியாத தேவையை முன்னிறுத்தச் சொல்கிறது. இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய, தவறான தொழில்நுட்பம் சார்ந்த விநியோகமுறைத் தீர்வுகளை நாம் முன் வைக்கிறோம். இவற்றில், மக்கள் பங்கேற்பு மேலாண்மைக்குக் கொஞ்சமும் இடமில்லை. இந்தத் திட்டங்களின் இயல்பே, பங்கேற்பு மேலாண்மைக்கு வழியில்லாமல் செய்கிறது. கூடிய விரைவில், உள்ளூர் அளவில் நடக்கும் சிறிய முயற்சிகள், அரசின் கொள்கை வடிவில் இடம் பிடிக்கும் என்றே நான் நினைக்கிறேன். அப்படி நடக்காமல் போனால், நாம் மிகுந்த சிரமத்துக்குட்படுவோம்.

தேவையைப் பெருக்கிக் கொண்டு, அதைப் பூர்த்தி செய்ய விநியோகம் சார்ந்தத் தீர்வுகளைத் தேடுவதை விட, அதற்கு மாற்றாக, நீரின் அளவு இவ்வளவுதான் என வரையறுத்துக் கொண்டு, அதற்கேற்றாற் போல் தேவையைச் சமாளிக்க வேண்டும். இதன் மூலம் நிறைய செய்யலாம். உள்ளூர் அளவிலான நீர் மேலாண்மைதான் இதற்குச் சிறந்த வழி.

அண்ணா ஹஜாரேவின் ராலேகன் சித்தி, சுகோமார்ஜியின் ‘பானி (நீர்) பஞ்சாயத்துக்கள்’ போன்ற உள்ளூர் அளவிலான நீர் மேலாண்மைக்கும், சமூக மாற்றத்துக்கும், மிகச் சிறப்பான உதாரணங்கள் உள்ளன.”

இத்தகைய பாரம்பர்ய நுட்பங்களை முன்வைத்து இவர் பணியாற்றினாலும், அரசாங்கங்களின் காதுகளில் கடைசிவரை அவையெல்லாம் முழுமையாக ஏறவே இல்லை என்பது பெரும்சோகமே!

க.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஊக்கமளிக்காத ஊக்கத்தொகை... கொந்தளிக்கும் நெல் விவசாயிகள்!
“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close