பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்...பட்டையைக் கிளப்பிய பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

செப்டம்பர் 25. பசுமை பூத்துக் காட்சி அளித்தது மஞ்சள் மாநகர். ஆம், அன்றுதான் ‘பசுமை விகடன்’ நடத்திய மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் துவக்க விழா! முன்தினம் மழை, இதமான சூழலை ஏற்படுத்த அதிகாலை முதலே கண்காட்சி நடைபெற்ற ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்துக்குள் வரத்தொடங்கினர், விவசாயிகள். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் விவசாயிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துக் காத்திருந்தன. காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் முன்னிலையில், தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார். உற்சாகத்துடன் அரங்கினுள் நுழைந்த விவசாயிகள் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டனர்.

பாரம்பர்ய விதைகள், இயற்கை இடுபொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், நவீன தொழில்நுட்ப விளக்க அரங்குகள், சொட்டுநீர்க் கருவிகள், விவசாயக் கருவிகள் போன்றவற்றைக் கொண்ட அரங்குகள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடைப் பல்கலைக்கழகம், வேளாண்துறை அரங்குகள் என அனைத்து அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கண்காட்சியைத் திறந்து வைத்துச் சுற்றிப் பார்த்த சிறப்பு அழைப்பாளர்கள், கருத்தரங்கு மேடைக்கு வந்தனர். அடிகளார், ஆந்திர மாநில முன்னோடி விவசாயி நாகரத்தின நாயுடு மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் துவக்கி வைத்தனர். பச்சைக் கம்பளம் விரித்த கருத்தரங்குக் கூடத்தில் அரங்கு நிறைய விவசாயிகள் கூடியிருக்க, இனிதே துவங்கியது கருத்தரங்கு.

பலத்த கரவொலிக்கு நடுவே பேசத் தொடங்கிய நாகரத்தின நாயுடு, “கரடுமுரடான கற்கள் நிறைந்த ஓரிடத்தை வாங்கி, நானும், என் மனைவியும் கடுமையாக உழைத்ததன் பலனாக இன்றைக்கு அது பசுமை பூமியாக மாறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் வந்து பார்வையிட்டுச் செல்கிறார் என்றால், அது எனக்குக் கிடைத்த மரியாதை இல்லை. உழைப்புக்கும், இயற்கை விவசாயத்துக்கும் கிடைத்த மரியாதை. நான் இதுவரை அரசின் உதவியை எதிர்பாராமல் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு முறை விவசாயிகள் கூட்டத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ‘நாயுடு, விவசாயத்துல நீங்க மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க’ எனக் கேட்டார். நான், எனது உண்மையான வருமானத்தைச் சொல்லியிருந்தால், ‘விவசாயத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கிறது. எனவே, எல்லோரும் நாயுடுவைப் போல விவசாயம் செய்யுங்கள்’ எனச் சொல்லி விடுவார், அவர். அதனால், என்ன செய்வது என யோசித்து, ‘நமது மாநிலத்தில் உயர் பதவியில் இருக்கும் நேர்மையான அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னேன். இயற்கை விவசாயத்தில் நிச்சயம் அந்தளவுக்கு சம்பாதிக்க முடியும் அதற்கு நானே உதாரணம்.

நெற்பயிர் சாகுபடியில் அதிக அனுபவம் கொண்ட நான், எனக்குத் தெரிந்த யோசனைகளையும், கருத்துக்களையும் விவசாயிகளுக்குக் கற்றுத் தருகிறேன். நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்கு, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால்தான் என் பண்ணையில் மண்ணுக்குத் தேவையான இயற்கை இடுபொருட்களை இட்டு, விவசாயம் செய்துகொண்டு இருக்கிறேன். இயற்கை விவசாயத்தில் தேவையற்ற செலவுகள் குறைவு. முடிந்தவரை கலப்புப் பயிரை அதிகமாக பயிரிடுங்கள். ஏனெனில் ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும். விவசாயிகள் கடனாளியாகாமல் காப்பாற்றி விடும். இயற்கை விவசாயத்தில் முழுமனதுடன் ஈடுபட்டால் லாபம் அதிகம். அதைத் திறமையாகக் கையாள அதிகமானோருக்குத் தெரிவதில்லை.

இயற்கை விவசாயம் செய்த காலகட்டத்தில் எவ்வளவு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் என்று யோசியுங்கள். ஆனால், இப்போது அதிக அளவில் தற்கொலை நடப்பது ஏன்? கடந்த 50 ஆண்டுகளாக செயற்கை உரம் உபயோகிப்பதால், நிலம் மலடாக மாறிவிட்டது. இப்போது நிலத்தில் நுண்ணுயிரிகளே இல்லை. பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்?” என்ற நாகரத்தின நாயுடு, தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பொறுமையாக பதிலளித்தார்.

தலைமையுரை ஆற்றிய பொன்னம்பல அடிகளார், “மனிதனை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தி புனிதமாக்குவது ஆன்மிகம். வாழ்வியலில் இயற்கையும், இறைவனும் ஒன்றுதான். இறைமை எங்கும் இருக்கிறது. அதேபோல் இயற்கையும் எங்கும் இருக்கிறது. அதைக் காப்பாற்றுவது நமது கையில்தான் இருக்கிறது. அதற்கு அனைவரும் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும். அறிவியலாளர்கள் பரிணாம வளர்ச்சியை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, திருநாவுக்கரசர் போன்ற முன்னோர்கள் இயற்கையைப் பற்றி அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை முறையாகக் கடைபிடித்து வந்தது வரை வில்லங்கம் இல்லை. இப்போது, அந்த இயற்கை வளம் முறையாக இல்லை.

இயற்கை சார்ந்து மட்டுமே நிலங்களைப் பிரித்தவன் தமிழன் மட்டும்தான். நம்மிடம் இருந்த நிலங்களுக்கேற்ற உணவும், அதற்கேற்ற உற்பத்தி முறையையும் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். மண் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாலை நிலமாகவே இருந்தாலும், அதை பசுஞ்சோலையாக மாற்றுவது விவசாயிகள் கையில்தான் இருக்கிறது. நாகரத்தின நாயுடு தனது வருமானத்தைப் பற்றி சொன்ன செய்திகள், விவசாயிகள் நெஞ்சில் இருத்த வேண்டியவை.

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் சென்றவர், நஞ்சை அமுதாக்கிய ஆழ்வார் நம்மாழ்வார். அவர், உலகின் ஒப்பற்ற வேளாண் விஞ்ஞானி. இயற்கை வழி விவசாயத்துக்குத் தேவையான ஏராளமான தொழில்நுட்பங்களையும், செய்திகளையும் நம்மிடையே விதைத்துச் சென்றுள்ளார். நெல்லைக் குறிப்பிட்டு, ‘அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல’ என்பார். ‘மண்ணில் கொட்டுகிற ரசாயன உப்பு, இன்று மண்ணை மலடாக்கிவிட்டது. மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்ச் சங்கிலி இப்போது முழுமையாக இல்லை. அதை வளமாக்குவதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே முக்கிய தேவை’ என்பதை அழுத்தமாகச் சொன்னவர் நம்மாழ்வார். ஆக, சூழலுக்கு ஒத்துழைக்காத ரசாயனங்களை விலக்கி, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, உண்பவர்களுக்கு நஞ்சில்லா உணவையும், உழவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பெற்று தரும் இயற்கை வழி விவசாயத்தைக் கைக்கொள்ளுவோம்’’ என்றார். அத்துடன் துவக்கவிழா நிறைவடைந்து.

கருத்தரங்கில் இடம்பெற்ற முன்னோடி விவசாயி உடுமலைப்பேட்டை பாலகிருஷ்ணன், சம்பங்கி விவசாயி திண்டுக்கல் மருதமுத்து, புளியங்குடி அந்தோணிசாமி, மஞ்சள் விவசாயி ராமகிருஷ்ணன், கரும்பு விவசாயி நடேசன் ஆகியோரின் அனுபவ உரைகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை தலைவர், முனைவர் சோமசுந்தரம் ஆகியோர் ஆற்றிய உரைகள் உள்ளிட்ட நான்கு நாள் கருத்தரங்க உரைகள் அடுத்த இதழில்...

கருத்தரங்கில் குவிந்த மக்கள்!

செப்டம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்ற கண்காட்சி, கருத்தரங்கில் 117 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என ஆர்வமுடன் வந்து கண்காட்சியைப் பார்வையிட்டு, கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பாரம்பர்ய விதைகள், இயற்கை இடுபொருட்கள், நாற்றுப் பண்ணைகள் என பல்வேறு அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கருத்தரங்கம் நான்கு நாட்களும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது... வேளாண்துறை, அரசு அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அசத்திய பசுமை அரங்குகள்!

பன்னாட்டுக் கண்காட்சி, கருத்தரங்குகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் சிறப்பு அரங்குகள் செயல்படும். அது போன்ற சில அரங்குகளை இந்தக் கண்காட்சியில் ‘பசுமை விகடன்’ அமைத்திருந்தது.

நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கான தனித்தனி அரங்குகள் அமைத்து, அங்கு முன்னோடி விவசாயிகள் அமர வைக்கப்பட்டனர். அவர்கள், குறிப்பிட்ட பயிர் தொடர்பாக விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினர். நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு அரங்குகளில் முறையே, முன்னோடி விவசாயிகளான மோகனசுந்தரம், நல்லசிவம், காந்தி மற்றும் நந்திவர்மன் ஆகியோர் நான்கு நாட்களும் அரங்கில் அமர்ந்திருந்து விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அதேபோல, இன்னொரு அரங்கில்... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி போன்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த படக்காட்சியுடன், முன்னோடி விவசாயி லோகநாதன் விளக்கியது, விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பசுமைக்குழு

படங்கள்: தி.விஜய், க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick