Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close.

சீமைக்கருவேல்... வரமா... சாபமா ..?

ஓர் அலசல் ரிப்போர்ட்

'மரங்களை வெட்டுங்கள்... மழை பொழியும்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் சுற்றி வருகின்றன. அவற்றில், 'சீமைக்கருவேல் என்ற வேலிக்காத்தான் மரம் சுற்றுச்சூழலைச் சீர்குலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சூழலை வறட்சியாக்குகிறது. கால்நடைகளை மலடாக்குகிறது. இவற்றை அழிக்காவிட்டால், விரைவில் தமிழகம் பாலைவனமாகி விடும் என்ற ரீதியில் பரப்புரை செய்யப்படுகிறது. 

அதேசமயம், 'இப்படி பயப்படும் அளவுக்கெல்லாம் அந்த மரம் ஒன்றும் ஆபத்தானது அல்ல’ என்ற எதிரொலியும் கேட்கிறது.

அதனால், என்னதான் உண்மை என்பதை அறிய, இதுதொடர்பாக இயங்கிவரும் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன கருத்துக்கள் இங்கே...

விவசாய நிலத்தை ஆக்கிரமிக்கும் சீமைக்கருவேல்!

பிரிட்டோராஜ், மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மைப் பொறியாளர், திண்டுக்கல்: ''வேலிப் பயிராகவும், விறகாகவும் 1950ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன, சீமைக்கருவேல் விதைகள். வண்டல்மண், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை, சீமைக்கருவேல மரத்தின் விதைப் பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில் ஆரம்பத்தில் வேலிப்பயிராக வளர்க்கப்பட்ட இந்தப் பயிர், தனது ஆக்டோபஸ் கரங்களால் மொத்த நிலங்களையும் ஆக்கிரமித்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தரிசாக விடப்பட்ட நிலங்களில் எல்லாம் இந்த மரங்கள் பல்கிப் பெருகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 4 சதுர மீட்டருக்கு ஒரு மரம் என்ற அளவில் இருக்கிறது. இம்மரத்தின் வேர் பக்கவாட்டிலும் ஆழமாகவும் நீண்ட தூரம் ஊடுருவக்கூடியது. அதனால், இவற்றை வேலியில் வளர்த்தாலும் முதன்மைப்பயிருக்கு பாய்ச்சும் தண்ணீரில் 45 சதவிகிதம் வரை இவை உறிஞ்ச வாய்ப்புண்டு.''

இலவசமாக அழித்துக் கொடுக்கிறோம்!

'ஏனாதி’ பூங்கதிர்வேல், தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமைக்கருவேல் ஒழிப்பு இயக்கம்: 'நம்ம நிலத்தை, நீர் ஆதாரத்தை, விவசாயத்தைச் சீரழிக்கும் மிகமோசமான அழிவுச் சக்தியா இருக்கு சீமைக்கருவேல். இதை அழிச்சாதான் எதிர்கால சந்ததிக்கு மாசுபடாத சூழலைக் கொடுக்க முடியும்ங்கிற எண்ணத்துல நண்பர்களோட சேர்ந்து இந்த அமைப்பை ஆரம்பிச்சோம்.

முகநூல் மூலமா எங்க பணிகளைப் பற்றி தெரிஞ்சுக்கிட்ட பலர் ஆர்வமா எங்களோட இணைஞ்சிக்கிட்டு இருக்காங்க. இப்ப எங்க அமைப்புல தமிழக அளவுல 8 ஆயிரம் நண்பர்கள் இருக்காங்க. கடந்த சில ஆண்டுகளாக சீமைக்கருவேல் ஒழிப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கிட்டிருக்கோம். சீமைக்கருவேலை ஒழிக்க நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறதால, தமிழக அரசும் இந்த மரங்களை அகற்ற உத்தரவு போட்டிருக்கு. ஆனா, அதிகாரிகள் இதை செயல்படுத்தறதில்லை.

எங்க குழுவுக்கு தகவல் கொடுத்தா நாங்க இலவசமாவே அகற்றிக் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியா இருந்தாலும் சரி... ஊராட்சித் தலைவர், பொதுமக்கள் கையெழுத்துப் போட்டு விண்ணப்பம் அனுப்பினா, அடுத்த 10 நாள்ல வேலைகளைத் தொடங்கிடுவோம். தேவைப்பட்டா வேற மரங்களையும் நட்டுக் கொடுப்போம். நாங்க அழிக்கிற சீமைக்கருவேல மரங்களை விற்பனை செய்றது மூலமா கிடைக்கிற தொகையை ஜே.சி.பி. உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படுத்திக்குவோம். இதுவரை 600 ஏக்கர் நிலப்பரப்புல சீமைக்கருவேல் மரங்களை அழிச்சிருக்கோம்.'

விவசாயிகளின் பகைவன்!

முனைவர் எஸ்.செந்தூர்குமரன், தலைவர் மற்றும் பேராசிரியர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி: 'கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தின் 25 சதவிகித விவசாய நிலங்களை இது ஆக்கிரமித்துள்ளது. இந்தத் தாவரத்தின் வேர்கள் வறண்ட சூழ்நிலையிலும் வளரக்கூடிய தன்மையுடையவை. நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆற்றல் வாய்ந்தவை. அதனால் அருகிலுள்ள மற்ற தாவரங்களுக்கோ, விவசாயப் பயிர்களுக்கோ தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதன் காய்களை உண்ணும் கால்நடைகள் மூலமாகவும் இது பரவுகிறது. இந்தத் தாவரம் உள்ள இடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், பறவைகள் கூடு கட்டுவதில்லை. ஆணிவேர் இல்லாத சிறிய வகைச் செடிகள் இந்த மரத்தின் கீழ் வளர முடியாமல் இறந்து விடுகின்றன. விறகு மற்றும் கரி தயாரிப்புக்கும் மட்டுமே பயன்படுகிறது. எனவே, இதை 'விவசாயிகளின் பகைவன்’ என்ற பட்டியலில் வைத்துள்ள அமெரிக்கா, தனது நாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருளாக வைத்துள்ளது.''

ஆபத்தும் இல்லை...

அவசியமும் இல்லை!

முனைவர் பார்த்திபன், பேராசிரியர் மற்றும் தலைவர், வனக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்: 'சீமைக்கருவேல் மரத்தைப் பற்றி சூழலியலாளர்கள் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அத்தனை ஆபத்தான மரம் அல்ல. அதேநேரத்தில் நிச்சயம் வளர்த்தே ஆகவேண்டிய அத்தியாவசியமான தாவரமும் அல்ல. இதுவும் வழக்கமான தாவரங்களைப் போன்றதுதான். இது கார்பன்டைஆக்ஸைடை அதிகளவு வெளியிடும் என்பது தவறான தகவல். அனைத்துத் தாவரங்களும் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடும் என்பதுதான் அறிவியல். அதற்கு சீமைக்கருவேல் விதிவிலக்கல்ல. இதனுடைய வேர் அதிகபட்சம் 12 மீட்டர் தூரம் வரை போகும். நிலத்தடியில் உள்ள நீரை உறிஞ்சுவதும், ஒளிச்சேர்க்கைக்காக காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஓரளவுக்கு உறிஞ்சுவதும் வறட்சியைத் தாங்கி வளரும் அனைத்து தாவரங்களுக்குமான பொதுவான குணம். இந்தத் தாவரத்தால் தமிழகம் பாலைவனமாகி விடும் என்பதெல்லாம் அதீத கற்பனை.

மற்ற தாவரங்களில் இருந்து இதை வேறுபடுத்துவது அதன் விரைவான வளர்ச்சிதான். ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடிப்பவனுக்குத்தானே பரிசு கிடைக்கும். அதுபோலத்தான் இதுவும். மற்றவர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதற்காக முதலில் வந்தவரை குற்றம் சொல்ல முடியாது.

இப்போதும் தென்மாவட்டங்களில், இந்த மரத்தை விதைத்து, குத்தகைக்கு விடும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மரத்தை விற்று வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், தற்போது இந்த மரம் அழிக்க வேண்டிய ஒன்று என்ற கருத்து வலுத்து வருகிறது. 'தேவையில்லை’ என நினைப்பவர்கள் இதை அழிக்கலாம். நீர்நிலைகள், விவசாய நிலங்கள், பாதைகள் போன்றவற்றை இந்த மரங்கள் ஆக்கிரமித்திருந்தால் அப்புறப்படுத்தலாம்.'


சீமைக்கருவேலில் இருந்து பூச்சிவிரட்டி!

தென் மாவட்டங்களில் சீமைக்கருவேல் மரத்தைப் பயன்படுத்தி முக்கியத் தொழிலாக மூட்டம் போட்டு கரி தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. அடுத்த கட்டமாக, சீமைக்கருவேலில் இருந்து பூச்சிவிரட்டி தயாரிக்க முடியும் என்பதை  அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்டம், அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. இவர், இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் 'ஓடம்’ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளார்.

'2005ம் ஆண்டு முதல் எங்கள் நிறுவனம் உயிரி எரிபொருள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதை இணையதளம் மூலமாகத் தெரிந்துகொண்ட அமெரிக்காவிலுள்ள கென்டகி பல்கலைக்கழக வேதியியல் பொறியியல்துறை பேராசிரியர் ஜெப்ரிஸி, எங்களைத் தொடர்பு கொண்டு... சீமைகருவேல் விறகை எரித்து 'உட் வினிகர்’ தயாரித்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லி ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டார். நாங்களும் சம்மதம் சொன்னதால், 12 மாணவர்களுடன் அவர் இங்கு வந்து ஒரு மாதம் தங்கி பூச்சிவிரட்டி பற்றி ஆராய்ச்சி செய்தார். அது நல்ல பலனளித்தது.

சீமைக்கருவேல் மரத்துண்டுகளை இரும்புக்கலனில் போட்டு 3 மணி நேரம் வரை எரியூட்டினால் வாயு வெளிப்படும். அதைக் குளிர்வித்தால் 'உட் வினிகர்’ கிடைக்கும். 8 கிலோ சீமைக்கருவேல் மரத்துண்டுகளை சூடுபடுத்த 5 கிலோ சீமைக்கருவேல் விறகு தேவைப்படும். ஆக, 13 கிலோ சீமைக்கருவேலில் இருந்து...

3 கிலோ கரியும், 6 லிட்டர் உட் வினிகரும் கிடைக்கும். உட் வினிகரை 10 லிட்டர் தண்ணீரில், 500 மில்லி அளவில் கலந்து தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும். உட் வினிகர் தயாரிப்புக் கலன் அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் செலவாகும்'  என்றார்.


''வறட்சி மாவட்டங்களுக்கு... வாழ்வாதாரம்..!''

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் சீமைக்கருவேல மரங்களை வெட்டி, கரியாக்கி விற்பனை செய்து வருகிறார். அவரது அனுபவத்தைக் கேட்போம்,

''எங்க அப்பா காலத்துல இருந்தே கரி மூட்டத்தொழில்தான் செய்றோம். ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாதிரியான வறட்சியான மாவட்டங்கள்ல, இருக்கிற மக்களோட வாழ்வாதாரத்துக்காகத்தான் சீமைக்கருவேல மர விதைகளைத் தூவுனாங்கனு எங்க அப்பா சொல்லுவாரு. இந்த சீமைக் கருவேலமரம் இருக்கிற நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து மரங்களை வெட்டி, விறகாக செதுக்கி கூம்பு வடிவத்துல அடுக்கி கரி மூட்டம் போடுறோம். நல்ல மரங்களா இருந்தா, ஏக்கருக்கு சராசரியா 10 ஆயிரம் ரூபாயும், ஓரளவு சுமாரான மரங்களா இருந்தா, ஏக்கருக்கு சராசரியா 6 ஆயிரம் ரூபாயும் கொடுத்து குத்தகைக்கு எடுத்துக்கிறோம். ஓர் ஏக்கருக்கு சராசரியா 15 முதல் 20 டன் விறகு கிடைக்கும். ஒரு டன் விறகுக்கு சராசரியா 350 கிலோ கரி கிடைக்கும். கரி டன்னுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், தூர்கரி (வேர்ப்பகுதி கரி) டன்னுக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகுது. வெட்ட வெட்ட சீமை கருவேலமரம் வளர்றதுனால தட்டுப்பாடு இல்லாம, விறகு வெட்டுற தொழிலும், கரி மூட்டத்தொழிலும் தினசரி நடக்குது... வருமானமும் கிடைக்குது'' என்றார்.

சீமைக்கருவேலில் இருந்து மின்சாரம்!

சீமைக்கருவேல் மரங்களைப் பொடியாக்கி அதை மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்துவது பற்றி சில விஷயங்களைச் சொன்னார், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை.

'சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி, அரைத்துத் தூளாக்கும் இயந்திரத்தை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த இயந்திரம் மூலம் சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி, அரைத்துத் தூளாக்கி விடலாம். இந்த மரத்தூளுக்கு தனியார் பயோ மின் உற்பத்தி நிலையங்களில் அதிகத் தேவையுள்ளது. இம்மரத்தை விறகுக்காக விற்பதை விட இப்படி தூளாக்கி விற்கும்போது அதிக வருவாய் கிடைக்கும்.

பல தொழில்முனைவோர் விவசாயிகளிடம் பணம் பெறாமல் இந்த இயந்திரத்தின் மூலம் சீமைக்கருவேல் மரங்களை அழித்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் மரத்தூளை மின்சார ஆலைகளில் விற்று லாபம் சம்பாதித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு தீமை செய்கிறது எனச் சொல்லும் சீமைக்கருவேலை இப்படி முறையாகப் பயன்படுத்தினால், மரங்களின் பரவல் தடுக்கப்படுவதுடன் அதை மாற்றுச் சக்தியாகவும் பயன்படுத்த முடியும்' என்றார்.

தொடர்புக்கு,

பிரிட்டோராஜ், செல்போன்: 9944450552

முனைவர். பார்த்திபன், செல்போன்: 04254271541

பூங்கதிர்வேல், செல்போன் : 7806919891

செந்தூர் குமரன், செல்போன் : 9443869408

அண்ணாத்துரை, செல்போன் : 9965558220

ஜெயமுருகன், செல்போன்: 8012925181

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மண்புழு மன்னாரு: பழைய சோறும் கலைவாணரும்!
மாடியில் மூலிகைத்தோட்டம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close