பசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...

‘பசுமை விகடன்’ சார்பாக ‘அக்ரி எக்ஸ்போ-2015’ என்ற மாபெரும் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செப்டம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு, தங்களுடன் உரையாட இருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

தவத்திரு. பொன்னம்பல அடிகளார். குன்றக்குடி,

திருவண்ணாமலை ஆதீனம்: கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் துவக்கி வைக்கும் அடிகளார், ஆன்மிகப் பணிகளில் மட்டும் தம்மை அடைத்துக் கொள்ளாமல், சமூகப் பணிகளிலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அடிகளாரின் விவசாயப் பணிகள் வியப்புக்குரியவை. வறட்சியான மாவட்டமான சிவகங்கை விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் அறிவியல் நிலையத்தை மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்காக மடத்துக்குச் சொந்தமான நிலத்தை அளித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக சொட்டு நீர்ப் பாசனத்தை மடத்துக்கு பாத்தியப்பட்ட தென்னந்தோப்பில் அமைத்து விவசாயிகள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். தேசிய தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு ரகமாக இருக்கும் வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை மரங்களை நடவு செய்துள்ளார். மடத்தில் புறக்கடைத் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

ஜி.நாகரத்தினம் நாயுடு, முன்னோடி இயற்கை விவசாயி, ஐதராபாத், தெலங்கானா: துவக்கவிழாவில் சிறப்புரையாற்ற உள்ள இவர், தெலங்கானா மாநில முன்னோடி இயற்கை விவசாயி. இவர், தனது இயற்கை விவசாய சாதனைக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து 300 விருதுகளைப் பெற்றவர். ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்தபோது, இவரின் இயற்கை விவசாயப் பண்ணையில் நடந்த வயல்விழாவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 62 வயதாகும் நாயுடு, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்குச் சென்று இயற்கை விவசாயம் குறித்து உரையாற்றி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இவரது இயற்கை விவசாயப் பண்ணையை வியந்து பாராட்டியுள்ளார். இதுவரை 40,000 இளைஞர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்துள்ளார்.

25-ம் தேதி காலை

‘செலவைக் குறைக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள்’

என்ற  தலைப்பில் பேச இருக்கும் பேச்சாளர்கள்...

‘சம்பங்கி’ மருதமுத்து, திண்டுக்கல்: மென்பொருள் பொறியாளரான இவர், இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட காதலால், இயற்கை விவசாயி ஆனவர். இவரும், இவரது மனைவி வாசுகி இருவரும் இணைந்து விவசாயிகளிடம் இயற்கை விவசாய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயம் மூலம் 60 சென்ட் சம்பங்கித் தோட்டத்தில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர். தமிழகம் முழுக்க பல விவசாயிகளுக்கு சம்பங்கி சாகுபடி நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து, பொருளாதார முன்னேற்றம் அடைய காரணமாக இருப்பவர். ஜீரோ பட்ஜெட் முறையில் பூ சாகுபடி தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

‘தென்னை’ பாலகிருஷ்ணன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள லிங்கமநாயக்கன்புதூர்: இவர், முன்னோடி தென்னை விவசாயி. ஆவின் ஊழியரான இவர், இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். சுபாஷ் பாலேக்கர் நடத்திய ஜீரோ பட்ஜெட் வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர். ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர்க்குழாய்கள் வழியே அடைப்பு இல்லாமல் பாசனம் செய்யும் யுக்தி இவரின் சிறப்பு. கடுமையான வறட்சியிலும் தென்னை மரத்தைக் காப்பாற்றும் மூடாக்கு வித்தைக்காரர்.

‘கரும்பு’ நடேசன், திருச்செங்கோடு: ஜீரோ பட்ஜெட் முறையில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு வருகிறார். நகரக் கழிவுகள் கலந்து மாசுபட்ட கிணற்று நீரைப் பாசனத்துக்கு உகந்ததாக மாற்றி அதிக மகசூல் எடுத்து வருகிறார். செயற்கை மழை பொழியும் ‘ரெயின் கன்’ நீர்ப் பாசனம் இவரின் தனிச்சிறப்பு.

‘மஞ்சள்’ ராமகிருஷ்ணன், பெரம்பலூர் : வழக்கறிஞரான இவர், ஜீரோ பட்ஜெட் முறையில் மஞ்சள் உற்பத்தி செய்கிறார். மஞ்சளுக்கு இடையில்  வெங்காயம், தட்டைப்பயறு, கருணை, ஆமணக்கு எனப் பல ஊடுப்பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். அங்ககச்  சான்றளிப்புத் துறையில் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பெரம்பலூர்வாசிகள் மத்தியில் இவரின் இயற்கைப் பொருட்களுக்குத் தனிமதிப்பு உண்டு.

25-ம் தேதி மதியம்

‘லாபம் கொடுக்கும் மண்வளக்கலை’

என்ற தலைப்பில் பேச இருக்கும் பேச்சாளர்கள்...

அந்தோணிசாமி, புளியங்குடி: தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயி. இவரது கரும்பு வயலில் 23-வது தாம்பு வளர்ந்து நிற்கிறது. கரும்பு விவசாயிகள், விலையில்லையே என கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது வயலில் விளையும் கரும்பை சர்க்கரையாக்கி விற்பனை செய்யும் தற்சார்பு விவசாயி. எலுமிச்சையில் சாதனை மகசூல் எடுத்து வரும் வேளாண் விஞ்ஞானி. இவரது கரும்பு வயலில் இருக்கும் மண்ணின் அங்ககத்தன்மையைப் பார்த்து பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வியந்து பாராட்டியுள்ளனர்.

முனைவர்.சோமசுந்தரம், தலைவர் மற்றும் பேராசிரியர், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியில் சிறப்பாகப் பணியாற்றும் செயல்பாட்டாளர். முதுநிலைப் படிப்புக்கான ஆய்வில் நெல்லுக்கு ஊடுப்பயிராகத் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து ஆச்சர்யப்பட வைத்தார். பஞ்சகவ்யாவை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது ஆராய்ச்சிக்காக இதுவரை 17 விருதுகளையும், 12 பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

26-ம் தேதி காலை

‘பருவத்துக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்’

என்ற தலைப்பில் பேச இருக்கும் பேச்சாளர்கள்...

பிரிட்டோ ராஜ், மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மைப் பொறியாளர், திண்டுக்கல் : நவீன தொழில்நுட்பங்களும், அரசின் திட்டங்களும் விவசாயிகளுக்கு முறையாகச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் அரசு அலுவலர். தூர்ந்து போன போர்வெல்களிலும் நீர் எடுக்கும் இவரது தொழில்நுட்பத்தால் பயனடைந்த விவசாயிகள் அநேகம். நீர்ச் சேமிப்பு நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வரும் இவர், தமிழகத்தில் முதல் முறையாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற குளங்கள் இணைப்புத் திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.

‘கேத்தனூர்’ பழனிச்சாமி, முன்னோடிப் பந்தல் விவசாயி: பந்தல் காய்கறிகளில் இவ்வளவு வருமானம் வருமா? என தமிழக விவசாயிகளை ஆச்சர்யப்பட வைக்குமளவுக்கு சாதனை மகசூல் எடுத்துவரும் சாணக்கியர். இயற்கை முறையில் எளிய நுட்பங்களைக் கொண்டு, அதிக மகசூல் எடுப்பது இவரது தனிசிறப்பு.

26, 27, 28 ஆகிய தேதிகளில் பேச இருக்கும் பேச்சாளர்கள் பற்றிய விவரங்கள், அடுத்த இதழில்...

பசுமைக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick