இலவு காக்கும் கிளிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அண்மையில் இரண்டு துயர சம்பவங்கள் தமிழ்நாட்டில்  நடந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், தனியார் நிதி நிறுவனத்தில் கடனில் வாங்கிய டிராக்டர் நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காக, கடனை வழங்கிய நிதி நிறுவன ஊழியரும், கூலிப்படையினரும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனை அடித்து உதைத்து, டிராக்டரை பறிமுதல் செய்த சம்பவம் விவசாயிகளைக் கொதிப்படையச் செய்துள்ளது. இது வீடியோவாக உலகம் முழுக்கப் பரவி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இந்தப் பிரச்னை ஓய்வதற்குள் அரியலூர் மாவட்ட ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர், மற்றொரு தனியார் நிதி நிறுவனம் மூலமாக கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். வறட்சியின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறாததால், டிராக்டர் மூலம் வருமானம் ஈட்ட முடியாமல் மிகவும் இக்கட்டான சூழலில் இருந்திருக்கிறார் அழகர். பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அழகரை அவமானப்படுத்தி டிராக்டரை ஜப்தி செய்திருக்கிறார்கள். மனமுடைந்த அழகர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல மகராஷ்டிரா மாநிலம் விதர்பாவிலும் கூட, தனியார்களிடம் கடன் வாங்கும் விவசாயிகள்தான், பெரும்பாலும் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல ஆயிரம் கோடிகள் விவசாயக் கடனுக்காக ஒதுக்கப்படுகிறது. இது முழுமையாக விவசாயிகளிடம் சென்று சேர்ந்தால், நிச்சயம் இப்படிப்பட்ட துன்ப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படமாட்டார்கள். மானம், மரியாதைக்குப் பயந்து கடனைக் கட்டும் விவசாயிகள், வங்கிகளுக்கு வந்தால், கால் கடுக்க நிற்க வைக்கும் வங்கி அதிகாரிகள், விஜய் மல்லையா போன்ற பகட்டு மனிதர்களை நம்பி, கோடி, கோடியாக கடன் கொடுத்து,‘இலவு காத்த கிளி’களாக காத்து நிற்கிறார்கள்.

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்