சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

மண்ணைப் பொன்னாக்கும் பொன்னேர்! பாரம்பர்யம் இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்

*அடிமண் இறுக்கம் நீங்கும்

*ஈரப்பதம் சேமிக்கப்பட்டு விளைச்சல் கூடும்

*களைகள் கட்டுப்படும்

*பூச்சிகள் கட்டுப்படும்

ண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்று... தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத் தொடக்கத்தில் உழவு ஓட்டி சூரியபகவானிடம் வேண்டுதல் செய்வதே ‘பொன்னேர் உழவு’ என்பதாகும். இது, காலம்காலமாக ஒவ்வொரு சித்திரையிலும் தமிழர்கள் கடைப்பிடிக்கும் வழக்கமாகும்.

பொன்னேர் உழவு குறித்து... திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர்.தொ.பரமசிவனிடம் பேசினோம். “தமிழகத்தில் வழக்கமாக, ‘இருபோக நஞ்சை ஒரு போகம் புஞ்சை’ அல்லது ‘ஒருபோகம் நஞ்சை இருபோகம் புஞ்சை ‘என முப்போக விளைச்சல் உண்டு. அறுவடை முடிந்து பயிரின்றி வெறுமையாக, தரிசாகக் கிடக்கும் நிலத்துக்கு ‘கரந்தை’ என்று பெயர். நிலத்தை தரிசு நிலம் என்பதை அமங்கலம் என்பார்கள், தரிசு என்று சொல்லாமல், கரந்தை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், பழைய கால விளைநில விற்பனைப் பத்திரங்களில் ‘இந்த இடத்தை கரந்தையுடன் கிரயம் செய்துகொடுக்கிறேன்’ என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும். அறுவடை முடிந்துள்ள கரந்தை நிலம் புழுதிபடிந்த நிலமாக இருக்கும். சித்திரை மாதத்தில் முதல்மழை பெய்தவுடன் அதில் உழவு செய்வார்கள். இதை ‘நல்லேர் பூட்டுதல்’, ‘புழுதிஉழவு’, ’கோடைஉழவு’ என்று வட்டார வழக்கில் சொல்வார்கள்.

சித்திரையின் முதல்நாளன்றோ, அல்லது சித்திரை மாத வளர்பிறையிலோ... கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூ கட்டி, வணங்கி மாடுகளைத் தயார் செய்வார்கள். பிறகு, ஊர் பொதுவயலில், ஊரிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஏர் பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் பொன்னேர் உழுதல். விவசாயத்தின் பெருமை கருதி சொல்லப்பட்ட சொல்தான் ‘பொன்னேர்’.

ஊர் பொதுநிலத்தில் பொன்னேர் பூட்டி உழுது, தானியங்களை விதைத்துவிட்டு பிறகு, அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுது விட்டு ஏதாவது ஒரு தானியத்தை சம்பிரதாயத்துக்கு விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானிய பயிர்களில் ஊர் கன்று, காளைகளை (கோயில்மாடுகள்) மேய விடுவார்கள். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தகுதிபடுத்த ஊர் விவசாயிகள் ஒன்றுகூடி கடைப்பிடிக்கும் உன்னதமான தொழில்நுட்பம்தான் இது. கால காலமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதால், புனிதமான நிகழ்வாக பதிய வைத்துள்ளனர்” என்றார், தொ.பரமசிவன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்