பண்ணைக்கருவிகளுக்கு 50% மானியம்!

மிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை,  நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஜூலை 21-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் விவசாயம் சம்பந்தமான முக்கிய அம்சங்கள்: பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு  ரூ 100 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலைத்துறைக்கு  ரூ518.19 கோடி ஒதுக்கீடு.

புதிய பயிர்க் கடன் திட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நடப்பாண்டில் ரூ1680.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்து.

கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ1,188.17 கோடி ஒதுக்கீடு.

இலவச ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ182.33 கோடி ஒதுக்கீடு.

சுற்றுச்சூழல், வனத்துறைக்கு ரூ652.78 கோடி நிதி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ743.79 கோடி நிதி ஒதுக்கீடு.

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, நடப்பு நிதியாண்டில் ரூ 30 கோடி ஒதுக்கீடு.

100 கால்நடைக் கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.

27.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் 2016-17 ம் ஆண்டில் பயறு வகை விளைச்சலுக்குக் கொண்டு வரப்படும்.

பண்ணை இயந்திரங்கள் வாங்க  விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

நடப்பாண்டில் உணவு உற்பத்திக்கு 147 லட்சம் மெட்ரிக் டன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயத்தைக் காக்க மாநில அரசின் பங்காக  ரூ 239.51 கோடி ஒதுக்கீடு.

கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதி ரூ30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்வு.

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் ஆடுகள்.

பால்வளத்துறைக்கு  ரூ121.60 கோடி ஒதுக்கீடு.

ரூ24.58 கோடியில் வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

ரூ 52.64 கோடியில் ஆற்றங்கரையோரங்களில் மரம் நடும் திட்டம்.

மதுரையில் ரூ45 கோடி செலவில் பால்பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.

நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள ரூ140 கோடி ஒதுக்கீடு

சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை மேம்படுத்த அரசு ஆர்வம் காட்டும்

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

தனபால், செயலாளர், தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம்:

‘‘அதிமுக, தேர்தல் அறிக்கையில் கரும்பின் விலை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது. விவசாய சங்கங்களும் ஒரு டன் கரும்புக்கு 3 ஆயிரத்து 500 முதல் நான்காயிரம் வரை கேட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. மாநில அரசின் பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கின்றன. அதைப் பெற்று தருவதற்கான அறிவிப்பும் இல்லை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை மத்திய அரசு பத்து சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது. அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.’’

நல்லசாமி, செயலாளர், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு:

‘‘உள்ளாட்சித் தேர்தலையும், இலவசங்களையும் மனதில் கொண்டே இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எந்தவித தொலைநோக்கும் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு சதவிகித அரசு ஊழியர்கள் மீது செலுத்தும் கவனம், 60 சதவிகிதம் இருக்கும் விவசாயிகளின் மீதும் அரசு செலுத்தவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் 6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை மேலும் கடனிலே தள்ளும். இதற்கு மாற்றாக, அரசு ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொள்வதற்கு சம்பள கமிஷன் இருப்பது மாதிரி, விவசாயிகளுக்கு விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்த வேண்டும்.’’

ஆறுபாதி கல்யாணம், பொதுச் செயலாளர், காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு:

‘‘ஆந்திர அரசு 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 95 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயத்துக்கு ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசு நீர்ப்பாசனத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு வேளாண்துறைக்கு குறைந்த தொகையே ஒதுக்கியிருக்கிறது. உற்பத்தி இலக்கு 147 லட்சம் மெட்ரிக் டன் என்று சொல்கிறது. 1971-ல் தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பு 62 லட்சம் ஹெக்டேர், 2014-ல் 47 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இப்படி விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும்போது உற்பத்தியை மட்டும் எப்படி அதிகரிக்க முடியும். பொதுவாக பட்ஜெட் போடும்போது, உற்பத்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயிகளின் நலனுக்குக் கொடுப்பதில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல விவசாயிகள் விளைபொருளுக்கு உற்பத்தி விலையோடு 50 சதவிகிதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்பதை நடைமுறைபடுத்தினாலே உரிய விலை கிடைக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்