Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close.

அதிக மகசூல் தரும் மானாவாரி ரகங்கள்...

அசத்தும் ‘நெல் ஆராய்ச்சி நிலையம்’துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

*நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த டி.கே.எம்-13 ரகம்.

*தேவைக்கேற்ப விதைநெல் கிடைக்கும்

*விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் கிடைக்கும்.

விதைநெல்லின் தரம், விதை உற்பத்தி, மானாவாரி சாகுபடி, நோய் தடுப்பு முறைகள் என விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாவட்டத்துக்கு ஓர் ஆராய்ச்சி மையம் என தமிழகம் முழுவதும் 32 ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை அருகிலுள்ள திரூர் பகுதியில் அமைந்திருக்கும் ‘நெல் ஆராய்ச்சி நிலையம்’ முக்கியமானதாக திகழ்கிறது.

மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் 1942-ம் ஆண்டு தமிழக அரசால் திரூரில் ‘நெல் பரிசோதனை நிலையம்’ தொடங்கப்பட்டது. பிறகு, 1981-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு ‘நெல் ஆராய்ச்சி மையம்’ என்று மாற்றப்பட்டது. ஆராய்ச்சிகளோடு விவசாயிகளுக்குப் பயிற்சியையும் அளிக்கும்விதமாக 2004-ம் ஆண்டு முதல் வேளாண் அறிவியல் நிலையம் தொடங்கப்பட்டு இதனுடன் சேர்ந்து இயங்கி வருகிறது.

ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு குறித்துப் பேசிய, அதன் தலைவர், முனைவர் அகிலா, ‘மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற, வறட்சியைத் தாங்கும் வகையில் நெல் ரகங்களை உருவாக்குதல், களர் மற்றும் உவர் நிலங்களுக்கேற்ற நெல்லை உருவாக்குவதல் போன்றவைதான் இம்மையத்தின் முக்கிய நோக்கங்கள். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியிடப்பட்ட டி.கே.எம் 6, 9, 13 ஆகிய ரகங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக விளங்குகின்றன.

முக்கியமாக வடகிழக்கு மண்டலத்துக்கேற்ப குலைநோய்க்கு எதிரான நெல் ரகங்களை உருவாக்க ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாதம்தோறும் விவசாயிகளுக்கு கருத்தரங்கம், நேரடி களப்பயிற்சி, வயல்வெளிச் செயல்விளக்கம், விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு, தொழில் முனைவோருக்கான பயிற்சி என பல்வேறு செயல்பாடுகளை விவசாயிகளுக்கு வழங்குகிறோம். 

பயிர்களில் பிரச்னை ஏற்படும் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட நிலங்களிலேயே விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம். மண் பரிசோதனை மற்றும் பயிர் பரிசோதனை என பல வகையான பரிசோதனைகள் செய்து விவசாயிகளுக்கு உதவியாக இந்த மையம் செயல்படுகிறது. 40 ஏக்கரில் மாதிரிப்பண்ணைகள், பரண்மேல் ஆடு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, நர்சரி பராமரிப்பு, மாடித்தோட்டம், மூலிகைத் தோட்டம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

விதைநெல் கிடைக்கும்!

எங்கள் மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் வகைகளில் மிக முக்கியமானது, டி.கே.எம்-13 ரகமாகும். ஒரு ஹெக்டேருக்கு 5,938 கிலோ மகசூலைக் கொடுக்கக்கூடியது. இதன் வயது 125-130 நாட்கள். இது காவிரி டெல்டா பகுதியில் தாளடி பருவத்துக்கும், இதர மாவட்டங்களுக்கு சம்பா பருவத்துக்கும் ஏற்றது. இந்த நெல் வகை பி.பீ.டி-5204 என்ற ரகத்துக்கு மாற்றாகவும், நோய்த்தாக்குதலுக்கு எதிராகவும் மகசூலைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, தூங்ரோ நோய்த்தாக்குதலை எதிர்க்கும் வகையில், இருப்பது இந்த ரகத்தின் மற்றொரு சிறப்பு. விவசாயிகள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் தேவைக்கு ஏற்ப விண்ணப்பித்து விதைநெல்லை வாங்கிக்கொள்ளலாம். இப்போது 5 டன் விதைநெல் விற்பனையாகி இருக்கிறது. விவசாயிகள் மத்தியில் இந்த ரக நெல் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வெளியிடும் விதைநெல்லினால் விவசாயிகள் இரண்டு மடங்கு மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடிகிறது. பூச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் விவசாயிகள் எங்கள் மையத்தை அணுகலாம். இங்குள்ள அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பிரச்னைகளைத் தீர்க்க தயாராக இருக்கிறார்கள்’ என்றார்.

தொடர்புக்கு,
நெல் ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 044-27620233, 27620383.


பயிற்சி கொடுக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வேளான்மை அறிவியல் நிலையம் பற்றி பேசிய அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, ‘‘இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வயல்வெளி ஆய்வு மூலம் புதிய ரகங்களைக் கண்டறிந்து அதற்கேற்ற புதிய தொழில்நுட்பத்தைக் உருவாக்கி, விவசாயிகளைப் பயனடையச் செய்வதே முக்கிய நோக்கம். எங்கள் பண்ணையில் பல வகைப் பயிர்களுக்கான செயல்முறை விளக்கத் திடல்களை அமைத்திருக்கிறோம். அதன் மூலம் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்து விளக்கமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால தொழிற்பயிற்சியும் அளித்து வருகிறோம். விவசாயிகள் எங்கள் மையத்தை அணுகினால், முழுமையான பயன்பெறலாம்.’’ என்றார்.


இதுவரை வெளியிட்டுள்ள ரகங்கள்!

1950-ம் ஆண்டு, டி.கே.எம். 1,2,3,4,5 ஆகிய ரகங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. 1952-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 115 நாள் வயதுடைய டி.கே.எம்-6 ரகமானது உலகளவில் பிரசித்திபெற்றது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் இந்த ரகத்தை தாய் வித்தாக பயன்படுத்தி,
ஐ.ஆர்-20, 30, 38, 40 ஆகிய ரகங்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, டி.கே.எம்-7 முதல் 13 வரை வெவ்வேறு ஆண்டுகளில் டி.கே.எம் ரகங்களை வெளியிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!
இயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டி ‘பசுமை விகடன்’...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close