‘மேக் இன் இந்தியா’ இதற்கு கிடையாதா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஆப்பிரிக்க கண்டத்திலிருக்கும் மொசாம்பிக் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பயணம் செய்தார். அப்போது, அந்நாட்டில் இந்திய பருப்பு ரகங்களைப் பயிர் செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கான பருப்பு இறக்குமதி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று நம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘மொசாம்பிக் நாட்டில் பயிர் செய்யப்படும் பருப்பு வகைகளின் சுவை காரணமாக, இந்தியாவில் அவற்றின் தேவை அதிகமாக உள்ளது’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார்.

ஆனால், ‘இறக்குமதி செய்யும் பருப்பு வகைகள், எந்த வகையிலும் சுவையில் வித்தியாசப்படவில்லை’ என்கிறார்கள், இறக்குமதியாளர்கள்.

இதுஒருபுறமிருக்க... நம்நாட்டு பருப்பு ரகங்களை மொசாம்பிக் நாட்டில் விளைவிப்பதற்குத் தேவையான தரமான விதைகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதி உதவியும் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அதிகாரபூர்வமான வட்டாரங்கள் சொல்கின்றன.

மொசாம்பிக் நாட்டுக்கு, விதையும் கொடுத்து, பணமும் கொடுத்துதான் பருப்பு வகையை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதை இந்தியாவிலேயே செய்திருக்கலாமே. நல்ல விதையும், பயிர் சாகுபடிக்குத் தேவையான நிதி உதவியும், உரிய வழிகாட்டலும் இல்லாமல்தானே இந்திய விவசாயிகள் மருகிக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு உரிய வகையில் கைகொடுத்தால், பல நாடுகளுக்கும் பருப்பு வகையை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு சாதனை படைப்பார்களே!

மூச்சுக்கு முந்நூறு தடவை ‘மேக் இன் இந்தியா’ பிரசாரம் செய்யும் நம் பிரதமர், இதையெல்லாம் அறியாதவராகவா இருப்பார்?!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்