அரை ஏக்கர்... 5 மாதங்கள்... 30 ஆயிரம் ரூபாய் லாபம்!

மனநிறைவான மகசூல் கொடுக்கும் மாப்பிள்ளைச் சம்பா!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தி.விஜய், ம.அரவிந்த்

*மேட்டுப்பாத்தியில் சாகுபடி

*குறைவான தண்ணீர் போதும்

*பொங்கல் சமைக்க ஏற்றது

*மதிப்புக் கூட்டினால் லாபம் அதிகம்

*அனைத்து வகை மண்ணும் ஏற்றது

ழை கிடைக்கும் பருவம், விளைபொருளுக்கான சந்தை வாய்ப்பு, பயிர்களின் சாகுபடிக்காலம்... எனப்பல்வேறு காரணிகளைக் கொண்டுதான் முற்காலத்தில் ஒவ்வொரு பயிருக்குமான பட்டம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் அனைத்துப் பயிர்களுக்குமே பொதுவான பட்டம் ஆடிப்பட்டம். பாரம்பர்ய ரக பயிர்கள் பலவும் பெரும்பாலும் இப்பட்டத்திலேயே சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற பட்டம் இது. ஆடி மாதத்துக்குப் பிறகு பருவமழை பெய்வது வழக்கம் என்பதால், இப்பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர், நம் முன்னோர். இறவைப் பாசன வசதியுடையவர்களும் இப்பட்டத்தில் பயிர் செய்யும்போது, தண்ணீர் செலவு குறையும். அந்த வகையில், விவசாயத்தில் ஆடிப்பட்டம் முக்கியமான பட்டமாக உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன். ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் மற்றும் மாப்பிள்ளைச் சம்பா ரக நெல் ஆகியவற்றின்  விதைப்புக்காக நிலத்தைத் தயார் செய்து கொண்டிருந்த வேளையில் அவரைச் சந்தித்தோம் நாம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், முருகன். இவர், 25.11.13-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

கைக்குத்தல் அரிசிப் பொங்கல்!

“புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வக்கோட்டை பக்கத்துல உள்ள பல்லவராயன்பட்டிதான் எனக்கு பூர்விகம். 30 வருஷத்துக்கு முன்னாடி கந்தர்வக்கோட்டை பகுதியில பங்குனி, ஆனி மாசங்கள்ல தொழுவுரத்தைப் போட்டு புழுதி உழவு ஓட்டி வெச்சுடுவாங்க. அப்பறம்  ஆடிப்பட்டத்துல மானாவாரியில மாப்பிள்ளைச் சம்பா ரக நெல்லை விதைச்சு விடுவாங்க. அந்த பகுதியில இதுக்கு ‘மட்டநெல்’னு பேரு. அடுத்துக் கிடைக்கிற மழையில பயிர் நல்லா வளர்ந்து வந்து மார்கழி 15 தேதி வாக்குல அறுவடைக்கு வந்துடும். அந்த நெல்லை அரைச்சு கைக்குத்தல் அரிசியாக்கி அதுலதான் தை மாசம் பொங்கல் வைப்பாங்க. பொங்கல் சுவையா இருக்கும். இப்போ, அதெல்லாம் மாறிப்போச்சு.

போர்வெல் வந்த பிறகு, பட்டம் எல்லாம் பார்க்கிறதில்லை. வீரிய ரக நெல்லைத்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்றாங்க. நானும் அப்படி மாறினவன்தான். ஆனாலும், பாரம்பர்ய வழக்கத்தைக் கைவிடக்கூடாதுங்கிறதால நாலு வருஷமா ஆடிப்பட்டத்துல மாப்பிள்ளைச் சம்பா விதைச்சு, அந்த அரிசியில்தான் பொங்கல் கொண்டாடிக்கிட்டு இருக்கேன். பொங்கல் சமயத்துல இந்த அரிசியை விற்பனையும் செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த முருகன் தொடர்ந்தார்.

ஆடிப்பட்டத்தில் அரை ஏக்கர் நெல்... அரை ஏக்கர் காய்கறி!

“இது குத்தகை நிலம்தான். எட்டு வருஷமா இங்கதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். மொத்தம் மூணு ஏக்கர். செம்மண்ணும் மணலும் கலந்த இருமண் பாடு. போர்வெல் மூலம்தான் பாசனம். நாலு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். ஆடிப்பட்டத்துல அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பாவையும், அரை ஏக்கர்ல கொடிவகை காய்கறிகளையும் சாகுபடி செய்றது வழக்கம். மீதி நிலத்துல வாழை, உளுந்து, கடலை, கீரை, வெண்டை, கத்திரி...னு மாத்தி மாத்தி சாகுபடி செய்வேன். என்கிட்ட மாடுகள் இல்லாததால, பக்கத்து விவசாயிகள்கிட்டதான் ஜீவாமிர்தம் தயாரிக்கத் தேவையான சாணம், மாட்டுச்சிறுநீரை இலவசமா வாங்குறேன்.

உழவே இல்லை!

இங்க உழவு ஓட்டுறதேயில்லை. மண்ணைக் கொத்தி புரட்டிப் போட்டு மேட்டுப்பாத்தி அமைச்சுதான் எல்லா பயிர்களையும் சாகுபடி செய்றேன். அதனால களைகளை சுலபமா கட்டுப்படுத்த முடியுது. மண்ணுல காற்றோட்டம் இருக்கும். வாய்க்கால்ல மட்டும்தான் தண்ணி பாய்ச்சுவேன். அதனால மேட்டுப்பாத்தியில் இருக்குற மண் இறுகாது. சணப்பு விதைச்சு மூடாக்கா போடுறதால, மேட்டுப்பாத்தியில இருக்குற மண் எப்பவும் பொலபொலப்பாவே இருக்கும்” என்ற முருகன், மாப்பிள்ளைச் சம்பா குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். 

ஆடியில் நடவு... மார்கழியில் அறுவடை!

“மாப்பிள்ளைச் சம்பாவுக்கு ஆடிப்பட்டம் பொருத்தமானது. ஆடி அமாவாசை அன்னிக்கு விதை விட்டுடுவேன். பதினஞ்சு நாள் கழிச்சு நாத்து எடுத்து நடவு செஞ்சுடுவேன். எப்படியும் தொடர்ந்து 10 நாளுக்கு ஒரு லேசான மழையாவது கிடைச்சுடும். அந்த ஈரப்பதம் பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்கும். ஐப்பசியில அடைமழை பெய்றப்போ, பயிர் நல்ல உயரமா வளர்ந்திருக்கும். அதனால, மழைத்தண்ணி தேங்கினாலும் பிரச்னையில்லை. கார்த்திகை 15-ம் தேதிவாக்குல  பூ பூத்து கதிர் பிடிக்கும். அப்ப மழை குறைஞ்சுடும். ‘கார்த்திகை பொறந்துட்டா கால் கோடை’னு பழமொழியே உண்டு. மார்கழி 15 வாக்குல  அறுவடைக்கு வந்துடும்.

போன ஆடி மாசம் அரை ஏக்கர்ல விதைச்சிருந்தேன். ரொம்ப நல்லா விளைஞ்சிருந்துச்சு. 10 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. ஒரு முறை ஆவணி மாசம் விதைச்சு பார்த்தேன். அந்த முறை 6 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. அதனால ஆடிப்பட்டம்தான் இந்த ரகத்துக்கு சரியா இருக்குது” என்ற முருகன், விற்பனை குறித்துச் சொன்னார்.

நெல், அரிசி, அவல், குருணை என விற்பனை!

“ஒரு மூட்டை நெல்லை, விதை நெல்லா கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 3 ஆயிரத்து 600 ரூபாய் கிடைச்சது. ஒரு மூட்டை நெல்லை, கைக்குத்தல் அரிசியாக்கினதுல 35 கிலோ அரிசி கிடைச்சது. அதை, கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சது. மூணு மூட்டை நெல்லை புழுங்கல் கைக்குத்தல் அரிசியாக்கினதுல 105 கிலோ அரிசி கிடைச்சது. அதுல 35 கிலோ அரிசியை  கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதி 70 கிலோ புழுங்கல் அரிசியை மெஷின்ல கொடுத்து, குருணையாக்கி விற்பனை செஞ்சேன். உப்புமாவுக்கு, கஞ்சிக்கும் குருணை நல்லா இருக்கும். இது மோட்டா ரகம்கிறதால நிறைய பேர் அரிசியை  விரும்பி வாங்கமாட்டாங்க. ஆனா, குருணை நல்லா விற்பனையாகும்.

70 கிலோ அரிசியை உடைச்சா 60 கிலோ குருணைதான் கிடைக்கும். கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதுல கிடைச்ச 10 கிலோ மாவை கிலோ 120 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,200 ரூபாய் கிடைச்சது.

5 மூட்டை நெல்லை அவலாக்கினதுல 200 கிலோ அவல் கிடைச்சது. கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 20 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. ஆக மொத்தம் 10 மூட்டை நெல்லை மதிப்புக் கூட்டி விற்பனை செஞ்சதுல 37 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல மொத்த செலவு 7 ஆயிரத்து 840 ரூபாய் போக 29 ஆயிரத்து 960 ரூபாய் லாபமா கிடைச்சது” என்ற முருகன் நிறைவாக,

மன நிறைவான வருமானம்!

“அரை ஏக்கர்ல நெல் விவசாயம் மூலமா இந்த வருமானம் எடுக்குறது ஓரளவு நிறைவான வருமானம்தான்.  ,பாரம்பர்ய ரகத்தை சாகுபடி செய்றோம். நஞ்சில்லாத அரிசியில பொங்கல் செஞ்சு சாப்பிடுறோம்கிற மனதிருப்தி இருக்கு. மத்த பயிர்கள்ல நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்குறதால கொஞ்சம் மெனக்கெட்டாலும் பரவாயில்லைனு இதை விடாம சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இப்போ பாரம்பர்ய ரகங்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிட்டு இருக்குறதால வருங்காலங்கள்ல விற்பனை வாய்ப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று நம்பிக்கையோடு சொல்லி விடைகொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்