பாராட்டு வாங்கித் தந்த ‘பசுமை’!

ஜி.பிரபு

சுமை விகடன் 10.07.2016 தேதியிட்ட இதழில் ‘ஜீரோ பட்ஜெட் மலைத்தோட்ட சாகுபடி’ என்ற தலைப்பில்... திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் மலைவாழை மற்றும் காய்கறிகளை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து வரும் முதல் தலைமுறை விவசாயி ராஜேஷ்கண்ணா குறித்து எழுதியிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து நம்மைத் தொடர்புகொண்ட ராஜேஷ்கண்ணா, “பசுமை விகடன் புத்தகத்துல இடம் பிடிச்சா இவ்வளவு புகழ் கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. ஒரு மூலையில இருந்த என்னை ரொம்ப உயரத்துல உக்கார வெச்சிருச்சு, பசுமை விகடன். பசுமை விகடன் வாசகர்கள் தொடர்ந்து எனக்கு போன் பண்ணிட்டே இருக்காங்க. தினமும் குறைஞ்சது நூறு பேராவது பேசிடுறாங்க. நிறைய பேர் எனக்கு வாழ்த்து சொல்றாங்க. பல பேர் விவசாயம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுக்கிட்டே இருக்குறாங்க.  எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை நானே சொல்லிடுவேன். இல்லாட்டி, எனக்கு வழிகாட்டுன நண்பர்களோட செல்போன் நம்பரைக் கொடுத்துடுவேன். வெளிநாடுகள்ல இருந்து கிட்டத்தட்ட நூறு அழைப்புகளுக்கு மேல வந்துடுச்சு. என்னோட வாழை, காய்கறிகளை சந்தைப்படுத்துறதுக்கும் நிறைய வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சந்தோஷப்பட்டார். 

தொடர்ந்து பேசிய ராஜேஷ்கண்ணா, “ஒரு நாள் மதியம் எனக்கு வந்த அழைப்பை எடுத்து பேசும்போது, ‘கவிஞர் உங்ககிட்ட பேசணும்கிறார்’னு ஒருத்தர் சொன்னார். நான் இணைப்பில் காத்துக்கிட்டிருந்தப்போ, ‘நான் வைரமுத்து பேசுறேன். மகிழுந்துல பயணம் செய்றப்போ பசுமை விகடனை வாசிச்சுட்டு இருந்தேன். அதுல உங்களோட விவசாயம் குறித்து படித்தேன். வாழ்த்துக்கள். நல்லா பண்ணுங்க”னு சொன்னார். எனக்கு புல்லரிச்சுப் போச்சு.

அடுத்த நாள் ஒருத்தர் போன் பண்ணி, ‘நான் கபாலி திரைப்படத்தோட உதவி இயக்குநர். பசுமை விகடன்ல உங்களைப் பத்தி படிச்சேன். உங்களோட இயற்கை  விளைபொருட்களை சந்தைப்படுத்த நான் ஒரு வெப்சைட் உருவாக்கித் தர்றேன். படம் ரிலீஸ் ஆனதுக்கப்பறம் உங்களை நேர்ல சந்திக்கிறேன்’னு சொன்னார். இது இல்லாம நிறைய அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்னு நிறைய வி.ஐ.பிக்கள் பேசிகிட்டே இருக்காங்க. அப்போதான் பசுமை விகடனோட பரந்து விரிந்த வாசகர் வட்டத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சிலாகித்துச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்