மரபணு மாற்றுக் கடுகு... உண்மையை மறைக்கும் ஆராய்ச்சி முடிவுகள்!

அனந்து (இயற்கை விவசாயம் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்)

பிடி பருத்தி, பி.டி கத்திரி என்று பிரச்னைகள் ஏற்கெனவே ஓடிகொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது பி.டி கடுகு விதையையும் இந்தியாவுக்குள் சந்தைப்படுத்தத் தயாராகி வருகின்றன, பன்னாட்டு விதை நிறுவனங்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கவே கூடாது என சூழலியல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்திவரும் நிலையில்... மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி கொடுக்க... ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு’ என்ற குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆனால், இந்தக்குழு, மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனை கவனத்தில் கொள்ளாமல், மரபணு மாற்றப்பட்ட விதைகளை சந்தைபடுத்தும் நிறுவனங்களுக்குத்தான் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. 

‘மரபணு மாற்றுப் பயிர்கள் சம்பந்தமாக நடந்த பரிசோதனைகளின் தரவுகளை பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அது நடைமுறை படுத்தப்படவில்லை. அதனால், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கவிதா குருகந்தி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பரிசோதனை விவரங்களைக் கேட்க... முழு விவரங்களையும் கொடுக்காமல் மேலோட்டமான விஷயங்களை மட்டும் கொடுத்துள்ளனர். உடனே, கவிதா குருகந்தி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர், “அந்தத் தகவலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தே ஆக வேண்டும்” எனக் காட்டமாகச் சொல்லியும் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘மரபணு அற்ற இந்தியாவுக்கான கூட்டமைப்பு’ மரபணு மாற்று கடுகு குறித்து... பல வழிகளில் திரட்டியிருக்கும் தகவல்கள், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்த பரிசோதனையில், மிகவும் கோரமான அறிவியல்பூர்வமான தரவு மோசடி நடந்துள்ளது. பரிசோதனை முடிவுகளை பலவாறு மாற்றியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் கவிதா குருகந்தி உள்ளிட்ட குழுவினர், சுற்றுசூழல் அமைச்சகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர், ‘உங்கள் தரப்பு நியாயத்தையும், மரபணு பொறியியல் ஒப்புறுதிக் குழுவினர் கேட்பார்கள்’ என உறுதியளித்தார்.

பிறகு, வேறு வழியில்லாமல்... கவிதா குருகந்தியைத் தொடர்பு கொண்ட மரபணுப் பொறியியல் ஒப்புறுதிக்குழு, கடந்த ஜூன் 20-ம் தேதியன்று வரச்சொல்லியது. அப்போதே, ‘7 பேர் கொண்ட குழு வருவோம். எங்களுக்கு 2 மணி நேரம் கொடுக்க வேண்டும்’ என்று எங்கள் குழு மூலமாக மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், நாங்கள் சென்றபோது, ‘மூவரை மட்டும்தான் அனுமதிப்போம், பத்து நிமிடங்கள்தான் பேசவேண்டும்’ என நிபந்தனை விதித்தார்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாததால், ‘7 பேரையும் அனுமதிக்கிறோம். 20 நிமிடங்கள் மட்டும்தான் பேசவேண்டும்’ என்றனர். கண்டிப்பாக இதுகுறித்த விஷயங்களைச் சொல்ல 20 நிமிடங்கள் போதவே போதாது. குறைந்த நேரத்தை எங்களுக்கு ஒதுக்கி ஏதோ தில்லுமுல்லு செய்யப்போகிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றவும் அவர்களைச் சந்திக்க மறுத்து... ஊடகவியலாளர்களைச் சந்தித்து பரிசோதனையில் நடந்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தினோம்.

 மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டுவரும் டெல்லி பல்கலைக்கழகம், அதற்காக பல கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மரபணு கடுகைக் கொண்டு வருவதற்கு, அவர்கள் சொல்லும் காரணம் அதிக மகசூல் என்பதுதான். ஆனால், 25% அளவே மகசூல் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. அதேசமயம், ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் உள்ள கடுகு ஆராய்ச்சி நிலையத்தில், பல ஒட்டு ரகங்களையும், பாரம்பர்ய ரகங்களையும் சோதனை செய்ததில் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே 100 % மேல் அதிக மகசூலை எடுத்துள்ளனர். சாகுபடி முறையை மாற்றி, நம்மிடம் உள்ள ரகங்களிலேயே இவ்வளவு கூடுதல் மகசூலை எடுக்கமுடியும் நிலையில்... ‘மரபணு மாற்றப்பட்ட கடுகின் அவசியம் என்ன?’ என்பதுதான் எங்களது கேள்வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்