யானைகளின் கடைசிச் செய்தி!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கோயம்புத்தூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், ‘யானைகளின் வழித்தடங்களை மறித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள், காடுகள் அழிப்பு இவையெல்லாம்தான் இதற்கு முக்கியக் காரணம்’ என்று வேதனைப்படுகிறார்கள், சூழல் ஆர்வலர்கள்!

உலகில் பல்லுயிர் வளம்மிக்க எட்டு இடங்களில், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இந்த மலைதான் ‘யானைகளின் சொர்க்கம்’ என்று காட்டுயிர் வல்லுநர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக நீலகிரி, ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் இருக்கின்றன.

ஒரு விலங்கு, தான் வாழும் இடத்தின் சூழலைத் தொடர்ந்து மாற்றியமைத்தால் அதை ‘ஆதார உயிரினம்’ என்பார்கள். தான் இருக்கும் இடத்தில் மரங்களை உடைத்துப் போடுவது, அடர்ந்த புதர்களை மிதிப்பது யானைகளின் வேலை! இதனால் அந்தப் பகுதிகளில் புதிய புல்வெளிகள் உருவாகின்றன; மான், மயில்... எனப் பலவித உயிரினங்கள் நடமாடி, உயிர் வாழும் நிலை ஏற்படுகின்றது. இதனால் யானைகளும் ஆதார உயிரினமே!

இயற்கையாக இறந்த யானையை, பிணந்தின்னிக் கழுகுகள் தொடங்கி, நரி, கழுதைப்புலி, செந்நாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் பலவும் உண்டு உயிர் வாழும். இப்படி பல்லூயிர்களுக்கும் நெருக்கமாக உள்ள யானைகளின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்து வருவதுதான் வேதனை!
யானை ஒன்று இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தால், ‘மனிதர்களே... நீங்கள் என்னை மட்டும் கொல்லவில்லை. கோடிக்கணக்கான உயிர்களையும் சேர்த்தேதான் கொலை செய்கிறீர்கள். அதோடு உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்துக்கும் வேட்டு வைக்கிறீர்கள்’ என்பதுதான் அது நமக்குச் சொல்லிச் செல்லும் கடைசிச் செய்தி!

நாம் என்ன செய்யப்போகிறோம்?

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்