தொடர்வோம், வளர்வோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் என்பது, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வந்தது. ஆனால், நினைவில் வாழும், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர், முன்னோடி இயற்கை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்... போன்றவர்களால் இன்று, இயற்கை விவசாயம் என்கிற நல்விதை, விருட்சமாக வளர்ந்து வருகிறது.

ஏறத்தாழ அழிவின் விளிம்பில் இருந்த சிறுதானியங்கள், இன்று ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்கூட பிரதான உணவாக மாறியுள்ளன. கறுப்பு, வெள்ளை என்று கலப்பின மாடுகள் மட்டுமே, கண்ணில் பட்டுக் கொண்டிருந்த நிலை மெள்ள மாறி, காங்கேயம், உம்பளச்சேரி, மலைமாடுகள்... போன்ற இந்த மண்ணுக்குச் சொந்தமான மாடுகளை வளர்ப்பது பெருகத் தொடங்கியுள்ளது. விதைகளுக்காக நிறுவனங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம் உருமாறி, பாரம்பர்ய விதை வங்கிகளை விவசாயிகளே தொடங்கி, நல்ல விளைச்சல் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், இயற்கை விவசாயம் பற்றிய வாக்குறுதிகளைச் சேர்க்க, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்தத் தடவை போட்டிப் போட்டுக்கொண்டு களத்துமேடுகளில் சுற்றி வருகின்றன’ என்கிற செய்தி... தமிழகத்தில் இயற்கை விவசாயத்தின் தாக்கம் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

பூரிக்க வைக்கின்றன இத்தகைய மாற்றங்கள்!

இதில் பசுமை விகடனும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்திருப்பதையும்... பங்களித்து வருவதையும் பத்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திரும்பிப் பார்த்து நெகிழ்கிறோம்.

இத்தனை நல்ல மாற்றங்கள் அனைத்துக்கும் பக்கபலமாக இருந்து தோள்கொடுத்துவரும் வாசகர்களாகிய உங்களோடு... இப்புனிதப் பயணத்தைத் தொடர்வோம், வளர்வோம்!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்