‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்குறுந்தொடர்த.ஜெயகுமார்

ன் உழைப்பால் விளைவிக்கப்பட்டதில் பிறருக்கு தானமளித்தது போக, மீதியைச் சாப்பிடு’ என்று உபதேசித்த சீக்கிய மதகுருவான குருநானக் தேவின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள், ‘பசுமைப் புரட்சி’யை உயர்த்திப் பிடித்த பஞ்சாபியர்கள். தங்கள் தேவையைக் கடந்து, இந்தியாவுக்கே கோதுமை, நெல் என உற்பத்தி செய்து பல ஆண்டுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பசுமைப் புரட்சியின் எதிர்விளைவாக, மாநிலம் முழுக்கவே பரவலாக புற்றுநோயாளிகளைச் சுமந்து கொண்டிருப்பதும்... அந்த பூமியே ரசாயனங்களின் தாக்குதலால் நஞ்சாகிக் கிடப்பதும்... கொடுமை!

‘ஒவ்வொரு மனிதனின் தேவைக்கானதை இந்த பூமி வழங்குகிறது. ஆனால், அவன் பேராசைக்கு எதையும் வழங்குவதில்லை’- என்பது, மகாத்மா காந்தியின் வரிகள். ஆம், இந்திய மக்களின் உணவுத் தேவைக்கு ஏற்ப, இந்திய நிலங்கள் உணவை அளித்துத்தான் வந்தன. முழுக்க முழுக்க பாரம்பர்யமான இயற்கை முறை விவசாயத்தின் மூலமே இதை சாதித்து வந்தனர் இந்தியர்கள். ஆனால், ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் அதைத் தொடர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சூறையாடல்களால் விளைந்த பஞ்சங்களைக் காரணம் காட்டித்தான், 1960 களில் இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உயர்விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகங்கள் விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘அதிக விளைச்சல், அதிக வருமானம்’ என்ற ஆசை விவசாயிகளிடையே தூண்டப்பட்டது. அதனால், பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த இந்திய பாரம்பர்ய விவசாய முறையைக் கைவிட்டு, புதிய விவசாய முறைக்கு விவசாயிகள் மாறினார்கள். இந்த புதிய விவசாய முறையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு வேளாண் பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும், வேளாண் துறையும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கின.

‘உணவு உற்பத்தி’ என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ என்னும் ரசாயன வேளாண் முறைக்கு முதலில் இலக்கான மாநிலம்... பஞ்சாப். இங்கேதான் பசுமைப் புரட்சியானது முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. உற்பத்தியும் பெருக்கப்பட்டது. ஆனால், அதன்  எதிர்விளைவாக... மண்ணின் வளம், நீர்நிலைகள் கெட்டு, நோய்கள் பெருகியுள்ளன. போதுமான வருமானம் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘இந்தியாவின் உணவுக் கிண்ணம்’ என்று வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலம், இன்று புற்றுநோயின் புகலிடமாக மாறிக்கிடக்கிறது. பஞ்சாபின் சில மாவட்டங்களில் மனிதர்களின் ரத்தத்தைப் பரிசோதித்தபோது, அதில் பூச்சிக்கொல்லிகளின் மூலக்கூறுகள் கலந்திருப்பதாக டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்