மாடித் தோட்டத்தில் மரபணு விதைகளா? பரவும் வதந்தி...

விளக்கம் சொல்லும் இயக்குநர்!த.ஜெயகுமார், படங்கள்: ப.சரவணகுமார்

ர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித் தோட்டத்துக்கான உபகரணங்கள் சென்னை, கோயம்புத்தூர் மாநகரங்களில் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அண்மையில், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் மூலம் சுமார் 50,000 மாடித் தோட்ட உபகரணங்கள், சிறப்பு மையங்கள்  மூலம் சென்னையில் விற்பனை செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ‘‘விதைகள் அனைத்தும் வீரிய மற்றும் மரபணு மாற்று விதைகள். இவை இந்தோ-அமெரிக்க கம்பெனி தயாரிப்புகள், அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள், இவை உண்ணத் தகுந்தவை அல்ல’’ என்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பேராசிரியர் முனைவர் செல்வராஜ் பேசும்போது, “இரண்டு வெவ்வேறு ரகங்களை கலப்பு செய்து உருவாக்குவதுதான் வீரிய ஒட்டு ரகங்கள் (ஹைபிரீட்) என்று அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் ஒருமுறைதான் விதைப்புக்கு நன்றாக வளரும். மறுமுறை செடி மூலம் கிடைக்கும் விதைகளை, விதைக்கும்போது எதிர்பார்க்கும் மகசூல் நமக்கு கிடைக்காது.

இதை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. 1960-ம் ஆண்டிலிருந்தே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதை சாப்பிடுபவர்களுக்கு எந்தவிதமான பாதிப்போ, பிரச்னையோ ஏற்பட்டதில்லை. நெல், மக்காச்சோளம், துவரை, சூரியகாந்தி, காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட விதைகள், வீரிய ஒட்டு ரகங்களாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விதைகளை சிலர் மரபணு மாற்று விதைகள் என்று சொல்கின்றனர். அரசின் அனுமதி இல்லாமல் மரபணு மாற்று விதைகளை பல்கலைக்கழகம் மூலம் உருவாக்க முடியாது. விதைகளை, பூஞ்சணத் தாக்குதல் பாதிப்பிலிருந்து காக்கவே பூஞ்சணக்கொல்லி கலந்த நிறமேற்றப்பட்ட விதைகள் பயன்படுத்தப்பபடுகின்றன. இதை தண்ணீரில் ஊற வைத்து பயன்படுத்தும்போது எந்தவித பாதிப்பும் இருக்காது” என்றார்.

‘நீங்களே செய்து பாருங்கள்’... என்ற மாடித் தோட்ட திட்டத்தைச் செயல்படுத்தி வரும் சென்னையில் இருக்கும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் சித்ரசேனனிடம் பேசியபோது, “2013-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி இந்த மாடித்தோட்ட திட்டத்துக்கு வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு மட்டுமில்லை. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன. ஏனென்றால், 100 % இயற்கை முறை சாத்தியமில்லை. அதனால்தான் 90% இயற்கை, 10% ரசாயன முறையும் கலந்து செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இது அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை முறையில் மாடித்தோட்டத்தை அமைத்து வெற்றிபெறுபவர்களின் சதவிகிதம் குறைவு. இதையும் மீறி இயற்கையில் செய்ய விரும்புவர்களுக்கு அதற்கான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்கள் இயற்கை முறையிலும் தோட்டம் அமைத்துக் கொள்ளலாம்.

இதில் 7 வகையான விதைகள் வழங்கப்படுகின்றன. வெண்டை, அரைக்கீரை, தண்டுக்கீரை, அவரை இந்த நான்கு விதைகளும் வேளாண் பல்கலைக்கழகத்திடமிருந்து வாங்கப்படுகிறது. மற்ற விதைகள் வெளியிடங்களில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விதைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு ரக காய்கறி விதைகள் வழங்க வாய்ப்பில்லை. ஆனால், நாங்கள் வழங்கும் விதைகள்  ‘மரபணு மாற்று விதைகள்’ என்று தகவல் பரவுகிறது. அது உண்மையில்லை” என்றார்.

‘‘100% இயற்கையில் சாகுபடி செய்யலாம்!’’

“மாடித் தோட்டம் 100 சதவிகிதம் இயற்கையில் சாத்தியம் இல்லை” என்ற இயக்குநரின் விளக்கத்துக்கு, “இயற்கை முறையில் 100 சதவிகிதம் சாத்தியம்” என்கிறார் பல்லாவரம் அடுத்த பம்மலில் இயற்கை முறையில் மாடித் தோட்டம் வைத்திருக்கும் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ‘பம்மல்’ இந்திரகுமார்.

 “நான் 30 வருடங்களாக மாடித் தோட்டம் மூலமா வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செஞ்சிக்கிட்டு வர்றேன். மக்கிய சாணம், மண்புழு உரம், மீன் அமிலம், வீட்டுக் கழிவுகள் இதுதான் என் மாடித் தோட்டத்துக்கான இடுபொருள்கள். நாட்டுக் காய்கறி விதைகள் மூலம் வெண்டை, கத்திரி, அவரை, சுரைக்காய், கீரைகள்னு பயிர் செய்றேன். பலபேருக்கு இயற்கை முறையிலே மாடித் தோட்டம் போடுறதுக்கு பயிற்சிகளும் கொடுத்துக்கிட்டு வர்றேன். அவங்களும் கூட இயற்கையில்தான் தோட்டம் போட்டு காய்கறிகளை உற்பத்தி செய்றாங்க. ஆரோக்கியமான காய்கறிகளை சாப்பிட்டு, ஆரோக்கியமா இருக்காங்க. அதிகாரிகள் எந்த பயிற்சியும், முயற்சியும் இல்லாம, எதையாவது சொல்லணும்ங்கிறதுக்காக சொல்றாங்க” என்று சாடினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick