காலத்தால் அழியாத திருப்பாலத்துறை நெற்களஞ்சியம்..!

வெயில், மழை தாங்கும் கட்டடக்கலை!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்பொங்கல் சிறப்பிதழ்

ரு சில ஆண்டுகளிலேயே சிதைந்து போகும் நவீனக் கட்டுமானங்களுக்கு இடையில்... 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கல்லணை, 1,000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரியகோயில் போன்றவை இன்னமும் காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கின்றன. அதற்குக் காரணம்... கட்டுமானத்தில் அனுபவமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும்தான். தன்னலமற்ற பொதுச் சிந்தனைகள் மட்டுமே மேலோங்கி இருந்ததால்தான் இவை சாத்தியமாயின.

அணைகள், கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்ச காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளைச் சேமித்து வைக்கும் களஞ்சியங்களும் நம் முன்னோர்களின் அறிவைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. தானியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைப்பது... எறும்புகள் கைக்கொள்ளும் தொழில்நுட்பம். இயற்கை மூலம் கற்றதை, தங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக் கொண்டனர், நம் முன்னோர்.

500 ஆண்டுகள் கடந்த பிறகும், இம்மியளவு கூட  ஈரக்கசிவு இல்லாமல் கம்பீரமாக காட்சியளிக்கின்றன, அப்படிப்பட்ட களஞ்சியங்கள். அவற்றில் ஒன்றுதான், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள திருப்பாலத்துறை ஸ்ரீபாலைவனநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள நெற்களஞ்சியம். மிகப் பழமையான இக்களஞ்சியம், ஆசிய அளவில் புகழ்மிக்க செங்கல் அடுக்குமுறை நெற்களஞ்சியம். வெளி, உள் பூச்சு இல்லாமல் 500 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருந்து நூற்றுக்கணக்கான புயல், மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும் சந்தித்து சமாளித்து வருகிறது, இந்த நெற்களஞ்சியம்.

‘’தொடர்ச்சியா கனமழை பேஞ்சப்பக்கூட, இதுக்குள்ள லேசான ஈரப்பதத்தைக்கூட பார்க்க முடியலை” என வியக்கிறார், இக்கோயிலின் கணக்கர் சங்கரமூர்த்தி.

“வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் ஏராளமான ஆய்வாளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள் இந்த நெற்களஞ்சியத்தைப் பார்க்கிறதுக்காகவே வர்றாங்க. ஆசிய நாடுகளில் மிகவும் பழமையான, பிரமாண்டமான, சிதிலமடையாத ஒரு சில நெற்களஞ்சியங்களில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொல்லியல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து, இதை பாதுகாத்து வருது. இந்த நெற்களஞ்சியத்தின் உயரம் 36 அடி. சுற்றளவு 84 அடி. இதன் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேற்பகுதி கூம்பு வடிவத்திலும் இருக்கும். இதன் கீழ்பகுதி, நடுப்பகுதி, மேல்பகுதியிலும்  கதவுகள் இருக்கு. நெல்லை எளிதாக கொட்டுறதுக்கும் எடுக்கிறதுக்கும்தான் இந்தக் கதவுகள். இது மூவாயிரம் கலம் (சுமார் 90 ஆயிரம் கிலோ) கொள்ளளவு கொண்டதுனு கோவில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கு.

25 கிராமங்களுக்கான களஞ்சியம்!

சப்பட்டை வடிவிலான செங்கற்களால இதை கட்டியிருக்காங்க. சுண்ணாம்பு நீர், கடுக்காய், தேன், முட்டை, வெல்லம் கலந்து உருவாக்கப்பட்ட கலவையைப் பயன்படுத்தி கட்டியிருக்காங்க. சிவன் சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் இடையே உள்ள பகுதியில் கலவை தயாரிப்பு நடைபெற்றதற்கான சுவடு இப்பவும் இருக்கு. வட்டவடிவில் கருங்கற்களைப் பதித்து, ஆட்டுக்கல் போல் அமைத்து, மாடுகளைக் கொண்டு செக்கு மாதிரி சுற்ற வைத்து கலவை தயாரிப்பு நடந்திருக்கும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. திருப்பாலத்துறை, அன்னுக்குடி, நல்லூர், சத்தியமங்கலம், உம்பளப்பாடினு 25 கிராமங்கள்ல விளைவிக்கப்பட்ட நெல்லில் ஒரு குறிப்பிட்ட்ட அளவு இந்த நெற்களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது” என்றார், சங்கரமூர்த்தி.

இது குறித்து சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், தஞ்சாவூர் ‘சரஸ்வதி மஹால்’ நூலக தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன். “வேளாண் விளைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான இடமாகவும் கோயில்கள் இருந்துள்ளன. வெள்ளம் மற்றும் வறட்சிக் காலங்களில் ஊர் முழுவதும் பயிர்கள் பாதிக்கப்பட்டால், கோயில்களில் சேமிக்கப்பட்ட தானியங்களைதான் விதைநெல்லாகப் பயன்படுத்தி சாகுபடியைத் தொடர்வார்கள். அதனால்தான் நெற்களஞ்சியங்களை வலுவான பாதுகாப்பு அம்சங்களோடு அமைத்திருக்கிறார்கள். திருப்பாலத்துறை நெற்களஞ்சியம் மிகவும் நுட்பமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. 

மழைநீர் சுவரில் விழாது!

இது, கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெது வெதுப்பாகவும் இருக்கும். வெளிப்புற தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தித் தடுப்பதால், தானியங்களில் பூஞ்சணம் ஏற்படாது. நெல்மணிகள் முளைப்பு விடாது. எலி உள்ளிட்ட விலங்குகளால் பாதிப்புகள் உருவாகாமல் பாதுகாக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. வெயில், காற்று, மழையின் தாக்கத்தைத் தடுக்கும் வகையில், இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அடுக்குகள் உள்ளன. இதன் உச்சியில் விழும் மழைநீர், சுவரில் விழாத வகையில்’ கொசிலி’ (பிதுக்கம்) என்ற அமைப்பு உள்ளது. இதன் கீழ்ப்புற அடுக்கிலும் கொசிலி உள்ளது. இந்த நெற்களஞ்சியம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டது. இதைத் தாங்கி நிற்கக்கூடிய ஆதரவுத் தூண்களும் இதில் உள்ளன. இதில் உள்ள செங்கல் மிகவும் உறுதியானது. எளிதில் உடைக்க முடியாது. ஆறரை மாதங்கள் மண்ணைப் புளிக்க வைத்து, முட்டை, கடுக்காய் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பொருட்களைக் கலந்து, நன்கு வேக வைத்து செங்கல் தயாரித்திருக்கிறார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இவற்றை ஒட்ட வைக்க, மயிரிழை அளவுதான் கலவை பயன்படுத்தியிருக்கிறார்கள். தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் (கி.பி 1600-1634) ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவரின் முன்முயற்சியில் இந்த நெற்களஞ்சியம் உருவாக்கப்பட்டது” என்றார், மணிமாறன்.

கட்டடம் கட்ட சிமெண்ட், மணல் கலந்த கலவை  மட்டும் போதாது... அதோடு பொதுநலமும் அடங்கினால்தான் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதற்கு உதாரணம், இந்த நெற்களஞ்சியம்.

திருப்பாலத்துறை நெற்களஞ்சியம், வீடியோ பதிவைப் பார்க்க... https://youtu.be/3_ZegtR6eKM

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick