விவசாயிகளை விழுங்கும் பி.டி. எமன்...

கர்நாடக விவசாயிகளின் கண்ணீர் கதை!தூரன் நம்பி

‘விளைச்சல் சரியில்லாமல் போனதால், பருத்திக்கு விலை கிடைக்கவில்லை. அதனால், அறுவடை செய்யாமல் இருக்கிறார்கள், கர்நாடக மாநில ராய்ச்சூரு  (ரெய்ச்சூர்) மாவட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். சில விவசாயிகள் தீயிட்டு அழித்து, வேறு பயிர் சாகுபடிக்கு மாறி வருகிறார்கள்’ என்ற செய்தியை நாளிதழில் படித்துவிட்டு அதிர்ந்து போனேன்.

வெங்காய விலை வீழ்ச்சி... தக்காளி விலை சரிவு... விளைந்த கரும்புகளை வெட்ட கரும்பு ஆலைகள் மறுப்பதால், கரும்புத் தோட்டம் தீயிட்டு எரிப்பு... இப்படித்தானே இதுவரை செய்திகளைப் பார்த்து இருக்கிறோம். ‘வெள்ளைத் தங்கம்’ என வர்ணிக்கப்படும் வணிகப் பயிரான பருத்திக்கு இந்த நிலையா... என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்பகுதி நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘அது உண்மைதான்... அவர்கள் சாகுபடி செய்திருந்தது மரபணு மாற்றப்பட்ட (பி.டி) பருத்தி’ என்று சொன்னார்கள்.

‘காய்ப்புழுக்கள்தான் பருத்தி விவசாயிகளை காலி செய்கிறது. பி.டி தொழில்நுட்பம் காய்ப்புழுவுக்கு எமன். எனவே, காய்ப்புழுக்களை ஒழித்து விவசாயிகளைக் காக்கும் அசகாய சூரன் பி.டி.பருத்தி’ என்று சொல்லித்தானே, இந்தியாவில் கால் பதித்தது பி.டி பருத்தி. ஆனால், இன்று விவசாயிகளுக்கு எமனாக மாறியல்லவா பயமுறுத்துகிறது. நெஞ்சில் எழுந்த கேள்வியோடு, அடுத்த நாளே கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர், சாமரசமாலி பாட்டிலுடன் சேர்ந்து ராய்ச்சூருக்குப் புறப்பட்டேன். கர்நாடகாவின் வடகிழக்குப் பகுதியில், துங்கபத்ரா, கிருஷ்ணா நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஒரு வறண்ட பிரதேசம்தான் ராய்ச்சூரு. கடும் வெப்பம் சூழ்ந்த நெருப்புப் பிரதேசம். இப்பகுதியில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சில சமயங்களில் 50 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை இருக்குமாம்.
முதலில் சென்ற கிராமம், ராய்ச்சூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கடகம் தொட்டி. அருகில் நதி இருந்தும் நீர் எட்டிப் பார்க்காத வறண்ட பூமி. மழையும், கிணற்று நீரும் மட்டுமே விவசாயத்துக்கான நீராதாரங்கள். காலங்காலமாக இப்பகுதியில் பருத்திதான் பிரதான விவசாயம். மானாவாரி, இறவை இரண்டிலும் பஞ்சம் இல்லாமல் பருத்தி விளையும் பிரதேசம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்