உஷார்...! உஷார்...! பூச்சி, நோய் பரவுது...!

பசுமைக்குழு

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தென்மேற்குப் பருவமழை நேரத்தில், நெற்பயிரில் பூச்சி, நோய்களைத் தவிர்க்க சில ஆலோசனைகளை முன் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,

“தென்மேற்குப் பருவமழை, சரியாக ஜூன் மாதம் ஆரம்பித்துள்ளது. நிலத்தடி நீரில் பாசனம் செய்யும் நெல் விவசாயிகள் நாற்றுவிடும்போதும், நடவுவயல்களிலும் பூச்சித்தாக்குதல் மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும். இலைப்பேன், இலைச்சுருட்டுப்புழு, நெல் கூட்டுப்புழு மற்றும் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. நோயைப் பொறுத்தவரை இலைப்புள்ளி நோய் தென்படும்.

நெற்பயிர்களைத் தாக்கும் நோய்களைத் தடுக்க, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். நெற்பயிரில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, 20 சென்ட் நாற்றங்காலுக்கு, அடியுரமாக வேப்பம் பிண்ணாக்கு பனிரெண்டரை கிலோ இடவேண்டும். நாற்றங்காலிலிருந்து நாற்றைப் பறிப்பதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பு, 20 சென்ட் நாற்றங்காலுக்கு ஒன்றரை கிலோ சூடோமோனஸ் மற்றும் 30 கிலோ தொழுவுரம் என்ற அளவில் நாற்றங்காலில் இடவேண்டும். நடவு செய்வதற்கு முன்பாக, நெல்வயலின் ஓரமாக 25 சதுரமீட்டர் அளவுள்ள இடத்தில் இரண்டரை சென்டி மீட்டர் அளவு தண்ணீரைத் தேக்கி இரண்டரை கிலோ சூடோமோனஸைக் கரைத்து விடவேண்டும். இந்த தேங்கிய நீரில், நடவுக்கு முன்பு 30 நிமிடங்கள் நாற்றுகளை ஊறவைத்து, பிறகு நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலில் விளக்குப்பொறிகளை அமைத்து அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச்சாறு 5% தயாரித்து தெளிக்கலாம். 

தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைந்தால், வெப்பநிலை கூடலாம். அந்த நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ மற்றும் பலவகையான பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகும். மஞ்சள் ஒட்டும்பொறி வைத்து பூச்சிகளைப் பிடிக்கலாம். தேவைப்பட்டால், வேப்பங்கொட்டைச்சாறு 5% அல்லது 25 கிராம் மீன் எண்ணெய் சோப்பை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலமும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அதிகமழை இல்லாத பகுதிகளில் மாவுப்பூச்சி தாக்க வாய்ப்புள்ளது. இப்பூச்சிகளை இயற்கை ஒட்டுண்ணிகளை உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம்’’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்