இயற்கை விவசாய தினம்... எப்போது?

அனைவருக்கும் பசுமை வணக்கம்

அண்மையில் நடைபெற்ற, ‘சர்வதேச யோகா தின’த்தின்போது, ‘‘ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சர்வதேச தினங்களை அறிவித்துள்ளது. அவற்றில் எதுவும், யோகா தினத்துக்கு சமமானதாக இல்லை. யோகா தினம், உலகம் தழுவிய அளவில் பேரியக்கமாக மாறியுள்ளது. இந்தியா விலைமதிக்கமுடியாத மரபுச்செல்வத்தை உலகுக்கு அளித்துள்ளது’’ எனப் பெருமையுடன் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

யோகா என்ற உன்னதமான வாழ்வியல் கலையை உலகுக்குப் பரிசளித்துள்ள இந்தியாவுக்கு, இன்னுமொரு முக்கியபொறுப்பும் உள்ளது.

ஆம், சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதமுடியும். உடல் என்ற சுவரைக் கட்டி எழுப்ப அடிப்படையானது யோகா மட்டுமல்ல நஞ்சில்லா உணவும்தான். யோகாவை மட்டும் செய்துகொண்டு, ரசாயன பூச்சிக்கொல்லி விஷம் தெளித்த உணவுகளை உண்டால், நிச்சயம் நூறு சதவிகிதம் பலன் கிடைக்காது. இதனால்தான், யோகாவைக் கற்றுக் கொடுக்கும், அமைப்புகள்கூட, நஞ்சில்லாத இயற்கை உணவும் அவசியமானது எனத் தொடர்ந்து பேசிவருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்திய மண்ணில், பாரம்பர்ய இயற்கை விவசாயம் பரந்து விரிந்து செழித்திருந்தது. இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் இங்கு ஏராளம் கொட்டிக் கிடந்தன. ஆனால், கடந்த அறுபது ஆண்டுகளில் ரசாயன வியாபாரிகளால் இவையெல்லாம் திட்டமிட்டே சிதைக்கப்பட்டன.

இந்தியாவின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை மூலம், ‘சர்வதேச இயற்கை விவசாய தினம்’ அறிவிக்கப்பட்டால், நிச்சயம், இயற்கை விவசாய உணவுப் பொருட்கள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு பல்கி பெருகும். இதன் மூலம் இயற்கை விவசாயம், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுக்கவே சென்று சேரும். அந்தவகையில், யோகா போலவே மற்றும் ஓர் அரிய பரிசை உலகுக்கு அளித்த பெருமை இந்தியாவுக்கு வந்து சேரும்.

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்