பாலாறு... கோளாறு!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘ரயில் நீர்’... ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பலருக்கும் அறிமுகமான ஒன்று. இந்தியாவின் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் இந்த பாட்டில் குடிநீர், செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் பாலாற்றுப் படுகையில் உள்ள பாலூரில் இருந்து எடுக்கப்படுகிறது. ரயில் நீர் மட்டுமல்ல, ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்தில் பாலாறு நுழையும் இடம் தொடங்கி, கடலில் கலக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் வரை குடிநீர், விவசாயம் என்று அனைத்தையும் பூர்த்தி செய்து வருவது இந்தப் பாலாறுதான். சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் தாகம் தணிக்கப்படுவதும் இந்த ஆற்றின் புண்ணியத்தில்தான்.

வறண்டே கிடக்கும் பாலாறு, இப்படித் தண்ணீரை அள்ளிச் சொரியும் ஆச்சர்யத்துக்குக் காரணம்... அதன் படுகை முழுக்க வற்றாத ஊற்றுகள் நிறைந்திருப்பதுதான். எப்போதாவது பெய்யும் ஓரிரு மழையை வைத்தே, இந்த ஊற்றுகள் அட்சயப்பாத்திரங்களாக மாறி, உயிர்களையும் பயிர்களையும் காக்கின்றன. ஆனால், இந்த சொற்ப மழைநீருக்கும் வேட்டு வைக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஆந்திர அரசு.

அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால்தான் ஒரு சாதனையாக கோதாவரி நதியை கிருஷ்ணா நதியுடன் இணைத்து, கிருஷ்ணா நதிப் படுகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், தமிழக விவசாயிகளுக்கு மட்டும் வேட்டு வைக்கிறார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் சாதி, மதம், மாநிலம், நாடு என்று பிரித்துப் பார்க்காமல், தொழுதுண்டு பின் செல்லப் போவது எந்நாளோ?

-ஆசிரியர்    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்