மரபணுத் தொழில்நுட்பத்துக்குத் துணை போகும் மத்திய அரசு..!

கொந்தளிக்கும் இயற்கை ஆர்வலர்கள்அடுத்த தாக்குதல்... மரபணு மாற்றுக் கரும்பு... த.ஜெயகுமார், படம்: என்.ஜி.மணிகண்டன்

த்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றுக் கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. மத்திய வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, இந்த மரபணு மாற்றுக் கரும்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனைக்குப் பிறகே ஏற்றுக்கொள்வோம்!

‘‘மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவி வரும் கடும் வறட்சியைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கரும்பை வறட்சி காலத்தில் தாங்கும் திறனுள்ளதாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகவும் இந்த மரபணு மாற்றுக் கரும்பு இருக்கும். இந்தக் கரும்பினால் விளையும் பலன்களை உரிய ஆதாரங்களோடு மட்டுமே ஏற்றுக் கொள்வோம். மரபணு மாற்றுக் கரும்பும் ஒரு சோதனை முயற்சியே. இந்த சோதனையின் முடிவு எப்படி இருந்தாலும், இதற்குமேல் மத்தியச் சுற்றுச்சூழல் துறையின் மரபணு மாற்று இன்ஜினீயரிங் அப்ரைசல் குழு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பு அனுமதித்தால் மட்டுமே அது பயன்பாட்டுக்கு வரும். முன்பு பி.டி. கத்திரிக்காயின் சோதனைக்குப் பிறகு வர்த்தகரீதியாகப் பயன்படுத்த இந்த அமைப்பு அனுமதிக்கவில்லை. அதை போலவேதான், இதையும் பல சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆலை முதலாளிகளுக்கு சாதகமான ஆராய்ச்சி!

மரபணு மாற்றுப் பயிர்கள் சார்ந்த மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து,

‘கரும்பு என்பது பணப்பயிரே கிடையாது. கரும்பு பயிரிட்ட இடங்களில் எல்லாம் ஆலை முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள். விவசாயிகள் யாரும் வளரவில்லை. நம் மண்ணின் நிலத்தடி நீரையும், விவசாயிகளின் உழைப்பையும் சுரண்டியதுதான் கரும்பின் சாதனை. கர்நாடகாவில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மகாராஷ்டிராவில் பெரும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால்தான் மரபணுமாற்றுக் கரும்பைக் கொண்டு வருகிறோம், என்றால், தப்பான பயிரில் திரும்பவும் மாற்றம் கொண்டு வருவது நம் கண்ணை நாமே குத்திக் கொள்வது போன்றதுதான். சரத் பவார் ஏற்கெனவே மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு துணை போகிறவர்தான். அவரோடு சேர்ந்து இந்த ஆராய்ச்சிப் பணிகளைச் செய்வது ஆலை முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும்.

நாட்டு ரகங்களுக்கே நல்ல விற்பனைச் சந்தை உள்ளது!

கரும்பில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது தேவையற்ற வேலை. அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதற்கு முன்பு பருத்தியிலும் இதைதான் சொல்லி பி.டி. பருத்தி கொண்டு வந்தார்கள். இன்று பி.டி. பருத்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையில், வர்த்தகமே பாதிக்கப்பட்டு நிற்கிறது. மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் நாட்டுப் பருத்தி விதைகளைத் தேடிப் போய்கொண்டிருக்கிறது. பருத்தியில் மட்டுமில்லை, விவசாயத்தில் நாட்டு ரகங்களுக்கு நல்ல விற்பனைச் சந்தை உருவாகி வருகிறது. அதை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வருகிற தொழில்நுட்பத்தில் போய் விழுந்து கொண்டிருக்கிறோம். இதில் நமக்கு தோல்வியே கிடைக்கும். சரத் பவார் போன்றவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னைகள் எல்லாம் விவசாயிகளுக்குத்தானே. மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை விஞ்ஞானிகள் விளக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் பலனடையும் தொழில்நுட்பமும், திட்டங்களுமே தற்போதைய தேவை. இதை ஆட்சியாளர்கள் முதலில் உணர வேண்டும்’’ என்றார் ஆவேசமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்