காத்திருந்து... காத்திருந்து..!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘எது வேண்டுமானலும் காத்திருக்கலாம், விவசாயம் காத்திருக்கக் கூடாது’ என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னதாகப் பெருமையோடு சொல்வார்கள்.

இதோ... இன்றைய பிரதமர் நரேந்திர மோடியும், ‘விவசாயிகள்தான் இந்த நாட்டின் பெருமை. அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன்... விவசாயிகள் பிரச்னைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று அக்கறை பொங்க சொல்லி விட்டார்.

ம்... நாடு சுதந்திரம் பெற்றது முதல், ‘விவசாயிகள்தான் முக்கியம்’, ‘விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று பெருமை பேசுவது இன்று வரையிலும் ஓயவில்லை. உண்மையாகவே, விவசாயத்தின் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இருந்திருந்தால், கடந்த ஓராண்டில் மட்டும் 3,228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார்களே!

சந்தடி சாக்கில், அண்மையில் வெளியான மத்திய அரசின் பட்ஜெட்டை, ‘விவசாயிகளுக்கான பட்ஜெட், விவசாயிகளின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் பட்ஜெட்...’ என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘வழக்கம்போலவே விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்குத்தான் இதன் பலன் சென்று சேரும்’ என்று வேளாண் பொருளியல் நிபுணர்கள் சிலர் கதறுவது காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது!

ம்... 60 சதவிகிதத்துக்கும் மேல் விவசாயிகள் வாழும் நாட்டில், காலகாலமாக காத்திருப்பில்தான் இருக்கிறது விவசாயம்!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்