மரங்களைக் காத்து பூமியை மீட்போம்!

பசுமைக் குழு

1970-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியன்று, உலக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 2020-ம் ஆண்டு 50-வது ஆண்டு கொண்டாட்டம் என்பதால்… அதற்குள், 780 கோடி மரங்களை நடுவதற்கு பூமி தின அமைப்பு முடிவெடுத்துள்ளது. அதாவது பூமியில் மக்கள் தொகைக்கு ஈடாக மரங்களை நடுவதாகும். மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பூமி தினத்தை முன்னிட்டு, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்ச்சியில் பேசிய சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ், “பூமியில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த மர அழிவு, சூழலுக்கு இழைக்கப்படும் பெரிய வன்முறை.  மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன.  நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. மரங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெட்டப்படுவதை நிறுத்துவதும் நிறைய மரங்களை நடுவதுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

மரங்களை நடுவதன் மூலம் நீண்ட கால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை, உறுதி செய்ய முடியும். அதிக மரங்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்களிடையே இருக்கும் கவனச்சிதறல், மிகை துறுதுறுப்பு ஆகியவையும் மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மரங்களை நடுவதால் இன்னும் பலவிதமான சுற்றுச்சூழல், பொருளாதார, சமூக, மனோதத்துவ ரீதியான நன்மைகளும் கூட விளைகின்றன. கட்டடம் மற்றும் வீடுகளுக்கு அருகேயுள்ள மரங்கள் வெப்பத்தைக் குறைக்கின்றன. ஒரு நாள் மட்டும் பூமி குறித்து பேசி முடித்து விடாமல்… தொடர் பணியாகச் செய்ய வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick