உணவுக்கு சன்ன ரகம்... ஏற்றுமதிக்கு திரட்சி ரகம்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்த பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். கடந்த இதழில் இடம்பிடித்திருந்த பச்சைப்பயறு குறித்த தகவல்களின் தொடர்ச்சி இங்கே...

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையை சேர்ந்த விழுப்புரம் விற்பனைக்குழுவின் செயலாளர் சங்கர் பச்சைப்பயறு குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ்நாட்டில் பரவலாக திண்டுக்கல், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பச்சைப்பயறு பெருமளவு பயிரிடப்படுகிறது. குறிப்பாக, காரைக்காலில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக, பச்சைப்பயறு 55 நாள் முதல் 60 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இதில் கோ-4, கோ-5, கே.எம்-2, வம்பன்-2, வம்பன்-3, கோ-8, கோ-7 எனப் பல ரகங்கள் உள்ளன. விழுப்புரம் பகுதிகளில் முன்பிருந்தே அதிகம் விளையக்கூடிய ரகம் கே.எம்-2 ரகம்தான். இப்போது வம்பன்-2, வம்பன்-3 மற்றும் கோ-8 ஆகிய ரகங்களும் பரவி இருக்கின்றன. இவற்றில் சிறந்தது, கோ-8 ரகம். இது 55 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடும். விழுப்புரம் பகுதிகளில்... இது தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் விதைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 2013-14-ம் ஆண்டில் 600 டன் அளவு பச்சைப்பயறு விற்பனையாகி உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 3 கோடியே 47 லட்சம் ரூபாய். (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது).

2014-15-ம் ஆண்டில் 800  டன் அளவு விற்பனையாகி உள்ளது. இதனுடைய மதிப்பு 4 கோடியே 70 லட்சம் ரூபாய்.  (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது).

நடப்பு ஆண்டான 2015-16-ம் ஆண்டில் விழுப்புரம் சந்தைக்கு 450 டன் வரை வரத்தாகியுள்ளது. இதனுடைய மதிப்பு 2 கோடியே 70 லட்சம் ரூபாய். (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது).
பச்சைப்பயறு குறைந்த அளவே உணவுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிகளவில் மூலிகை மருந்துகளுக்கும், மருத்துவ ரீதியான பயன்பாடுகளுக்கும்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வியாபாரிகள் வம்பன்-2, வம்பன்-3 மற்றும் கோ-5 ஆகிய ரகங்களை அதிகமாக ஏற்றுமதிக்காக வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த பச்சைப்பயறைக் காயவைத்து, பொக்கு, குப்பை இல்லாமல் சுத்தமாக எடுத்து வந்தால் நல்ல விலை கிடைக்கிறது. பச்சைப்பயறு நிறம் மாறாமல் இருக்க வேண்டும். தவிர உடையாமல் இருக்க வேண்டும்.  உணவுத்தேவைக்கான பயறு சன்னமாக இருந்தால்தான் மக்கள் விரும்புவர். வம்பன் ரகம் சற்று திரட்சியாக இருக்கும். அதனால், இது அதிகம் ஏற்றுமதியாகிறது.

மானாவாரி சாகுபடியில்... தொடர்ந்து 15 நாள் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் மகசூல் குறையும். அதனால், பச்சைப்பயறை இறவையில் சாகுபடி செய்வது நல்லது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது” என்றார், சங்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்