கை கொடுக்கும் கைவரச்சம்பா...

பாடில்லாமல் மகசூல் தரும் பாரம்பர்ய ரகம்! 30 சென்ட்... 600 கிலோ நெல்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

*30 சென்ட் நிலத்தில் 10 மூட்டை மகசூல்

*சிவப்பு நிற அரிசி

*அனைத்து மண்ணிலும் வளரும்

*வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி வளரும்

*145 நாள் வயது

*பூச்சி, நோய் தாக்குதல் குறைவு

*தாளடி, சம்பா பட்டங்களுக்கு ஏற்றது

யற்கை விவசாயத்துக்கு மாறும் நெல் விவசாயிகளில் பெரும்பாலானோர் பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்வது வழக்கம். அதனால்தான் காலத்தால் கைவிடப்பட்ட  பல அரிய நெல் ரகங்கள் தற்போது புத்துயிர் பெற்று பரவலாகி வருகின்றன. அந்தவகையில், கைவரச்சம்பா என்ற பாரம்பர்ய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டம், செட்டிப்பத்து கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ ராமமூர்த்தி.

களத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ராமமூர்த்தியைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... தனக்காக கொண்டு வந்திருந்த வெல்லம் கலந்த அவல் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்ற ராமமூர்த்தி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“இது கைவரச்சம்பாவில் செஞ்ச அவல். இது நல்ல சுவையா இருக்கும். இந்த ரக அரிசியில் சமைச்ச சாதம் நல்லா கமகமனு வாசனையாவும் ருசியாவும் இருக்கும். இதோட பழைய சோறு கூட அருமையா இருக்கும். நாங்க இந்த அரிசிக் கஞ்சியைத்தான் தினமும் குடிக்கிறோம். மூணு வருஷமா கொழுக்கட்டை, அதிரசம், பொங்கல், புட்டு... இந்த அரிசியிலதான் சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்” என்று அரிசி பெருமை சொன்ன ராமமூர்த்தி தொடர்ந்தார்.

பாரம்பர்ய ரகங்களில் அதிக மகசூல் கொடுக்கும் ரகம்!

“நாங்க பாரம்பர்ய விவசாய குடும்பம். அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அப்போ இருந்தே விவசாயத்துக்கு வந்துட்டேன். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. மணல் கலந்த களிமண் பூமி. ஒரு ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். ஆரம்பத்துல வீரிய ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சோம். இப்போ, ஏழு வருஷமா மாப்பிள்ளைச் சம்பா, சிகப்பு கவுனி, பூங்கார், சொர்ணமசூரி, கருடன் சம்பா...னு பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டும் சாகுபடி செஞ்சிட்டு இருக்கோம். எல்லா ரகங்களுமே இயற்கை விவசாயத்துல அற்புதமா விளையுது. இந்த எல்லா ரகங்களையும் விட கைவரச்சம்பாவுல அதிக மகசூல் கிடைக்குது. மத்த ரகங்கள்ல 18 மூட்டையில் இருந்து 25 மூட்டை ( 60 கிலோ மூட்டை) வரைதான் கிடைக்கும். கைவரச்சம்பாவில் 33 மூட்டை வரை மகசூல் கிடைக்குது. அதனால மூணு வருஷமா இந்த ரகத்தை அதிகளவுல சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.

இந்த வருஷம், 30 சென்ட் நிலத்துல கைவரச்சம்பா, 20 சென்ட் நிலத்துல மாப்பிள்ளைச் சம்பா, 20 சென்ட் நிலத்துல சிகப்பு கவுனி, 10 சென்ட் நிலத்துல காட்டுயானம், 10 சென்ட் நிலத்துல கருங்குறுவை, 10 சென்ட் நிலத்துல கருடன் சம்பானு சாகுபடி செஞ்சேன். மாப்பிள்ளைச் சம்பாவில்  5 மூட்டை, சிகப்பு கவுனியில் நாலரை மூட்டை, மற்ற ரகங்கள் ஒவ்வொண்ணுலயும் 2 மூட்டைனு மகசூல் கிடைச்சுது. எல்லாத்தையுமே விதைநெல்லாத்தான் விற்பனை செய்றேன். கைவரச்சம்பாவில் 10 மூட்டை மகசூல் கிடைச்சுது. இதை அவல், அரிசினு மதிப்புக் கூட்டியும் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற ராமமூர்த்தி தனது சாகுபடி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்