ஏற்றம் தரும் எலுமிச்சை!

இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்...மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி25 ஆண்டுகள் தொடர் மகசூல், ஏக்கருக்கு 200 செடிகள்2-ம் ஆண்டில் இருந்து காய்ப்பு, 1 மரத்தில் 3 ஆயிரம் பழங்கள்

னைத்துப் பருவங்களிலும் விலை கிடைக்கக்கூடிய விளைபொருட்களில் ஒன்று எலுமிச்சை. இந்த பழப்பயிர், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நலப்பயிராகவும் இருந்து வருகிறது. அதனால்தான் பழப்பயிருக்கு மாறும் விவசாயிகளில் பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது, எலுமிச்சை. அந்த வகையில், 21 ஆண்டுகளாக எலுமிச்சை சாகுபடியில் நல்ல லாபம் பார்த்து வருகிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்துள்ள ஆயப்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.குழந்தைசாமி.

பவானி நதி நீர் பாசனத்தில் மஞ்சள், கரும்பு, மரவள்ளி, தென்னை, எலுமிச்சை என பசுமைக் கட்டி செழித்துக் காட்சியளிக்கிறது, குழந்தைசாமியின் பண்ணை. பொன்னிற பந்துகளைக் குவித்து வைத்ததுபோல் இருந்த எலுமிச்சைக்குவியலில் இருந்து காய்களை தரம் பிரித்துக் கொண்டிருந்த குழந்தைசாமியிடம் பேசினோம்.

“இதுதான் எனக்கு சொந்த ஊர். 14 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. எல்.பி.பி. வாய்க்கால் தண்ணீர்லதான் பாசனம். அதில்லாம ரெண்டு கிணறும் இருக்கு. செம்மண் கலந்த ஓடை மண். தண்ணீர் தேங்கி நிற்காத வடிகால் வசதி கொண்ட பூமி. அதனால, என்ன பயிர் போட்டாலும் நல்லா  விளைஞ்சு வரும். அஞ்சரை ஏக்கர் நிலத்துல மஞ்சள், மரவள்ளி, கரும்புனு மாத்தி மாத்தி வெள்ளாமை செய்வேன். 6 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. ரெண்டரை ஏக்கர் நிலத்துல எலுமிச்சை இருக்கு. எல்லாமே ஒட்டுரக எலுமிச்சை. நட்டு 21 வருஷம் ஆச்சு. எலுமிச்சை தவிர மத்த வெள்ளாமைக்கு ரசாயன உரம்தான் பயன்படுத்துறேன். போன 2 வருஷமா எலுமிச்சையை மட்டும் இயற்கை முறையில பராமரிக்கிறேன்” என்று முன்னுரை கொடுத்த குழந்தைசாமி தான் எலுமிச்சை விவசாயத்துக்கு வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

கல்யாண வீட்டில் கண்டெடுத்த பயிர்!

“கல்யாணத்துக்காக ஒரு கிராமத்துக்கு போயிருந்தேன். அந்த கல்யாணத்துல எல்லோருக்கும் எலுமிச்சை சர்பத் கொடுத்ததோட வந்தவங்க எல்லாருக்கும் எலுமிச்சை பழங்களையும் கொடுத்தாங்க. அந்த கல்யாண வீட்டுக்காரர் எலுமிச்சை விவசாயி. அதனாலதான் தாராளமா எலுமிச்சையைக் கொடுத்தார். அப்போ, உள்ளூர்காரர் ஒருத்தர், ‘இவர் தெளிவான எலுமிச்சை விவசாயி. 3 ஏக்கர்ல எலுமிச்சை நட்டிருக்காரு. அதுல கிடைச்ச லாபத்துலதான் அவரோட ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தையும் நடத்தியிருக்கார்’னு சொன்னார். அப்பவே எனக்கும் எலுமிச்சை சாகுபடி மேல ஆசை வந்துடுச்சு. ஒரு மாசம் கழிச்சு அந்த கல்யாண வீட்டுக்காரரைப் போய் பார்த்து பேசினப்போ, எலுமிச்சைத்தோட்டத்துக்கு கூட்டிப்போய் ஆலோசனைகளைச் சொன்னார்.

அவர் சொன்ன மாதிரியே, சிவகங்கை மாவட்டம், நேமம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில ரெண்டரை ஏக்கருக்கு தேவையான 500  ஒட்டு ரக நாத்துக்களை வாங்கிட்டு வந்து நட்டுட்டேன். நட்ட ரெண்டாவது வருஷத்துல காய்ப்புக்கு வந்திச்சு. இப்ப வருஷம் ரெண்டு போக மகசூல் எடுத்துட்டு இருக்கேன்” என்ற குழந்தைசாமி தொடர்ந்தார். 

 

ஆரம்பத்தில் 500... 4-ம் ஆண்டில் 5000!

“காய்க்கத்தொடங்குனப்போ ஒரு செடியில் 500 பழங்கள் கிடைச்சது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு நாலு வருஷத்துக்குப் பிறகு ஒரு செடியில் இருந்து 5 ஆயிரம் பழங்கள் வரை கூட கிடைக்குது. நாலாம் வருஷத்துல இருந்து பதினஞ்சாம் வருஷம் வரைக்கும் நல்ல மகசூல் கிடைச்சது. அப்பறம் மகசூல் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது. இப்போ கொஞ்சம் கொஞ்சமா பழைய மரங்களை எடுத்துட்டு புது கன்னுகளை நட்டுட்டு இருக்கேன். சராசரியா ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 3 ஆயிரம்  பழங்கள் பறிச்சுட்டே இருக்கலாம். ஒரு ஏக்கர்ல இருந்து 6 லட்சம் பழங்கள் கிடைச்சுடும். ஒரு பழத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் கிடைச்சாலும், ஏக்கருக்கு 6 லட்சம் நிச்சயம் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர் எலுமிச்சையில் இருந்து வருஷத்துக்கு சராசரியா 15 லட்ச ரூபாய் வருமானம் வரும். இடுபொருள், ஆள் கூலி, பராமரிப்பு எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் போனாலும் மீதி 12 லட்ச ரூபாய் லாபம்தான்.

எலுமிச்சை என்னிக்குமே கிராக்கி உள்ள சரக்குங்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. தோட்டத்துலேயே வியாபாரிகள் வந்து வாங்கிக்கிறாங்க. நாம சந்தைக்குக் கொண்டு போனா கொஞ்சம் கூடுதல் விலை கிடைக்கும். திண்டுக்கல், திருச்சி, புளியங்குடி சந்தைகள்ல நல்ல விலை கிடைக்கும்” என்றார் குழந்தைசாமி.

நிறைவாக, “எதேச்சையா எலுமிச்சை விவசாயத்துக்கு வந்தேன். இத்தனை வருஷமா தொடர்ந்துட்டு இருக்கு. ‘பசுமை விகடன்’தான் என்னை இயற்கைக்கு மாத்திச்சு. இயற்கைக்கு மாறின இந்த ரெண்டுவருஷத்துல நிறைய மாற்றம் தெரியுது. முன்னாடி 1 கிலோவுக்கு 25 எலுமிச்சை பிடிக்கும். இப்ப 17 எலுமிச்சை பழங்களே ஒரு கிலோ எடை இருக்கு. அதே மாதிரி சாறும் அதிகமா இருக்கு. அதனால, படிப்படியா எல்லா பயிர்களையுமே இனி இயற்கை முறையிலதான் வெள்ளாமை செய்யப்போறேன். இன்னும் சில வருஷத்துல ‘முழு இயற்கை விவசாயி’னு பேர் எடுத்துடுவேன்” என்று நம்பிக்கையுடன் சொன்ன குழந்தைசாமி, பழங்களை தரம் பிரிப்பதில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
குழந்தைசாமி,
செல்போன்: 97870-32932.



மூலிகைப் பூச்சிவிரட்டி!

வேப்பிலை, எருக்கிலை, நொச்சி இலை, பீநாரி சங்கு, ஆவாரம்பூ, சோத்துக்கற்றாழை  ஆகியவற்றில் தலா 10 கிலோ அளவில் எடுத்து வெட்டித் துண்டுகளாக்கி 100 லிட்டர் தண்ணீரில் 2 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கை தனியாக ஊற வைக்க வேண்டும். பிறகு, இலைகள் அனைத்தையும் அரைத்து பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்த சாற்றோடு, பிண்ணாக்கு கரைசலைச் சேர்த்து கலக்க வேண்டும். 500 மில்லி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

சாகுபடி முறை

எலுமிச்சை சாகுபடி குறித்து குழந்தைசாமி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் நடவு செய்ய 200 நாற்றுக்கள் தேவைப்படும். தற்போது ஒரு நாற்று 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 15 அடி இடைவெளியில் 1 கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். கட்டிகள் இல்லாத செம்மண் மற்றும் தொழு உரம் இரண்டையும் சரிசமமாக கலந்து முக்கால் அடி அளவுக்கு குழிக்குள் கொட்ட வேண்டும். பிறகு, நாற்றுகள் உள்ள பைகளின் அடிப்பகுதியை கிழித்துவிட்டு, நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழிகளை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டும்தான் பாசனம் செய்யவேண்டும். வாரம் இருமுறை  பாசனம் அவசியம். 

15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் இட வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். முறையாகப் பராமரித்தால் எலுமிச்சையில் 25 ஆண்டுகளுக்கு தொடர் மகசூல் கிடைக்கும்.

200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்து, 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலந்து, மாதம் ஒருமுறை செடிகளுக்கு கொடுத்து வந்தால்... வேர் அழுகல், வேர்க்கரையான் போன்ற வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.

செடிகள் வளரும் பருவத்தில் இலைவெட்டுப்புழுக்கள் தாக்கி இலைகளை கடித்து சேதாரம் செய்யும். மாதம் ஒரு முறை அதிகாலையில் செடிகள் நன்கு நனையும்படி மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளித்து வந்தால்... புழுக்கள் வராது. தவிர, சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி பூச்சி ஆகியவையும் வராது.

பறிப்பில் கவனம்!

எலுமிச்சை மரங்களில் முள் இருப்பதால் காய்களை கவனமாகப் பறிக்க வேண்டும். ஆங்கில ‘எஸ்’ வடிவ ‘கம்பி கொக்கி’ பொருத்தப்பட்ட  நீண்ட கம்புகள் மூலமாக காய்களைப் பறிக்க வேண்டும். பழங்களை மரத்தில் கனிய விடக்கூடாது. பழுக்கத்தொடங்கியதும் பறித்து விட வேண்டும். பழங்களின் அளவுக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

எலுமிச்சையில் மதிப்புக் கூட்டல்

குழந்தைசாமியின் மகன் பிரபு. பொறியியல் பட்டதாரியான இவர், குவைத் நாட்டின் எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தவர். தற்போது குவைத் பணியை விட்டு விட்டு, நண்பர்களோடு சேர்ந்து வேளாண் மதிப்புக்கூட்டல் தொழிலில் இறங்கவுள்ளார். 

“சமீபத்துல எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் நாங்க எலுமிச்சை ஜூஸ் கொடுத்தோம். நாங்களே ஜூஸ் தயாரிச்சு பாட்டில்கள்ல ஊத்தி எல்லாருக்கும் கொடுத்தோம். அதை எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்க. அப்பதான் ஜூஸ் தயாரிச்சு விற்பனை செய்ற ஐடியா வந்தது. ஒரு கிலோ பழத்துல இருந்து ஜூஸ் தயாரிச்சு விற்பனை செய்தா கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு மேல சம்பாதிக்க முடியும்னு கணக்கு போட்டு பார்த்தோம். அதனாலதான் நண்பர்களோட சேர்ந்து எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கிற நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவு செஞ்சேன். அதுக்கான வேலைகள் இப்போ நடந்துட்டுருக்கு” என்கிறார், பிரபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick