துலுக்காணி சோளம்...

காணாமல் போன அற்புத ரகம்... கண்டு கொள்ளுமா பல்கலைக்கழகம்?ஜி.பழனிச்சாமி

சுமைப் புரட்சியின் விளைவாக வழக்கொழிந்து போன பயிர்களில் ஒன்று ‘துலுக்காணி சோளம்’ என்ற மக்காச்சோள வகைப்பயிர். கேழ்வரகு, சோளம், தினை, வரகு, கம்பு உள்ளிட்ட பாரம்பர்ய ரகங்களோடு விவசாயிகள் இந்த மக்காச்சோள ரகத்தையும் சாகுபடி செய்திருக்கிறார்கள். இதைத்தான் வேகவைத்து சாப்பிடுவார்கள். ஆனால், இப்பயிர் தற்போது வழக்கொழிந்து போய் விட்டது. கால்நடைத் தீவனத்துக்குப் பயன்படும் வீரிய ரக மக்காச்சோளம்தான் பெரும்பாலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இந்த துலுக்காணி சோளம் குறித்த விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லை என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

இதுகுறித்துப் பேசிய, கோயம்புத்தூர், பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி, “மானாவாரி சிறுதானியங்கள் சிறப்பா இருந்தபோதே ‘துலுக்காணி சோளம்’ என்கிற பெயரில் ஒரு  மக்காச்சோள ரகத்தை விவசாயிகள் பயிரிட ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல, வாய்க்கால் வரப்புனு ஓரக்கால் வெள்ளாமையாத்தான்  இருந்துச்சு. இதை, புரட்டாசிப் பட்டத்துல மானாவாரியா விதைப்போம். அப்போலாம் பருவமழைக்குக் குறைவே இருக்காது. ஒரு களை எடுத்துவிட்டுட்டா போதும்... கரும்பு போல வளர்ந்து நிக்கும் துலுக்காணி. கார்த்திகை மாசத்துல கதிரெல்லாம் பால் புடிச்சு வளரும். அப்பவே கதிருகளை ஒடிச்சு , உறை உரிச்சு பச்சையாகவே தின்போம். அவ்வளவு ருசியா இருக்கும். 100 நாள்ல நல்லா விளைஞ்சுடும். அதை வேக வெச்சு தின்போம். சின்னக்குழந்தை கூட சாப்பிடலாம். ஆனா, இப்போ இருக்குற வீரிய சோளத்தை வேக வெச்சு கூட சாப்பிட முடியாது. அரைச்சு மாட்டுத்தீனியாத்தான் பயன்படுத்த முடியும்.

துலுக்காணி சோளத்துல தோசை, உப்புமானு சாப்பிடுவோம். அதேபோல அதை காயவெச்சு திரும்பவும் விதைக்க முடியும். அதனால விதைக்கும் அலைய வேண்டியதில்லை. ஆனா, பசுமைப்புரட்சி சமயத்துல வீரிய ரகத்தை அறிமுகப்படுத்தி, இதையும் ஒழிச்சுட்டாங்க. இதைப் பத்தி பல்கலைக்கழத்துல கேட்டா தெரியாதுங்கிறாங்க.

ஏற்கெனவே ஒரு முறை நான் சின்ன வெங்காய விதை கேட்டு பல்கலைக்கழத்துக்குப் போனேன். ஆனா, ‘அப்படி விதையெல்லாம் கிடையாது. வெங்காயத்தையே நடவு பண்ணுங்க’னு ஆணித்தரமா சொன்னாங்க. அப்பறம் நான் தேடி அலைஞ்சு, கடலூர் பகுதி விவசாயிகள் கிட்ட வெங்காய விதையை வாங்கிட்டு வந்தேன். இப்போ பல்கலைக்கழகமே வெங்காய விதையை வெளியிட்டிருக்கு. கொஞ்சம் முயற்சி எடுத்து... தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்தான்,  பாரம்பர்ய துலுக்காணி சோளத்தை  மீட்டுக் கொண்டு வரணும்” என்றார்.

இதுகுறித்து, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மக்காச்சோள ஆராய்ச்சி பிரிவின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். ரவிகேசவனிடம் கேட்டபோது. “மக்காச்சோளத்தில் பாரம்பர்ய ரகம் எல்லாம் கிடையாது. துலுக்காணி சோளம் பத்தி எங்களுக்குத் தெரியாது. நாங்கள், ‘ஒரு வழி கலப்பின விதை’களைத்தான் வெளியிடுறோம்.  இப்போது, கோ-6 என்கிற ரகம் விவசாயிகள்ட்ட புழக்கத்தில் இருக்கு. ஏக்கருக்கு 4 டன் வரை மகசூல் கொடுக்கும். இறவைக்கு ஏற்றது. இதற்கு பட்டம் கிடையாது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் எங்க வேணும்னாலும் பயிரிடலாம்” என்றார்.

இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பொன்.கந்தசாமி பேசும்போது, “பல்கலைக்கழகத்தில் விவசாயம் சம்பந்தமான தொழில்நுட்ப சந்தேகங்களைக் கேட்கும் போது, வெகு சிலரைத் தவிர யாரும் அக்கறை காட்டுவதில்லை. அவங்க  படிச்சப்போ இருந்த தகவல்களைத்தான் சொல்றாங்க. 10 வருஷத்துக்கு முன்பெல்லாம் பல்கலைக்கழகத்துக்கும் விவசாயிகளுக்கும் உண்டான உறவு பலமா இருந்திச்சு. இப்போ அது இல்லை.பல்கலைக்கழகத்துக்கும் விவசாயிகளுக்குமான  இணைப்பு அறுந்துட்டே வருது.

முன்பெல்லாம், மாதத்தில் ஒரு நாளில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகள் கொண்ட கூட்டம் நடத்துவாங்க. அதில் கலந்துகொள்ளும் உழவர் விவாதக்குழுவினர்  தங்களுக்குள்ள சந்தேகங்களைக் கேப்பாங்க. அதுக்கு அந்த துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பதில் சொல்லுவாங்க. நேருக்கு நேர் தீர்வு கிடைச்சுடும். இப்ப அதெல்லாம் சுத்தமா இல்லை. பல்கலைக்கழகத்துல நடவடிக்கை எடுத்து, திரும்பவும் விவசாயிகளுக்கு ஆதரவா செயல்படுற சூழ்நிலை உருவாகணும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்