விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதவிதமான கருவிகள்...

பன்றி, முயல், ஆடு வளர்ப்பு... நிகரன், படங்கள்: ப.சரவணகுமார்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவது போல... கால்நடை வளர்ப்பாளர்களுக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிப் பண்ணை, அவ்வப்போது பண்ணைக் கருவிகளை வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர்.

“நாங்கள் கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பல உதவிகளை விவசாயிகளுக்குச் செய்து வருகிறோம். இப்போது புதிய பண்ணைக் கருவிகளை வடிவமைத்து இருக்கிறோம். அவை, அனைத்துமே விவசாயிகளின் கருத்துக்களின் அடிப்படையில் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் விவசாயிகள் எளிதில் உயோக்கிக்க முடியும். தவிர, எளிதில் வாங்கக்கூடிய விலையிலும் உள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாகவும், ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளுக்கு உபயோகப்படக் கூடியதாகவும் இருக்கின்றன. எங்களுடைய அனுபவத்தில் ஏற்பட்ட தாக்கமே இப்போது கருவிகளாக மாறி நிற்கின்றன.

கால்நடைத்துறையில் என்னென்ன வெற்றிடங்கள் ஏற்பட்டனவோ... அவை அனைத்தையும் நிறைவு செய்யும் வகையில் புதிய பண்ணைக்கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை 5 லட்ச ரூபாய்க்கு மேல் கருவிகள் மூலம் வருமானம் ஈட்டி இருக்கிறோம். இதை பெரிய இயந்திர மையமாக மாற்றுவதற்கு, அரசு எங்களுக்கு ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறது. வேலையாட்கள் தேவையைப் பூர்த்தி செய்யவும், பண்ணையை எளிதான முறையில் சுத்தமாகப் பராமரிக்கவும் பண்ணைக்கருவிகள் உதவுகின்றன. மேலும் எங்கள் கண்டுபிடிப்புகள் தொடரும்” என்றார்.

தற்போது புழக்கத்தில் உள்ள நவீன பண்ணைக் கருவிகள் குறித்து, பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவர் மற்றும் பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் விளக்கினார்.

பன்றிகளுக்கான வெப்பமூட்டும் கருவியுடன் கூடிய பிரத்யேக குட்டி ஈனும் கொட்டில்: இந்தக் கொட்டிலில், தாய்ப் பன்றி நடமாடத் தேவையான இட வசதியோடு, தண்ணீர் மற்றும் தீவனத்தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக தாய்ப்பன்றி, சுமார் 275 கிலோ எடை இருக்கும். அதன் கால்களின் உயரம் உடலுக்கு ஏற்றதாக இல்லாமல் சற்று சிறியதாக இருப்பதால் படுக்கும்போது, சரியாகப் படுக்க முடியாது. இந்த சூழ்நிலையில் தாய் படுக்கும்போது குட்டிகள் நசுங்கிச் சாகும் நிலை ஏற்படுகிறது. இந்தக் கொட்டில் 6 அடி நீளமும், 7 அடி அகலமும், கொட்டிலின் மேல்புற மற்றும் கீழ்புற அகலம் 2 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டில் தரையிலிருந்து ஓர் அடி உயரமும், சுவரிலிருந்து ஓர் அடி உயரமும் இடைவெளி உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியிலிருந்து கொட்டிலின் அடிப்பகுதி ஓர் அடி இடைவெளியில் இருப்பதால், தாய்ப்பன்றி படுக்கும்போது பன்றிக்குட்டிகள் வெளியே ஓடி விட முடியும். இதனால் பன்றிக்குட்டிகள் நசுங்கி இறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. குட்டி ஈனுவதற்கு ஒரு நாளைக்கு முன்பே... கொட்டிலை சுத்தமாகக் கழுவி தொற்றுநீக்கம் செய்து பெண் பன்றிகளை கொட்டிலுக்குள் விட்டு விட வேண்டும். இக்கொட்டிலின் விலை 28 ஆயிரம் ரூபாய்.

பாலியுரத்தேன் முயல்கூண்டு:

இது, பிளாஸ்டிக் பயன்படுத்தி செய்யப்பட்ட முயல்கூண்டு. 2 அடி நீளமும், 2 அடி அகலம் கொண்ட முயல்கள் பராமரிப்புப் பகுதியையும், ஒன்றரை அடி நீளம், ஓர் அடி அகலம் கொண்ட குட்டி ஈனும் பகுதியையும் கொண்டது. முழுவதும் பிளாஸ்டிக் பைப்புகளால் செய்யப்பட்ட பிடிமானங்களைக் கொண்டது. பிளாஸ்டிக் தரையாக இருப்பதால், எளிதில் சுத்தப்படுத்தலாம். மேலும் கழிவுகளின் கரைபடியாமல் இருப்பதால், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சீழ்கட்டி ஆகிய நோய்கள் ஏற்படாமல் சுகாதாரமான முறையில் பண்ணையைப் பராமரிக்க முடியும். இது சம்பந்தமான ஆராய்ச்சியின்போது, பிளாஸ்டிக் தரையில் நோய் தாக்கம் மிகமிகக் குறைவாக இருந்தது. எந்த நேரமும் சுத்தமாக உலர்ந்த நிலையில் கூண்டுகளைப் பராமரிக்க முடியும்.  ஆராய்ச்சிப் பண்ணையில் இந்தக் கூண்டில் முயல்களை வளர்த்தபோது முயல்குட்டிகளின் இறப்பு கணிசமாக குறைந்தது. முயல்களின் எடையும் அதிகரித்தது. நோய்த்தாக்கம் கணிசமாக குறைந்தது. இக்கூண்டின் விலை 4 ஆயிரத்து 200 ரூபாய்.

ஆட்டுக்குட்டிகளுக்கான குளிர் தடுப்பான் சாதனம்:

பிறந்த வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டுக் குட்டிகளில், சூழ்நிலை மாறுபாட்டால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த சாதனம், குட்டிகளுக்கு வெப்பமூட்டி, குளிரிலிருந்து பாதுகாத்து உடல் வெப்பநிலையைச் சமநிலைபடுத்தும். அதனால், குட்டிகளில் ஏற்படும் இறப்பு கட்டுப்படுத்தப்படும். இது,  ஆட்டுக்குட்டிகளுக்கு, செளகரியமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. குட்டிகள் கழிக்கும் கழிவு மற்றும் சிறுநீர் ஆகியவை கீழே தரையில் உடனே விழுந்து விடுவதால், கூண்டு எந்நேரமும் சுத்தமாக இருக்கிறது. சுமார் 8 ஆட்டுக்குட்டிகளுக்கு ஒரு சாதனம் போதுமானது. ஆட்டுப் பண்ணையாளர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆராய்ச்சிப் பண்ணையில் ஆய்வு செய்ததில் குட்டிகளின் இறப்பு 80 சதவிகிதம் குறைந்து, குட்டிகள் ஆரோக்கியமாக வளர்ந்தன. இந்த சாதனத்தின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய்.

இந்தப் பண்ணைக்கருவிகள் சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் கிடைக்கும்.

பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் கருவிகள் குறித்துச் சொன்ன கூடுதல் தகவல்கள் அடுத்த இதழில்...

தொடர்புக்கு,
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப்பண்ணை, மாதவரம்.
தொலைபேசி: 044-25551571.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick