முருங்கை இலைப்பொடி கிலோ 2 ஆயிரம் ரூபாய்!

கருத்தரங்குகு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்

‘பசுமை விகடன்’, ‘வேலுடையார் கல்வி நிறுவனம்’ ஆகியவை இணைந்து கடந்த அக்டோபர் 15-ம் தேதி, திருவாரூர், வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட விவசாயிகளோடு, நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆர்வத்துடன் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு துவக்க விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கல்வி நிறுவனத்தின் தாளாளர் தியாகபாரி, “அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். விவசாயத்துல நிறைய சிரமங்கள் இருந்தாலும் நான் ஆத்மார்த்தமா செஞ்சுகிட்டுதான் இருக்கேன். எங்க பள்ளியோட வைர விழா கொண்டாடிட்டு இருக்குற இந்தத் தருணத்துல பசுமை விகடனோடு சேர்ந்து இந்தக் கருத்தரங்கை நடத்துறது எங்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி” என்றார்.

பள்ளியின் செயலாளர் செந்தூர்பாரி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காந்தி, கனிமொழி மற்றும் நிதி நிறுவன அலுவலர் ஜான் அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் ‘மதிப்புக்கூட்டும் மந்திரம்’ என்ற தலைப்பில், இந்திய பயிர்ப் பதன ஆராய்ச்சிக்கழகத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் பேசும்போது, “மருத்துவர்களிடம் சென்று சத்து மாத்திரை கொடுங்கள் என்று கேட்பது பலரின் வழக்கம். நமது விளைபொருட்களில் அதிகளவில் சத்துக்கள் உள்ளன.

உதாரணமாக, முருங்கை இலையில் 40 சதவிகிதம் வரை இரும்புச்சத்து உள்ளது. புரதமும் அதிகளவில் உள்ளது. அதனால், முருங்கை இலை பவுடருக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. ஒரு கிலோ முருங்கை இலை பவுடர் 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.

சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிடும் ஓட்ஸுக்கு சிறந்த மாற்று, மாப்பிள்ளைச்சம்பா அரிசி. ஆனால், இது மோட்டா ரகமாக இருப்பதால் நாம் அதிகம் விரும்புவதில்லை. ஆனால், அதையே நூடுல்ஸாக, சேமியாவாக, மாவாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும். சாமை என்கிற சிறுதானியத்தில் தயார் செய்யும் ஆயத்த இட்லி மாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி, “கால்நடைகளின் அனைத்து வியாதிகளுக்கும் மூலிகை மருத்துவம் உள்ளது. இது நம் முன்னோர் கடைப்பிடித்த மருத்துவம்தான். கால்நடைகள் விஷச் செடிகளைச் சாப்பிட்டாலோ அல்லது விஷக்கடிகளால பாதிக்கப்பட்டாலோ... 5 வெற்றிலை, 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கசக்கிக் கொடுத்தால் சரியாகிவிடும். இவற்றைத் தேடி வெகுதூரம் அலைய வேண்டியதில்லை. இதுபோன்ற எளிய மருத்துவத்தைக் கற்றுக்கொண்டால் கால்நடை மருத்துவமனைகளைத் தேடி ஓட வேண்டிய அவசியமிருக்காது” என்றார்.

பாரம்பர்ய நெல் சாகுபடி முறை குறித்துப் பேசிய பாஸ்கரன், “நாற்று நடவைவிட, நேரடி விதைப்பில் பலன்கள் அதிகம். ஆனால், களைகள் அதிகம் உருவாகும். களைகளைக் கட்டுப்படுத்த களைக்கொல்லி விஷம் தேவையில்லை. நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 6 கிலோ வீதம் விதைத்தால் களைகளைக் கட்டுப்படுத்திவிட முடியும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்