“நடுத்திட்டு வாசம் நாடெங்கும் வீசும்!’’

தமிழக விவசாயிகளைக் குஷிப்படுத்திய மோடி!மூலிகைப் பயிர் க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்

க்னோவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ‘சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிஷினல் அண்டு அரோமேட்டிக் பிளான்ட்ஸ்’ (CIMAP) எனும் மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பு 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வரும் இவ்வமைப்பின் ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி, விவசாயிகளிடம் காணொளிக்காட்சி மூலம் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, அண்மையில் கடலூர் மாவட்டம்,  நடுத்திட்டுக் கிராமத்தில், வெட்டி வேர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது தமிழக வெட்டி வேர் விவசாயிகளை வெகுவாகப் பாராட்டிய மோடி, ‘நடுத்திட்டு வாசம்... நாடு எங்கும் வீசும்’ என்று சொல்லி விவசாயிகளை
மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி குறித்து வெட்டி வேர் அமைப்பின் துணைத்தலைவர் அசோக்குமாரிடம் பேசினோம். “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வெட்டி வேர் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில்தான் அதிகம் விளைகிறது. கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது. வெட்டிவேரிலிருந்து கைவினைப் பொருட்கள், காலணிகள், கார் மேட், தொப்பி, பேக், பெல்ட், பாய் போன்றவற்றைத் தயாரித்து வருகிறார்கள்.

இது கழிவு நீரைச் சுத்தமாக்கும் தன்மை கொண்டது. மண் அரிப்பைத் தடுக்கும். வெட்டிவேர் ஊற வைக்கப்பட்ட தண்ணீரைப் பருகினால் உடல் குளிர்ச்சி அடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போது இந்தியாவில், ஆண்டுக்கு 20 டன் அளவு வெட்டிவேர் எண்ணெய் இறக்குமதியாகிறது. வெட்டிவேர்ச் சாகுபடியைப் பரவலாக்கினால், எண்ணெய் ஏற்றுமதி மூலம் இந்தியாவும் அதிக வருவானம் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் வெட்டிவேர்ச் சாகுபடி செய்யும் விவசாயி, ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும். இவ்வளவு நன்மைகள் கொண்ட வெட்டி வேரைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதால்தான், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது” என்ற அசோக்குமார் தொடர்ந்தார்.

“சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிஷினல் அண்டு அரோமேட்டிக் பிளான்ட்ஸ் (CIMAP) அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ‘சிம் சம்ரித்தி’ என்ற வீரிய ஒட்டு ரக வெட்டிவேரை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் எண்ணெய்த் தன்மை அதிகம் உள்ளது. குறைந்த காலத்திலேயே அறுவடைக்கு வந்துவிடும். ‘மிஷன் அரோமா இந்தியா’ என்ற திட்டத்தின் மூலம் இந்த ரகத்தை வெட்டி வேர் விவசாயிகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்த ‘மன்றே கான்’ எனும் திட்டத்தின் மூலம், 300 கோடி ரூபாய் செலவில், 750 கிலோமீட்டர் தூரம் ஆற்றங்கரையில் வெட்டி வேர் நடவு செய்யப்பட்டுள்ளது. ஏனோ தெரியவில்லை, தமிழக அரசு வெட்டி வேர்ச் சாகுபடியை ஊக்குவிக்க முன்வருவதில்லை. தமிழக அரசு, தரிசு நிலங்களில் வெட்டிவேர் பயிர் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்து, கடலூர் மாவட்டத்தில் நறுமணத் தொழிற்சாலை அமைத்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்