சொட்டுநீர்ப் பாசனம்...

சொட்டு சொட்டாக நீர்... கட்டு கட்டாக லாபம்!புதிய தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: தி.விஜய்

சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பாடு போட்டு சாப்பிடுவது பிடிக்கும். சிலருக்கு சாப்பிடுகிறோமோ இல்லையோ, தட்டு நிறையச் சாப்பாடு இருந்தால்தான் பிடிக்கும். இப்படி வயிறு நிறைவதற்குப் போதுமான உணவைவிட, கண்ணும் மனமும் நிறையுமளவுக்கு உணவைப் பரிமாறுவதைப் போலத்தான்... பயிருக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான தண்ணீர். வாய்க்கால் வெட்டி அதில் தழும்பத்தழும்பத் தண்ணீர் விட்டால்தான் பயிர் நன்றாக வளரும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், பயிருக்குத் தேவையான தண்ணீரை பயிரின் வேர் அருகில் கொடுத்தாலே போதுமானது என்பதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த வேலையைத்தான் செய்கிறது, ‘சொட்டுநீர்ப் பாசனம்’ என்னும் நவீனப் பாசன முறை.

தண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால்,  நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முக்கியமான முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசப்போகிறது, இக்குறுந்தொடர்.

மரபுவழி பாசனம்!

மரபுவழி நீர்ப் பாசன முறையில் (வாய்க்கால் பாசனம்) ஏராளமான தண்ணீர் ஆவியாவதுடன், அதிகளவு களைகள் வளரவும் ஏதுவாகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகப் பாசனம் செய்யும்போது, 45 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை தண்ணீர் பயன்பாடு குறைகிறது. மேடுபள்ளமான நிலங்களிலும் சாகுபடி செய்ய முடிகிறது. வேலையாட்களின் எண்ணிக்கை குறைகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன், பயிர்கள் சீராக வளர்கின்றன. இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும், தமிழக விவசாயிகள் இன்னமும் முழுமையாகச் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறவில்லை.

வாய்க்கால் பாசனம் செய்யும்போது, பயிருக்கு மட்டுமல்லாமல், நிலம் முழுவதும் தண்ணீர் பாயும். இதனால், பயிருக்குத் தேவையான தண்ணீரைப்போல பல மடங்கு தண்ணீர் வீணாகிறது. உதாரணமாக, தென்னைக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஆனால், வாய்க்கால் பாசனத்தில் 200 லிட்டர் முதல் 300 லிட்டர் தண்ணீர் பாயும். நாம் எவ்வளவு அதிகமாகப் பாசனம் செய்தாலும், பயிர் தனக்குத் தேவையான அளவுக்குத்தான் தண்ணீரை எடுத்துக்கொள்ளும். குறுகிய காலப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் வாய்க்கால் எடுத்துப் பாசனம் செய்யும் முறையால், சாகுபடிப்பரப்பு குறையவும் வாய்ப்புகள் உண்டு.

தற்போது பலவிதமான நவீன நீர்ப் பாசன முறைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்துக்கும் அடிப்படையானது, சொட்டுநீர்ப் பாசனம்தான். இத்தொழில்நுட்பங்கள், ஒரு சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இது மனித குலத்தின் தொடர் முயற்சியால் கிடைத்தவை. வழக்கமான பாசன முறைகளுடன், புதுமையான பாசன முறைகளை மேற் கொள்ளும் முயற்சிகள், பன்னெடுங்காலமாக உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கின்றன. அதில் முக்கியமான முயற்சி, மண் பானைகளில் நீர் நிரப்பி, அடியில் சிறிய துளையிட்டு, செடியின் வேர் அருகில் வைத்துவிடும் முறை. இன்றைய சொட்டுநீர்ப் பாசனத்துக்கு இதுதான் அடித்தளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்