“கால்நடைகள் இருந்தால்தான் இயற்கைக்கு மாற முடியும்! ”

ஆ.ஐஸ்வர்ய லட்சுமி, படம்: அ.சரண் குமார்

காஞ்சிபுரம் மாவட்டம்,  மதுராந்தகம் தாலுக்கா, படாளத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் ‘இயற்கை விவசாயக் கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப் பட்டறை’ நடைபெற்றது. மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறை ஆதரவுடன் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்கள் விவசாயம் தொடர்பாக வடிவமைத்திருந்த பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கில், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில், இந்தோ-ஸ்வீடன் புராஜெக்ட் தலைமைச் செயலாளர் கேசவன், முன்னோடி இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் திரளாகப் பயிற்சி பட்டறையில் பங்கேற்றுப் பயிற்சி எடுத்துக்கொண்டனர். கல்லூரியின் உயிரியல் துறை பேராசிரியர் கார்த்திக்கேயன் அறிமுக உரையுடன் கருத்தரங்கு தொடங்கியது.

இதில் பேசிய சுல்தான் அகமது இஸ்மாயில், “உணவு என்ற பெயரில் நாம் விஷத்தை உட்கொண்டு வருகிறோம். இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்றால் அதைச் சார்ந்து இருக்கும் கால்நடைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயம் சாத்தியம். மகசூலை அதிகப்படுத்த வேண்டும் என்று ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளித்தால், நன்மை செய்யும் பூச்சிகளையும் நாம் இழந்துவிடுவோம். எளிமையாகக் குப்பையில் இருந்தே இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், “விவசாயிக்கு மண்வளம் மிக முக்கியம், ரசாயன உரங்களை இட்ட நிலங்களைக் கொம்பு சாண உரம் பயன்படுத்தி உடனடியாக இயற்கைக்கு மாற்ற முடியும்” என்றதோடு, கொம்பு சாண உரம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம் ஆகியவற்றைத் தயாரிக்கும் முறைகளைச் செயல் விளக்கமாகச் செய்து காட்டினார். மேலும், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்பு துறையின், வேலூர் மண்டல ஆய்வாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் முன்னோடி விவசாயிகள் ‘எழில்சோலை’ மாசிலாமணி, சுப்பு உள்ளிட்டவர்களும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்