சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
க.சரவணன், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு விவசாயிகள், ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் மூலம் அறுவடை முதல் விற்பனை வரை அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் வெற்றிப்பயணம் குறித்த குறுந்தொடர் இது...

இப்பகுதியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு அமைவதற்கு மூல காரணமாக இருந்த ‘ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட கதையைக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து அதுகுறித்துப் பேசுகிறார், மருத்துவர் லலிதா ரெஜி.

சாலை வசதியால் வந்த வினை!

“இந்தப்பகுதி, 95 சதவிகிதம் விவசாயத்தை நம்பியிருக்கும் பூமி. 20 வருஷங்களுக்கு முன்னாடி, இங்க மஞ்சள், கரும்பு மாதிரியான பணப்பயிரெல்லாம் கிடையாது. முழுக்க, முழுக்க மானாவாரிப் பயிர்களான சிறுதானியங்கள்தான் அதிகம். அதுவும் இயற்கை முறை விவசாயம்தான். இங்க இருக்குற மக்களும் சிறுதானியங்களைத்தான் சாப்பிடுவாங்க.

1978-ம் வருஷம் வரைக்கும் சிட்லிங்கிக்கு சாலை வசதி கிடையாது. 1980-க்கு மேலதான் விவசாய அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு வர ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், வேற பகுதிகள்ல இருந்து பெரு விவசாயிகள் இங்க வந்து நிலம் வாங்க ஆரம்பிச்சாங்க. அதேநேரம், ரசாயன உரங்களையும் நன்செய் விவசாயத்தையும் கொண்டு வந்தாங்க. கிணறுகள் தோண்ட ஆரம்பிச்சு பணப்பயிர் சாகுபடியும் பெருகிச்சு. அது இந்த மக்கள்கிட்டயும் பரவ ஆரம்பிச்சது. நன்செய் விவசாயத்துக்கு ரசாயன உரம் அவசியம்னு விவசாயிகள் நம்ப ஆரம்பிச்சாங்க.

அதனால, இந்தப் பழங்குடி மக்கள் சந்தையையும், இடைத்தரகர்களையும், கந்து வட்டிக்காரர்களையும் நம்பி விவசாயம் செய்யவேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டாங்க. பாரம்பர்ய வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ரெண்டுமே சிதைந்துபோச்சு. அதனால விவசாயத்துல நஷ்டம் வர ஆரம்பிக்கவும், இங்க இருந்த பழங்குடி மக்கள் கோயம்புத்தூருக்கும், கொச்சினுக்கும் கட்டட வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சாங்க. கொஞ்ச பேர் திருப்பூர் பனியன் கம்பெனிகள்ல வேலைக்குச் சேர்ந்தாங்க. அப்படிப்பட்ட சூழல்லதான், ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ் நிறுவனம் மூலமா இங்க விவசாயம் சம்பந்தமான வேலைகளை ஆரம்பிச்சோம்” என்ற லலிதா ரெஜி, பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்...

முதல் ஆண்டு 4 பேர்... அடுத்த ஆண்டு 16 பேர்!

“2005-ம் ஆண்டு வரைக்கும், இந்த மக்களுக்கு மருத்துவத் தேவைதான் ரொம்ப முக்கியமா இருந்துச்சு. நாங்க வேலை செஞ்ச கிராமங்கள்ல தங்கி மக்களோட அதிகம் பேசுவோம். அப்போ, அவங்க சாலை வசதி இல்லாதது, பள்ளிக்கூடம் இல்லாதது மாதிரி நிறையக் குறைகளைச் சொல்வாங்க.

இந்தப் பகுதி மக்கள்கிட்ட இருந்த குடிப்பழக்கத்தால வர்ற பிரச்னைகளையும் சொல்வாங்க. ஆனா, எல்லோரும் சொல்ற ஒரே பிரச்னை பொய்த்துபோன விவசாயம் குறித்துதான். மருத்துவத்துக்கு அடுத்து விவசாயத்துலதான் அவங்களுக்கு உதவி ரொம்பத் தேவையா இருந்துச்சு. எங்களுக்கு அதுல பெரிசா பரிச்சயம் கிடையாது. ஆனா, மக்களுக்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கணும்னு தெளிவு இருந்துச்சு. எங்களுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவோட பழக்கமும், இயற்கை விவசாயம் பத்தின புரிதலும் இருந்துச்சு. அதனால பசுமைப் புரட்சியோட வன்முறை குறித்த விஷயங்களை மக்களுக்குச் சொல்ல ஆரம்பிச்சோம்.

இயற்கை விவசாயத்தோட நன்மைகள் சம்பந்தமா கிட்டதட்ட ஒரு வருஷம் நாங்க பேசின பிறகு, 4 பேர் மட்டும் பரிசோதனை முறையில இயற்கை விவசாயம் செய்ய முன்வந்தாங்க. அவங்களை முறையா கணக்கு எழுதி, இயற்கை விவசாயம் செய்ய வெச்சோம். இயற்கையில விளைஞ்ச பருத்திக்கு ஒரு ரூபாய் கூடுதல் விலை கிடைச்சது. அதோட சாகுபடிச் செலவும் குறைவா இருந்துச்சு. அதைப்பார்த்ததும் அடுத்த வருஷம் 16 பேர் சேர்ந்தாங்க. அந்த வருஷம் மார்க்கெட் விலையைவிட 2 ரூபாய் கூடுதலா காந்திகிராமத்துல விற்பனை செய்து கொடுத்தோம். எலெக்ட்ரானிக் எடை மிஷின் பயன்படுத்தி, வெளிப்படையா எல்லா வேலைகளையும் செஞ்சோம். அப்புறம்தான் விவசாயிகள் நம்ப ஆரம்பிச்சாங்க.

4 பேர்ல ஆரம்பிச்ச குழு கொஞ்சம் கொஞ்சமா பெருகி கூட்டமைப்பா உருவாக ஆரம்பிச்சது. நாங்க பேசினதைவிட, அனுபவப்பட்ட விவசாயிகள் பேசினதை அந்த விவசாயிகள் சுலபமா புரிஞ்சுக்கிட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்