மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஹரன்

மின்சாரக் கட்டணத்தைக் கட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மா வாத்தியாரைப் பார்க்கவும், அவரோடு இணைந்துகொள்ள, இருவரும் பேசிக் கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். தோட்டத்தில் இருந்து கிளம்ப எத்தனித்துக்கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், இருவரையும் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டார்.

“என்னய்யா எங்கேயோ கிளம்பிட்ட போல இருக்கு” என்று காய்கறி கேட்கவும், “நேத்து லேசா மழை பேஞ்சதால தண்ணி கட்டுற வேலை இல்லை. ரொம்ப நேரமா உங்களை எதிர்பார்த்துட்டே உக்காந்திருந்தேன். உங்களையும் காணோம். அதனால லோன் விஷயமா சொசைட்டிக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்திடலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றார். அப்படியே மூவரும் கல்திட்டில் அமர்ந்துகொள்ள, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், ஏரோட்டி.

“மானாவாரி பயிர்களை எப்படி வறட்சியில் இருந்து பாதுகாக்குறதுனு ‘பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர்’ சண்முகம், விவசாயிகளுக்கு யோசனை சொல்லியிருக்கார். ‘மானாவாரியா விதைச்ச கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி மாதிரியான பயிர்கள் மழை இல்லாததால வாடிக்கிட்டு இருக்கு. அதனால, இந்தப் பயிர்களை வறட்சியிலிருந்து காப்பாத்த வேண்டியது அவசியம். 100 மில்லி ‘மெத்தைலோ பாக்டீரியா’ங்கிற திரவ வடிவ நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்துல பயிர் மேல நல்லா படுறபடி தெளிக்கணும்.

15 நாட்கள் கழிச்சு திரும்பவும் இதேமாதிரி தெளிக்கணும். இப்படி செஞ்சா பயிர்கள்ல உயிரோட்டம் குறையாது. செடிகள்ல இலைப் பரப்பு, இலைத் துளைகளோட எண்ணிக்கை, பச்சையம் எல்லாத்தையும் அதிகப்படுத்த முடியும். அதனால மகசூலும் கூடும். இந்த நுண்ணுயிர் உரத்தை கண்டிப்பா ரசாயன உரத்தோட கலந்து பயன்படுத்தக்கூடாது’னு சண்முகம் சொல்லிருக்கார்” என்றார், ஏரோட்டி.

காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நீராகாரத்தை ஆளுக்குக் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்துவிட்டு  “பேரையூர்ல இருக்குற எங்கக்கா வந்திருந்தப்போ, கால் மூட்டை புழுங்கல் அரிசி கொடுத்துட்டுப் போனா. அந்த ஏரியாவுல நிறைய பேர், அவங்களாவே நெல்லை அவிச்சு அரிசியா அரைச்சுக்குவாங்க. அதனால சோறு சுவையா இருக்கும். நீராகாரம்கூட சுவையா இருக்கும்” என்று கூடுதல் தகவல் கொடுத்தார்.

மட்டை ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சுவையான நீராகாரத்தை ரசித்துக் குடித்தபடியே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.

“ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சுத்தியிருக்குற நரிப்பையூர், குதிரைமொழி, மாணிக்க நகர் உள்ளிட்ட பகுதிகள்ல பனைமரங்கள் நிறைய இருக்கு. இந்தப்பகுதிகள்ல ஓலைப்பெட்டி, பாய்னு பனைப்பொருட்கள் தொழிலும் சிறப்பா நடக்குது. வீடுகள், தோட்டங்களுக்குப் பனைமட்டை கொண்டுதான் இந்தப்பகுதிகள்ல வேலி அமைப்பாங்க.

மட்டை ஓரத்துல அரம் மாதிரி முள்ளு முள்ளா இருக்குறதால சிறு பிராணிகள்கூட அதுக்கு இடையில நுழைய முடியாது. இந்த மட்டைகள் வெயில்லயும், மழையிலயும் இருந்தாக்கூடப் பத்து வருஷத்துக்கு மேல அப்படியே இருக்குமாம். இப்போ இந்த மட்டைகளோட பயன்பாடுகளைத் தெரிஞ்சுக்கிட்டு, வேலி அமைக்கிறதுக்காகப் பல ஊர்கள்ல இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து பனை மட்டைகளை வாங்கிட்டுப் போறாங்களாம். அதனால மட்டைகளுக்குக் கிராக்கி அதிகரிச்சுருக்குதாம். ஒரு மட்டை 50 காசுனு இப்போ விற்பனையாகிட்டுருக்குதாம்” என்றார், வாத்தியார்.

அந்த நேரத்தில், ஏரோட்டியின் செல்போனில் ஓர் அழைப்பு வர, எழுந்து சென்றார். அத்தோடு மாநாடும் முடிவுக்கு வந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்