அப்போ கத்திரி... இப்போ கடுகு... தொடரும் மரபணு மாற்றுப் பூதம்!

ஜெ.சாய்ராம்,

“மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் இந்திய சந்தையில் ஊடுருவ முன்னெடுக்கப்பட்ட முயற்சி, பெரும் போராட்டத்துக்குப் பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்திய சந்தையில் ஊடுருவ செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, மத்திய அரசிடம் பேசித் தீர்வு காணவேண்டும்’’ என ஆகஸ்ட் 15-ம் தேதி, சென்னையில் நடந்த விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

2010-ம் ஆண்டு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் வெளியிடப்பட்டபோது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அத்திட்டத்தைக் கைவிட்டது மத்திய அரசு. இந்நிலையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பதற்காக மத்திய அரசு, ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகம், தான் புதிதாக உருவாக்கியுள்ள மரபணு மாற்றப்பட்ட கடுகை, இந்தக் குழுவிடம் அனுமதிக்காக அளித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் இது குறித்து கலந்துரையாடவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், மரபணு மாற்றுப் பயிர்கள் அற்ற இந்தியாவுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த, கவிதா குருகந்தி பேசியபோது, ‘‘பல கோடி ரூபாய் செலவில், டெல்லி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை அப்பல்கலைக்கழகம், ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு’விடம் அனுமதிக்காக அளித்துள்ளது. அதை ஆராய்ந்து பார்த்த ஒப்புறுதிக்குழு, மரபணு மாற்றுக் கடுகை ஆதரித்து கருத்துகளை தெரிவித்துள்ளது. எங்களைப் போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகியதன் விளைவாக, அந்தக் குழுவினர் ஆய்வு செய்த தரவுகளை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தரவுகளை வெளியிடாமல் இருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

‘விவசாயம் மாநிலங்களின் பட்டியலில் உள்ள நிலையில், மத்திய அரசு மரபணு மாற்றுப்பயிர் விவகாரத்தில் தவறான முடிவை எடுத்து... அதைத் திணிக்கும்வரை காத்திருக்காமல், தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூட்டத்தின் முடிவில் தீர்மானம் இயற்றப்பட்டது.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ‘காவிரி’ தனபால் மற்றும் இயற்கை விவசாய செயற்பாட்டாளர்கள் அரச்சலூர் செல்வம், அனந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்