நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நீர்நிலை த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

டந்த ஆண்டு பெய்த பெருமழை தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையால் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. பெரும் அளவிலான தண்ணீரும் எந்த பயன்பாடும் இல்லாமல் கடலில் கலந்தது. இந்த தண்ணீரை முறையாக சேமித்திருந்தாலே, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி இருந்திருக்கும். ஆனால் மழை பெய்த சில மாதங்களிலேயே பல நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.

இத்தகைய கொடுமைக்குக் காரணம், நீர்நிலைகள் சரிவர பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டதும்தான் என்பதையே கடந்த பெருமழை உணர்த்திக் காட்டியுள்ளது. இத்தகைய சூழலில் பெருவெள்ள பாதிப்புக்கு பிறகு விகடன் குழுமத்தின் அறத்திட்டப்பணிகளை மேற்கொண்டிருக்கும் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ‘நிலம்... நீர்... நீதி!’ எனும் திட்டம் உருவானது. இதற்காக விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட, வாசகர்களும் இந்த நல்ல திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஆர்வத்தோடு நிதியை அள்ளித் தர, மொத்த நிதி இரண்டேகால் கோடியைத் தாண்டியது.

ஆலோசனைக்குழுவின் ஆய்வு!

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, நீரியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. சென்னை, அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்குக்குக் காரணமாக அமைந்த வண்டலூர் தொடங்கி, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை இந்த ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். பெரும்பாலான நீர்நிலைகள் துளியும் பராமரிப்பின்றி கிடக்க, ‘பெருமழைபெய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பல ஏரிகளில் தண்ணீர் இல்லை. தமிழகம் முழுக்கவே பெரும்பாலான நீர்நிலைகள் இப்படித்தான் பராமரிப்பின்றி கிடக்கின்றன’ என்று வேதனையை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, சென்னை அருகேயுள்ள நீர்நிலைகளில் சிலவற்றை, நிலம்... நீர்... நீதி! திட்டத்தின் மூலமாக சீரமைத்துக் காட்டலாம். இதை ஒரு முன்மாதிரி திட்டமாக நாம் செயல்படுத்தலாம். இதேபோல தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை அரசாங்கமும் பிற அமைப்புகளும் முன்வந்து சீரமைக்கும்போது, அடுத்தடுத்த பருவமழைக் காலங்களில் வெள்ள ஆபத்தும் இருக்காது. விவசாயத்துக்கான பாசனநீர் மற்றும் குடிநீர் பிரச்னையும் பெரும் அளவுக்கு தீரும் என்று முடிவெடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்