2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

மகசூல் இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

பட்டம் கிடையாது... ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
களிமண் தவிர மற்ற எல்லா மண்ணுக்கும் ஏற்றது
குறைவான தண்ணீர் செலவு
குறைவான வேலையாட்கள்,
வில்லங்கமில்லாத விற்பனை

ருவத்துக்கேற்ற பயிர் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம்மிடம் உள்ள தண்ணீர் வசதிக்கேற்ற பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்வதும் முக்கியமானது. இதைச் சரியாக புரிந்துகொண்டு, குறைந்தளவு நீர் வளத்தைத் கொண்டே பப்பாளி, முருங்கை சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்... தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலூகா, புதியம்புத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மரியராஜ்.

‘‘நெல், கரும்பு, வாழை மாதிரியான பயிர்களைப் பயிரிட அதிக தண்ணி தேவை. ஆனா பப்பாளி, முருங்கை சாகுபடி செய்ய குறைஞ்ச அளவு தண்ணியே போதும். அது மட்டுமில்லாம இந்த ரெண்டுக்குமே சந்தையில் தேவையும், விற்பனை வாய்ப்பும் இருக்கிறதுனால நாட்டு பப்பாளியையும், யாழ்ப்பாணம் முருங்கையையும் சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்று அலைபேசியில் அழகாக விவரித்த மரியராஜை அவரது தோட்டத்தில் சந்தித்தோம். விற்பனைக்குக் கொண்டு செல்வதற்காக சாக்குப் பைகளில் முருங்கைக்காய்களையும், கூடையில் பப்பாளியையும் அடுக்கிக் கொண்டே நம்மிடம் பேசினார். 

மண்ணைக் கெடுத்த ரசாயனம்!


‘‘பாரம்பர்யமாவே விவசாயம்தான் தொழில். ஆடு, கோழி, மாடுனு வீட்டைச் சுற்றி எப்பவும் கால்நடைங்க இருக்கும். அப்பா காலத்துல பருத்தி, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, மிளகாய் மாதிரியான பயிர்களை மானாவாரியிலயும், இறவையில பாசிப்பயறு, உளுந்தையும் சாகுபடி செஞ்சாங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுமே, அப்பாவுக்கு உதவியா விவசாயத்துக்கு வந்துட்டேன்.  தின வருமானம் எடுக்குற மாதிரி செண்டுமல்லி, செவ்வந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளினு பூ வகைகளை ரசாயன உரத்தைப் போட்டு சாகுபடி செஞ்சோம். ஒரு கட்டத்துல நீர்மட்டம் குறையக் குறைய, கறிவேப்பிலை சாகுபடிக்கு மாறுனோம். கறிவேப்பிலையில அதிகமான பூச்சித்தாக்குதல் இருந்தது. கையில கிடைச்ச ரசாயன உரத்தையும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதனால கறிவேப்பிலை போட்ட அடுத்த வருசமே மண் இறுகிப் போனதால, கறிவேப்பிலை சரியா வளர்ச்சி இல்லாமப் போச்சு. அதனால விவசாயத்தை மட்டும் நம்பாம ஜவுளி வியாபாரமும் செய்ய ஆரம்பிச்சேன்.

 இந்த நிலையில, 2011-ம் வருஷம் எங்க ஊரு நூலகத்துலதான் எனக்கு ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்கப் படிக்க இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈடுபாடு உண்டாகிடுச்சு. அந்த வருஷமே வானகத்துக்குப் போயி நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் பல தானியங்களை விதைச்சு, மட்கிய தொழுவுரத்தைப் போட்டு மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமா வளப்படுத்துனேன். பிறகு, சக்கை ரக வாழையை ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சுது. வாழையை சந்தைப்படுத்தும் போதுதான், ‘உங்கிட்ட பப்பாளி இருக்குதா..? நாட்டு பப்பாளிக்கு அதிக தேவை இருக்கு’னு கடைக்காரர் கேட்டார். ‘பெரும்பாலும் ‘ரெட்லேடி’ ஒட்டுரகத்தை சாகுபடி செய்றதால, நாட்டு பப்பாளி சாகுபடி குறைஞ்சுப் போச்சு. ஆனா, அதுக்கு அதிக தேவை இருக்கு’ன்னும் சொன்னாரு. நாட்டு பப்பாளிக்கு அதிக தேவை இருக்குறதை தெரிஞ்சுக்கிட்டதும், உடனே பப்பாளி சாகுபடியை ஆரம்பிச்சேன். அதே போல, சாத்தான்குளத்துக்கு ஒரு விசேஷ வீட்டுக்குப் போயிருந்த போது யாழ்ப்பாணம் முருங்கை மரத்துல இருந்து சில போத்துகளை வெட்டிட்டு வந்து நட்டு வெச்சேன். அப்புறம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெட்டி நடவு செஞ்சு பெருக்குனேன். இப்போ என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலம் இருக்கு. இது கரிசல் கலந்த மணல். ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டு பப்பாளி, ஒரு ஏக்கர்ல யாழ்ப்பாணம் முருங்கை, மீதமுள்ள ரெண்டு ஏக்கர் நிலத்துல காய்கறிகளை நடவு செய்யலாம்னு உழவு போட்டு வெச்சிருக்கேன். பப்பாளிக்கும், முருங்கைக்கும் பட்டம் ஏதும் கிடையாது. வருசம் முழுக்க சாகுபடி செய்யலாம்’’ என்றவர், நிறைவாக வருமானம் பற்றி பேசத் தொடங்கினார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்