நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி

‘‘இ.எம். கலவையைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்த முடியுமா? இதை எப்படித் தயார் செய்வது?’’

ஏ.தயாளன், சிதம்பரம்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள ஈகோ-புரோ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லூக்காஸ் பதில் சொல்கிறார்.

‘‘எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). தமிழில், ‘திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையில் இருக்கும். இது, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

இதை எப்படித் தயாரிப்பது என்பது பற்றிப் பார்ப்போம். ஒரு கிலோ வெல்லத்தைப் பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒருமுறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில் இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையோடு காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

ஒரு மடங்கு இ.எம். கலவையுடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம் (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும்வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம். இதை பயிர்வளர்ச்சிக்கு என்றால், வாரம் ஒருமுறை தெளிக்கலாம். இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

இந்த இ.எம். தொழில்நுட்பத்தை ஜப்பான் நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் இ.எம். பயன்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன. இந்த நாடுகளில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்து வருகின்றன. இதற்கு மூலக்காரணம் இ.எம். பயன்பாடுதான். இந்தியாவிலும் இதுபோன்ற நிலை உருவாக வேண்டும்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0413 2622469.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்