இயற்கைத் தோட்டத் திருவிழா!

துரை.நாகராஜன், படம்: அ.அருணசுபா

க்களிடையே இயற்கை உணவுகள் குறித்த ஆர்வம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறது. அதைத் தொடர்ந்து இயற்கை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இயற்கை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், சென்னை, ஈஞ்சம்பாக்கம், ‘வி.ஜி.பி கோல்டன்பீச்’சில் ‘இயற்கை வேளாண் தோட்டத் திருவிழா-2016’ எனும் விழா நடத்தப்பட்டது.

செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற்ற இவ்விழாவை வி.ஜி.பி. குழுமம், ஏ டூ இசட் ஆர்கானிக்ஸ், எஸ்.பி.எஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தின. பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவை வழங்கியிருந்தது.

விழாவில் பேசிய வி.ஜி.பி. பாரிஜாதம் அறக்கட்டளையின் செயலாளர் உஷா ராஜ்குமார், “எங்களுடைய முதல் முயற்சியாக இந்த விழாவை நடத்துகிறோம். விழாவில் பள்ளிக்குழந்தைகளும் ஆர்வமாகக் கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனதுக்குச் சந்தோசமாக இருக்கிறது. இயற்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் விழாவின் நோக்கம். தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை இவ்விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விழாவின் ஒரு பகுதியாக சிறந்த மாடித்தோட்டங்களுக்குப் பரிசுகளும் வழங்க இருக்கிறோம்” என்றார்.

எஸ்.பி.எஸ் பவுண்டேஷன் தலைவர் பேராசிரியர் ராஜ், “ஆரம்பக் காலத்தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்த நாம், இப்போது ரசாயன உர விவசாயத்துக்கு மாறிவிட்டோம். மாறுவதற்கு முன்னால், ரசாயனத்தினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. புதுப்புது நோய்கள் உருவாகிய பிறகுதான், ரசாயனம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இயற்கைக்கு மாறி வருகிறோம். அதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவி வருகின்றன” என்றார்.

இயற்கை வேளாண் தோட்டத் திருவிழாவின் ஒரு அங்கமாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மண்பானைகள், மாடித்தோட்டம், இயற்கை வேளாண் விளைபொருட்களில் தயாரான உணவு வகைகள், பாரம்பர்ய உணவு வகைகள், தொட்டிச் செடிகள், போன்சாய் மரங்கள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. குழந்தைகளுக்கு இயற்கை குறித்த விழிப்பு உணர்வு அளிக்கும் வகையில் ‘நவீன பொம்மலாட்டம்’ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்