மஞ்சள்... உள்நாட்டுக்கு உருண்டை ரகம்... வெளிநாட்டுக்கு நீள ரகம்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி! துரை.நாகராஜன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும், சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில் மஞ்சள் குறித்த தகவல்கள் இடம்பிடிக்கின்றன.

‘அரிணம்’, ‘பீதம்’ என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மஞ்சள் ஒரு மருத்துவப் பயிர். இப்பயிரின் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கை உடைத்தால் உலோக நாதம் உண்டாகும். இந்தியாவின் பழைமையான நறுமணம் மற்றும் மூலிகைப் பொருள் இது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ எனும் வேதிப்பொருள் உண்டு. இந்த வேதிப்பொருள்தான், மஞ்சளுக்கு நிறத்தைத் தருகிறது. தவிர மஞ்சளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பல்வேறு பொருட்களிலும் இதுதான் மூலப்பொருளாக உள்ளது. தமிழகத்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சித்த வைத்திய முறையில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய காலங்களில் இது மஞ்சள் நிற சாயத்துக்காகத்தான் பயன்படுத்தப்பட்டது.

உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு  80 சதவிகிதம். கடந்த, இரண்டு ஆண்டுகளாக புயல்தாக்கம் மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக மஞ்சள் உற்பத்தியில் பாதிப்பு தொடர்கிறது. நாட்டின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலம் ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சத்து 16 ஆயிரம் டன் அளவு உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் மஞ்சளுக்கான முக்கிய சந்தையாக உள்ளது.

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும் சமயங்களில் மட்டும் வரத்து அதிகமாக இருக்கும். வரத்து அதிகமாகும்போது, உடனடியாக விலை சரிந்துவிடும். தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் தகவல்படி... 2014-15-ம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரம் டன் மஞ்சள் இருப்பு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வறட்சி காரணமாக, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சாகுபடிப் பரப்பு குறைந்துவிட்டது. 2015-16-ம் ஆண்டில் இந்தியாவில் 8 லட்சத்து 30 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நல்ல விலை கிடைக்கும் என  எதிர்பார்த்து... ஈரோடு சேமிப்புக்கிடங்கில்1 லட்சம் டன் மஞ்சளைச் சேமித்து வைத்துள்ளனர், விவசாயிகள். இந்தியாவில் பண்டிகைக்காலத்தில், மஞ்சளின் தேவை அதிகரிக்கும் என்பதால்... செப்டம்பர் மாதத்துக்கு மேல் தரமான மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் மொத்த மஞ்சள் உற்பத்தியில், 80 முதல் 85 சதவிகிதம் வரை உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுத்தப்படுகிறது. மீதிதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து மஞ்சளை இறக்குமதி செய்கின்றன. பொதுவாக இந்தியாவில் மஞ்சள் உற்பத்தி குறைந்திருப்பதால், நடப்பாண்டில் நல்ல தரமான மஞ்சளுக்கு ஏற்றுமதித் தேவை அதிகமாக இருக்கும்.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, கடந்த 15 ஆண்டுகளாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மஞ்சள் விலை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டக் குழு, ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு முடிவின் அடிப்படையில் வருகிற செப்டம்பர் மாத இறுதி வரை, தரமான மஞ்சளுக்கு பண்ணை விலையாக ஒரு குவிண்டாலுக்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரத்து 500 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஞ்சள் விவசாயிகள் விற்பனை முடிவை எடுக்கலாம்.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பேசிய விஷயங்கள், அடுத்த இதழில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்