Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close.

சீமைக் கருவேலமரம்... அத்தனை ஆபத்தானதா?

வாக்குமூலம்முனைவர் வெங்கடாசலம் - படங்கள்: தி.விஜய்- எல்.ராஜேந்திரன் - தே.அசோக்குமார்

அய்யா நியாயன்மாரே....

மீபகாலமாகத் தமிழகத்தில் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றில், என்னைப் பற்றித்தான் அதிக செய்திகள் பரவி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சாலையோர தேநீர் கடை வரை என் பேச்சுதான்.  எல்லாவற்றுக்கும் காரணம், என்னை அழிக்கச்சொல்லி நீதிமன்றம் போட்ட உத்தரவுதான். இதற்கு மேல், பீடிகை தேவையில்லை. எல்லோருக்கும் புரிந்திருக்கும், நான் யாரென்று. ஆம். நான், சீமைக் கருவேல மரமேதான். 

எந்தத் தவறையுமே செய்யாத எனக்கு இங்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்கவில்லை. என் தரப்பில் யாரும் வாதிடவும் இல்லை. அதற்கு அவகாசமும் இல்லை. என் எதிரிகளான சில சூழல் ஆர்வலர்கள், என்மேல் அளித்த புகாரில், நான் செய்ததாகச் சொல்லப்பட்ட குற்றங்களை விசாரிக்காமல், அதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தேடாமல் எனக்கு மரண தண்டனையை வழங்கிவிட்டனர். என் சந்ததிகளே இல்லாமல் போகும்படி என் பரம்பரையையே முற்றாக அழிக்கும் வகையிலான கொடூரமான தண்டனை எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

‘வரலாற்றிலேயே முதல் முறையாக’ என்றுகூட இதைச் சொல்லலாம். இதுவரை, மனிதர்களை மட்டுமே தண்டித்து வந்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்துக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை உத்தரவு, தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை வேதவாக்காகக் கொண்டு, பல்வேறு தன்னார்வக் குழுக்கள் என் இனத்தை முற்றாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் எனக்கெதிரான பரப்புரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பாமர மக்கள்கூட எங்கள் இனத்தை அழித்தொழிக்க அரிவாளோடு புறப்பட்டுவிட்டனர். அந்தளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டது போல.

அனைவரும் வெறுக்கும் அளவுக்கு என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமானவையா... அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையா? என யாருமே கேட்கவில்லை. தாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அடிக்கும் கொட்டங்களையே தட்டிக் கேட்காதவர்கள், சாதாரண மரமான எனக்காகவா கேள்வி கேட்கப்போகிறார்கள். என்னைப் பற்றியும என்னுடைய பயன்பாடு பற்றியும் எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் என் வாக்குமூலத்தை இங்குப் பதிவிடுகிறேன்.

சீமைக்கருவேலம் ஆகிய நான், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முள்செடி. ஆங்கிலத்தில் என் பெயர் ‘புரொசோபிஸ் ஜுலிஃப்ளோரா’ (Prosopis Juliflora). என் சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும் மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையைக் கொண்டு வருவதற்கு முன்பே நான் உலகம் முழுவதும் என் இருப்பை உணர்த்தியவன். இந்தியாவில் 1911-ம் ஆண்டிலிருந்து வளர்ந்து வருகின்றேன். இங்கு நானாக வரவில்லை. எரிபொருள் தேவைக்காகவும் உயிர்வேலிக்காகவும் விரும்பித்தான் என்னைக் கொண்டு வந்தார்கள். தொடக்கக் காலங்களில் என்னைச் சீராட்டிப் பாராட்டி பரவலாக வளர்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து நானும் என்னால் முடிந்த அளவு வேகமாகவும் பரவலாகவும் வளர்ந்தேன். விவசாய நிலங்களுக்கு வேலியாக அமைந்ததனால் வேலிகாத்தான் என அழைக்கப்பட்டேன். 

அந்தச் சமயங்களில், என் விதைகளை வாங்க உழவர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர். என் உயிர்வேலியைப் பார்க்க ஆராய்ச்சி நிலையங்களுக்குப் படையெடுத்தார்கள். காடு மேடுகளில், தண்ணீரே இல்லாத இடங்களில், கற்களும் பாறைகளும் உள்ள நிலங்களிலும்கூட நான் வளர்ந்தேன். கொஞ்சம் காலம்தான் என் விதைகளைப் போட்டு வளர்த்தார்கள். அதன்பிறகு, நானாகவே வளர ஆரம்பித்தேன். என் மரத்தின்  காய்களை ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிட்டன. ஜீரணிக்கப்படாத என் விதைகள் அவற்றின் சாணத்துடன் வந்து திறத்துடன் வளர்ந்தன.

வறட்சியைத் தாங்கும் என் குணத்தை எல்லோரும் பாராட்டினர். அப்போதெல்லாம் இந்த சமையல் எரிவாயுவும் இல்லை, மின் அடுப்புகளும் இல்லை. எல்லோரும் என்னைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தினர். மதிய உணவு வழங்கும் சத்துணவு மையங்களில்கூட நான்தான் விறகாக எரிந்தேன். மக்கள் காடுகளுக்குச் சென்று, விறகு எடுப்பதை முற்றாக ஒழித்தேன். என்னால் வனங்கள் காப்பாற்றப்பட்டன எனப் பலர் எழுதினார்கள். மரங்களாய், புதர்களாய், செடிகளாய் எனப் பல வடிவங்களிலும் நான் உற்பத்தியைப் பெருக்கினேன். என்னை உயிர் வேலியாகவும், அதில் அதிகம் வளரும்போது விறகாகவும் பயன்படுத்தினர்.

என் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட சிலர் எரிகரியாக மாற்றினர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வேளாண்மை செய்ய முடியாத, எந்தப்பயிர்களும் வளராத நிலங்களில்... நான் செழுமையாக வளர்ந்தேன். என்னை மனிதர்களும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆம், என்னை எரிகரியாக மாற்றித் தமிழகம் அல்லாது மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பினர். இன்றும் பல குடும்பங்களுக்கு நான்தான் வாழ்வாதாரமாக உள்ளேன். எந்த முதலீடும் இன்றி ஒரு ஏக்கரில் ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாயை நான் சம்பாதித்துக் கொடுக்கிறேன். 

தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப் பிறரை பலி கொடுப்பது மனிதர்களின் பொதுவான பழக்கம். அதே அடிப்படையில், இங்கு மனிதர்களின் செயல்களுக்கு நான் பலியாக்கப்பட்டுள்ளேன். மனிதர்கள், இயற்கையின் மீது நடத்தி வரும் அத்தனை தாக்குதல்களையும் மறைத்து, ‘இதனால்தான் இயற்கைக்கு அழிவு’ என்று ஒரு சாதாரண மரமான என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இப்படிப் பொய்யான விஷயத்தைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்பி விட்டுள்ளனர்.

மற்ற எல்லா தாவரங்களைப் போலதான் நானும் சுவாசிக்கிறேன். எந்த அளவுக்கு நீரை உறிஞ்சுகிறேனோ அதே அளவுக்கு ஹைட்ரஜனைச் சேர்ப்பேன் என்பதை இவர்கள் வசதியாக மறந்து, இல்லையில்லை மறைத்துவிட்டனர். இன்று, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது எனப் போராடும் இவர்களுக்குச் சாதகமானவன்தான் நான். ஆம், எந்தவித மாசும் இன்றி நான், ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்து கொடுக்கிறேன். இதுகூடவா இவர்களுக்குத் தெரியாது? நான் காற்றில் உள்ள கார்பனை அதாவது கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயிர்வளி என்ற ஆக்ஸிஜனை வெளியிடுவதும், நீரில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் எடுத்து, அதை கார்பனோடு சேர்த்து ஹைட்ரோகார்பனை உருவாக்குகின்றேன் என்பது இவர்களுக்குத் தெரியவில்லையா... அல்லது தெரியாததுபோல நடிக்கிறார்களா?

எல்லா பெட்ரோலியப் பொருள்களுக்கும் அடிப்படை, இந்த ஹைட்ரோகார்பன்தான். நிலத்தின் அடியில் பல லட்சம் ஆண்டுகள் புதையுண்டதால் அவை அடர்த்தியாக உள்ளன. நான் அடர்த்தி இன்றி உள்ளதால் என் வெப்பத்திறன் அதைவிட குறைவாக உள்ளது.

ஆனால், நான் அவர்களைப்போல கரியமிலவாயுவை வெளியிட்டு வளியை மாசுபடுத்துவதில்லை. நான் வெளியிடும் கரியமிலவாயுவை என் தொடர் வளர்ச்சிக்கு நானே எடுத்துக்கொண்டு, வாயு அளவைச் சமன் செய்து விடுகின்றேன்.
நீர்நிலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டடங்களைக் கட்டி ஆக்கிரமிப்புச் செய்துள்ளது யார்? நிலத்தையெல்லாம் கான்கிரீட் காடாக மாற்றிவிட்டு தாவர அழிவுக்கு நீதான் காரணம் என்று என்னை நோக்கிக் கூறுவது எந்த வகையில் நியாயம்? என்னை முறைப்படுத்தி வளர்த்துப் பயன்படுத்தாதது எப்படி என் குற்றமாகும். உங்களின் தேவைக்கு ஏற்பத்தானே மற்ற பயிர்களையும் வளர்க்கிறீர்கள், அதேபோல என்னையும் வளர்க்கலாம் அல்லவா.

நான் அபரிமிதமாக வளர ஊக்குவித்தது நீங்கள்தானே. என் விதைகளை ஆகாயத்தில் இருந்து காற்றின் மூலம் பரவவிட்டது நீங்கள்தானே. எனக்குத் தெரிந்து இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எரிபொருள் தேவைக்கு நான்தான் விறகாக பயன்பட்டு வருகிறேன்.

மண் அரிப்பு தடுத்தல், ஆற்றல் காடுகள்.... என இன்னும் நான் சொல்ல வேண்டிய தகவல்கள் ஏராளமாக உள்ளன.
 
இப்படிக்கு,

சீமைக்கருவேல மரம். 

கடந்த சில நாள்களாக சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம் என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் மூலம் பரவிவந்தது. இதை பரவவிட்ட முனைவர் ப.வெங்கடாசலம், கூடுதல் தகவல்களைச் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்கிறார். இவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறை, முன்னாள் பேராசிரியர்.

சீமைக் கருவேல மர வாக்குமூலத்தின் தொடர்ச்சி... மற்றும் சீமைக்கருவேல மர எதிர்ப்பாளர்களின் பதில்கள் அடுத்த இதழில்...


கரும்பைவிட அதிக வருவாய் 

“சீமைக்கருவேல மரத்தின் கட்டைக்கரி ஒரு டன் 16,000 ரூபாய் விலை போகிறது. ஒரு டன் கரும்பின் விலை 2,400 ரூபாய்தான். பைசா செலவு இல்லாத சீமைக்கருவேலம், கரும்பு விவசாயத்தைவிட லாபகரமானது. இந்தக் கரிக்கட்டைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தால் நெய்வேலியில் நிலக்கரி தோண்டத் தேவையில்லை. காவிரித் தண்ணீருக்கு கையேந்தவும் தேவையில்லை” என்கிறார், முன்னோடி விவசாயியும் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவருமான சி.வையாபுரி.


சீமைக்கருவேலம் மூலம் மின்சாரம்

கோயம்புத்தூர் மாவட்டம், ஓடத்துறை; திருப்பூர் மாவட்டம் செம்மிபாளையம் போன்ற கிராம பஞ்சாயத்துகள், சீமைக்கருவேலம் விறகைப் பயன்படுத்திச் சிறிய அளவில் மின்சாரம் தயாரித்துத் தங்கள் கிராமத்தின் மின்தேவையின் ஒரு பங்கைப் பூர்த்திச் செய்து வருகின்றன.


தேனீக்களின் நண்பன்!

ன்றும் இன்றும் என்றும் சாதாரண மக்களின் எரிபொருள் இந்தச் சீமைக்கருவேலம். விளைநிலங்களில் உயிர்வேலியாகப் பயன்படும் மரங்களில் முதன்மையானதும் சீமைக்கருவேலம்தான். 1952-ம் ஆண்டு, கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில், உயிர்வேலிக்கான செயல்விளக்கம் நடத்தப்பட்டதை அன்று ‘மேழிச்செல்வம்’ எனும் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. ‘இந்தச் சாலை செடிகளை எந்தவித பூச்சிகளோ, நோய்களோ தாக்குவதில்லை.

ஆடு மாடுகள் இச்செடிகளின் நுனியைக் கடித்தாலும் அவை உடனே வளர்ந்து விடுகின்றன. இதன் காய்களை வெள்ளாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. குன்னிக்கண்ணன் என்ற உழவர், இந்தச் செடி தேனீ வளர்ப்புக்கு வேண்டிய மகரந்தத்தை ஆண்டு முழுவதும் கொடுக்கிறது எனக் கூறுகிறார். ஹவாய் தீவுகளில் இதைப் பயன்படுத்தித் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன’ என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்று... 

10.09.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘சீமைக்கருவேல்... வரமா... சாபமா?’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் துறை சார்ந்த வல்லுநர்கள் பலரின் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அக்கட்டுரையில், சீமைக் கருவேலம் அழிக்க வேண்டிய அளவு பாதகமான மரம் இல்லை. அதேசமயத்தில், மிக அத்தியாவசியமான மரமும் இல்லை என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்!
ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”
Advertisement
[X] Close