மரத்தடி மாநாடு : சீமைக்கருவேல மரத்தால் பாதிப்பு கிடையாது!

ஓவியம்: ஹரன்

காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வேலையை முடித்துவிட்டு வருவதற்கும்  காய்கறிகளை விற்றுவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

காய்கறியும் ஏரோட்டியும் அமர்ந்து சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டதும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

“இந்த வருஷ தொடக்கத்துல தமிழ்நாட்டுக்குள்ள சீமைக்கருவேல மரத்தை ‘அடியோடு அழிக்கணும் வேரோடு ஒழிக்கணும்’னு அந்த மரத்துக்கு எதிரா பெரிய எதிர்ப்பலை உருவாச்சு. அரசாங்கமே, சீமைக்கருவேல மரத்தை அழிக்க களத்துல இறங்குச்சு. ‘ முறையாக ஆய்வு செய்யாமல், சீமைக்கருவேல மரத்தை அழிக்கக் கூடாது’னு சென்னை உயர் நீதிமன்றத்துல  பொதுநல வழக்கு தொடுக்கப் பட்டது. அந்த வழக்குல சீமைக் கருவேலமரத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கைக் கொடுக்க 12 பேர் கொண்ட குழு அமைச்சாங்க. முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவுல, வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர், கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், வேளாண்துறை அதிகாரிகள் இருந்தாங்க. இந்தக் குழு ‘சீமைக்கருவேல மரத்தால், நிலத்தடி நீர்மட்டத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. உயிர்ச்சூழலுக்கு ஆதரவாகத்தான் சீமைக்கருவேல மரம் உள்ளது’னு அறிக்கை தாக்கல் செய்திருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

“அப்படின்னா... சீமைக்கருவேல மரங்களுக்கு ஆதரவுகூட ஆரம்பிச்சிருச்சு” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த வேகவைத்த மரவள்ளிக்கிழங்குத் துண்டுகளை, ஆளுக்கு இரண்டாகக் கொடுத்த காய்கறி, “இந்த மாசம் மரவள்ளிக்கிழங்கு சீசன் ஆரம்பிச்சிருச்சு. அதனால, தமிழ்நாடு முழுக்க ஜோரா விற்பனையாகுது. இதைக் குச்சிக்கிழங்குனும் சொல்வாங்க. சில்லறை விலையில ஒரு கிலோ நாற்பது ரூபாய்னு விற்பனையாகுது. அவிச்சு சாப்பிட்டா நல்ல சுவையா இருக்கும். உடம்புக்கும் நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டா எலும்பு இறுகும். குறிப்பா பெண்கள் இதை அதிகமா சாப்பிடணும். தஞ்சாவூர் பக்கம் கிராமங்கள்ல யாருக்காவது எலும்பு உடைஞ்சுடுச்சுனா கட்டுப் போட்டுட்டு... இந்தக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேகவெச்சு,தாளிச்சு சாப்பிடக்கொடுப்பாங்க. வேகவெச்ச தண்ணியையும் சூப் மாதிரி குடிப்பாங்க. இதைச் சாப்பிடுறவங்களுக்குச் சீக்கிரமே எலும்பு கூடிடும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick