‘‘உலக நாடுகள் செல்லும் இயற்கை விவசாயப் பாதை!’’ - கோலாகலமாக நடந்த சர்வதேச இயற்கை மாநாடு

மாநாடுத.ஜெயகுமார்

110 நாடுகள், 3,000 பங்கேற்பாளர்கள், 2,000 பார்வையாளர்கள், 200 அரங்குகள் என்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது ‘ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ்-2017’ எனும் ‘19-வது சர்வதேச இயற்கை விவசாய மாநாடு’. புதுடெல்லி அடுத்துள்ள கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா எக்ஸ்போ மார்ட்’ என்னுமிடத்தில் கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, நைஜீரியா, ஜிம்பாப்வே, தைவான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சிக்கிம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர்.

இயற்கை விவசாய விளைபொருள்கள் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, சந்தை, தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மையில் உள்ள சவால்கள்... எனப் பல விஷயங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. கண்கவர் அரங்குகளில், இயற்கை விளைபொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இயற்கை விளைபொருள்கள் பார்ப்பவர்களை அசர வைத்தது.

உலக இயற்கை விவசாய இயக்கத்தின் கூட்டமைப்பு

(ஐ.எஃப்.ஓ.எம்), இந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பு (ஓ.எஃப்.ஏ.ஐ), பி.டி.ஏ டிரேட் ஃபேர் ஆகிய அமைப்புகள் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. மத்திய வேளாண் அமைச்சகம் இணை ஏற்பாட்டாளராகவும், அபீடா முதன்மைப் பங்குதாரராகவும், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பங்குதாரர்களாகவும் பங்கெடுத்திருந்தன. நிகழ்ச்சிக்கு ‘பசுமை விகடன்’ இதழ் ஊடக ஆதரவை வழங்கியிருந்தது.

ஈரோடு மாநகரைச் சேர்ந்த ‘கலைத்தாய் கலைக்குழு’வின் தப்பாட்ட இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள முடியாமல் போனதால், தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், உத்தரப் பிரதேச வேளாண்துறை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாகி, ஐ.எஃப்.ஓ.எம் தலைவர் ஆண்ரே லே, ஓ.எஃப்.ஏ.ஐ அமைப்பின் தலைவர் சுஜாதா கோயல், சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் ஷாம்லிங் ஆகியோர் கலந்துகொண்டனர். ஓ.எஃப்.ஏ.ஐ அமைப்பின் இயக்குநர் கிளாடு ஆல்வாரிஸ் மாநாட்டை ஒருங்கிணைத்தார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர் அவரவர்களுடைய பாரம்பர்ய உடையில் வந்திருந்தனர்.

தொடக்க விழாவில் பேசிய சுஜாதா கோயல், “மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்தமுறை இந்தியாவின் தலைநகரில் நடைபெறுவது பெருமைக்குரியது. இந்தியாவின் மக்கள் தொகை 1.34 பில்லியன் (134 கோடி). உலக மக்கள் தொகையில் 17 சதவிகிதமாக நாம் இருக்கிறோம். அதேசமயம், உலகளவில் 6 லட்சம் இயற்கை விவசாயிகளைக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்தியாவில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் நடைபெற்றுவருகிறது. இயற்கை விவசாயத்தில் வளர்ந்துவரும் நாம் அதைச் சார்ந்த தொழில்நுட்பம், சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள இந்த மாநாடு உதவியாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆண்ரே லே, “அக்ரிகல்ச்சர், ‘ஆர்கானிக்கல்ச்ச’ராக மாற வேண்டும். இந்திய விவசாயிகள் ஆர்கானிக் விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார்கள். அதற்காகத்தான் விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ‘ஃபார்மர்ஸ் டிராக்’ என்றொரு பிரிவை மாநாட்டின் ஒரு பகுதியாகத் தொடங்கியுள்ளோம். உங்களுக்குத் தெரிந்த நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதெல்லாம் இயற்கை விவசாயத்தில் மட்டுமே சாத்தியம்” என்றார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், “இந்தியா பாரம்பர்யமிக்க இயற்கை விவசாய நாடு. நான்காயிரம் ஆண்டுகளாக நாம் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி வருகிறோம். அதன் அவசியத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் ‘பரம்பரா கிருஷி விகாஸ் யோஜனா’. இத்திட்டத்தின்மூலம் 22.5  லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 3.6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இயற்கை விவசாயத்தின்கீழ் கொண்டுவர முயற்சிகள் எடுத்துவருகிறோம்.

நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும், ஆரோக்கியமான உணவை வழங்குவதில் பின்தங்கியிருக்கிறோம். கடந்த சில தலைமுறைகளாக அதிகமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருவதால், ஆரோக்கியமற்ற உணவுதான் உற்பத்தியாகிறது. மண்வளம், நீடித்த உற்பத்தி, ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்கள் ஆகியவை இயற்கை விவசாயத்தால் மட்டுமே சாத்தியம். இயற்கை விவசாயம், உலகத்தின் தேவையாகவும் இருந்துவருகிறது” என்றார்.

மாநாட்டில் முக்கிய நபராக அதிகம் கொண்டாடப்பட்டவர், சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் ஷாம்லிங். சிக்கிம் மாநிலம் அமைத்திருந்த அரங்கும், காண்போரை அசர வைத்தது. மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய பவன்குமார் ஷாம்லிங், “இயற்கை விவசாயம் ஒரு விவசாய முறையல்ல. அதுவொரு வாழ்க்கைக்கான வழி. மண், மனிதன், சுற்றுச்சூழல், நுண்ணுயிரிகள் என்று இயற்கையோடு இணைந்து செயல்படுவதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு.

கடந்த சில தலைமுறைகளாக இந்த மண்ணைக் கொடுமைப்படுத்திவிட்டோம். அதனால், மண்ணின் சூழல் கெட்டுப் போயுள்ளது. தற்போது, அதற்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து, அதை இயற்கை வழியில் நாம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, மகசூல் அதிகரிக்கும். இந்தப் பூமியைச் சுத்தப்படுத்த இயற்கை விவசாயத்தால்தான் முடியும். இயற்கை விவசாய முறையால் சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த முடியும் என்பதற்குச் சிக்கிம் மாநிலமே உதாரணம்.

மனதிலிருந்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை முதலில் தூக்கி எரிந்தால்தான் இயற்கை விவசாயம் சாத்தியமாகும். சிக்கிம் மாநிலத்தில் 2003-ம் ஆண்டு இயற்கை விவசாயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் இயற்கை விவசாய மாநிலமாகச் சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீர், காற்று, மண் வளம் அங்கு சாத்தியமாகியுள்ளது. ‘ரசாயனமில்லா மண்’ என்ற பெருமை எங்கள் மண்ணுக்குக் கிடைத்துள்ளது. சிறப்பான எதிர்காலத்துக்கான வழியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

இயற்கை விவசாயத்தை உலகமே அங்கீகரிக்கிறது. அதனால், அதன் வழியில் நாமும் செல்வோம். இந்தியா முழுவதும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்து அவற்றுக்காக வழங்கப்படும் மானியத்தை இயற்கை விவசாயத்துக்கு வழங்க வேண்டும்” என்று பேசி முடித்தவுடன் பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இயற்கை விவசாயப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் புதிய சூத்திரங்கள், மரபணு மாற்றுப் பயிர் குறித்தான மாயைகள், கேரளாவின் அடுத்தகட்ட இயற்கை விவசாய முயற்சி உள்ளிட்ட விவரங்கள் அடுத்த இதழில்...    


விவசாயிகளுக்கு விருது

நிகழ்ச்சியில், தேசிய அளவில் சிறந்த இயற்கை விவசாயிகளுக்கான விருதுகள் மூன்று பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் இரண்டாவது பரிசாக 3 லட்ச ரூபாயைப் பெற்றவர் கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அபய் முத்தாலிக் தேசாய். இவரைப் பற்றி 25.4.17-ம் தேதியிட்ட பசுமை விகடனில் எழுதியுள்ளோம்.


“இயற்கைச் சான்றிதழ் இலவசம்”

சிக்கிம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, அஸ்ஸாம், மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் அரங்குகளை அமைத்திருந்தன. சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அரங்குகளை அலங்கரித்திருந்தன. சிக்கிம் மாநில அரங்கில் இருந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண் வளர்ச்சிதுறையின் இயக்குநர் கே.பி.பந்திடம் பேசினோம்.

“சிக்கிம் 100 சதவிகித இயற்கை விவசாய மாநிலம். எங்கள் மாநிலத்தில் ரசாயனம் பயன்படுத்தினால் இடுபொருள் மற்றும் கால்நடைத் தீவன ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் 3 மாத சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதனால், யாருமே ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில்லை” என்றவர், “உங்கள் மாநிலத்தைச் (தமிழ்நாடு) சேர்ந்த நபர்தான் ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்” என்று சொல்லிவிட்டு, முனைவர் அன்பழகன் ஐ.எஃப்.எஸ் என்பவரை அறிமுகப்படுத்தினார்.

நம்மிடம் பேசிய அன்பழகன், “சிக்கிம் மாநிலத்தில் 76,169 ஹெக்டேர் நிலங்கள் சான்றளிக்கப்பட்ட இயற்கை விவசாய நிலங்களாக இருக்கின்றன. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை எளிதாகச் சந்தைப்படுத்தும் வகையில், சான்றிதழ் பெறும் செலவை அரசே செய்து விடுகிறது. இதுவரை 66 ஆயிரம் விவசாயிகளுக்குச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிக்கிம் மாநிலத்தின் விளைபொருள்களைச் சந்தைப்படுத்த முடிகிறது. இம்மாநிலத்திலிருந்து வரும் பொருள்கள் என்றாலே அவை சான்றிதழ் பெறப்பட்ட பொருள்கள் என்ற நம்பிக்கை நுகர்வோரிடம் இருக்கிறது. சிக்கிமில் விளையும் பொருள்களுக்கு அதனுடைய உண்மையான விலை என்னவோ, அதைத்தான் வைக்கிறோம். இதனால், விவசாயிகளுக்கும் ஒரு பிரிமியம் விலை கிடைக்கிறது. நுகர்வோருக்கு ஒரு நல்ல விலையில் பொருள்களை வாங்க முடிகிறது. இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தியபோது விவசாயிகள் விளைவிப்பதை அவர்கள் தேவைக்குப் போக, மீதியாவதை விற்பனைசெய்யுமாறு அறிவுறுத்தியிருந்தோம்.

இப்போது வர்த்தக ரீதியான பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு சொல்லிவருகிறோம். குறிப்பாக, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், பக்வீட் (ஒருவகை தானியம்) அதிகம் சாகுபடி செய்கிறார்கள் விவசாயிகள். அத்தியாவசியத் தேவைக்கு நெல், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் சிக்கிம் மாநிலத்துக்கே போதுமானதாக இருக்கிறது. சிக்கிமிலும் சின்னச் சின்ன மார்க்கெட்கள் இருக்கின்றன.

அங்கேயும் விளைபொருள்களை விற்கிறார்கள். இதுதவிர காங்டாக், டெல்லி ஆகிய இடங்களில் எங்கள் மாநில விளைபொருள்களை விற்பனை செய்யும் வகையில் இயற்கை அங்காடியைத் திறந்துள்ளோம்.

தொழுவுரம், மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகை இலைகள் ஆகியவற்றைத்தான் சிக்கிம் விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். வீட்டுக்கு ஒரு கழிப்பறை என்பதுபோல, விவசாயிக்கு ஒரு மண்புழு உரத்தொட்டி எனக் கட்டிக்கொடுத்து வருகிறோம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைத் தடைசெய்துவிட்டு, வட்டாரம் வாரியாக இயற்கை விவசாயம் குறித்துப் பயிற்சிகள் அளித்து விவசாயிகளைத் தயார் செய்திருக்கிறோம். எங்கள் மாநிலத்துக்கு வந்தால் இயற்கை விவசாயம் குறித்துக் கற்றுத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு, அன்பழகன்,
செல்போன்: 097330 60033,
மின்னஞ்சல்: malai_13@rediffmail.com


வாய்ப்பைத் தவறவிட்ட தமிழ்நாடு!

மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அதிக விவசாயிகள் சென்றிருந்த நிலையில், தமிழ்நாடு சார்பாக அரங்கு இடம்பெறாதது குறித்து அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி  மது.ராமகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் போன வருஷம் வெளிநாட்டுக்காரங்களை அழைச்சிட்டு வந்து முதலீட்டாளர் மாநாடு நடத்தினாங்க. வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து தங்கி, இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிறதுக்கு வாய்ப்பளிக்கிற இந்த மாநாட்டுல, தமிழ்நாடு மாநில அரங்கு இல்லை. நம்மைவிடக் குறைவாக விவசாயம் செய்துவரும் கேரள மாநிலம், அதிகளவு நிதியை ஒதுக்கி மிகப்பெரிய அரங்கு அமைச்சிருந்துச்சு. நெல், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துகள் என்று பலவகையான பயிர்களைச் சாகுபடி செய்துவரும் நாம், தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டிருக்கிறோம்” என்றார்.

கொடுமுடி ‘பஞ்சகவ்யா’ டாக்டர் நடராஜன், “தமிழ்நாட்டில்தான் பயிர்களுக்குப் பயன்படுத்தும் பஞ்சகவ்யா கண்டுபிடிக்கப்பட்டது. இதைச் சிக்கிம், கேரளா... என்று பல மாநிலங்கள் பயிர்களுக்கு முக்கிய இடுபொருளாகப் பயன்படுத்திவருகிறது. அங்கெல்லாம் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் வளர்ந்துள்ளதைப் பெருமையாகப் பேசுகின்றனர். நம் அரசு சார்பிலும் ஓர் அரங்கு அமைத்து, இதைப் பற்றிப் பேசியிருந்தால், வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் நம்முடைய தொழில்நுட்பம் போய்ச் சேர்ந்திருக்கும். இது பஞ்சகவ்யாவுக்கு மட்டும் பெருமை சேர்க்காது. தமிழ்நாட்டுக்கும்தான் இந்தப் பெருமை சேர்ந்திருக்கும்” என்றார்.

இதுகுறித்து, மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக மானாவாரி பயிர்த்திட்ட துணை இயக்குநர் அசோகனிடம் கேட்டபோது, “இயற்கை விவசாய மாநாட்டில் அரங்கு அமைப்பது தொடர்பாக இந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பு, 2017 மார்ச் மாதமே அணுகியது. ஆனால், அப்போது நிதி பெறுவதற்கான காலம் குறைவாக இருந்ததால் அரங்கு அமைக்க முடியவில்லை. இன்னொன்று தமிழ்நாட்டு இயற்கை விவசாயத்துக்கான லோகோவும் தயாராகவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் அறுவடையும் பெரும்பான்மையான பகுதிகளில் நடைபெறவில்லை. விளைபொருள்கள் இல்லாததால், அரங்கு அமைக்க முடியவில்லை. ஆனாலும், 20 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து மாநாட்டுக்குக் கூட்டி வந்திருக்கிறோம்” என்றார்.


மாநாட்டில் கலக்கிய தமிழ்நாட்டு விவசாயிகள்

மாநாட்டில், தமிழ்நாட்டிலிருந்து சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநாட்டின் ‘ஃபார்மர்ஸ் டிராக்’ என்ற பிரிவில் ‘பஞ்சகவ்யா’ டாக்டர் நடராஜன், அறச்சலூர் செல்வம், மது.ராமகிருஷ்ணன், ரீஸ்டோர் அனந்து, சமீபத்தில் மறைந்த ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர். குடும்பம், அகிம்சா, கீஸ்டோன், ஆரோவில், உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் ‘இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கப் பசுமை விகடன் களம் அமைத்துக் கொடுத்துவருகிறது. பசுமை விகடனால்தான் நாங்கள் மாநாட்டில் கலந்துகொண்டோம்’ என்றனர்.


பசுமை விகடனின் ‘அறம்’

பாராட்டிய மத்திய அமைச்சர்!


மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த, மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியிடம், மாநாட்டு ஏற்பாட்டாளர் கிளாடு ஆல்வாரிஸ், “பசுமை விகடன், இயற்கை  விவசாயத்தைப் பரப்பத் தமிழ் மொழியில் வெளிவரும் சிறந்த இதழ்... உலக அளவில் இப்படி ஓர் இதழ், வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை.

இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வது, விவசாயிகளுக்கான பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பது போன்ற அற்புதமான அறப்பணிகளைப் பசுமை விகடன் செய்துவருகிறது. இந்தச் சர்வதேச இயற்கை விவசாய மாநாட்டுக்கும் ஊடக ஆதரவு (Media Partner) கொடுத்து நம்முடன் கைகோத்துள்ளனர்’’ என்றெல்லாம் பசுமை விகடன் ஆசிரியர் குழுவினரை அறிமுகப்படுத்திச் சொன்னார்.

“மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள்! கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இயற்கை விவசாயத்தைப் பரப்பிவரும் பசுமை விகடன், தமிழ் மொழியில் மட்டும் வெளியிட்டால் போதுமா? ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்டால், மற்ற மாநில விவசாயிகளும் பயன் பெறுவார்களே...” என ஆலோசனை வழங்கினார் மேனகா காந்தி. அருகிலிருந்த மலேசியா, பிரான்ஸ், ஆப்பிரிக்கா... உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பசுமை விகடனைப் பாராட்டிச்சென்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகரில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டின் போதும், ‘‘பசுமை விகடன் ஆங்கில மொழியில் வெளிவந்தால், சிறப்பாக இருக்கும்...’’ என மேனகா காந்தி ஆலோசனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick