எருமைகளுக்குச் சேறு கண்ட இடம் சொர்க்கம்! | Dairy farming - Guidance for management - Pasumai Vikatan | பசுமை விகடன்

எருமைகளுக்குச் சேறு கண்ட இடம் சொர்க்கம்!

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 4கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார், படங்கள் ரா.திலீப்குமார்

பொதுவாக மாடுகள், கருவூட்டல் செய்த நாளிலிருந்து 270 முதல் 280 நாள்களில் கன்று ஈன்றுவிடும். கருவூட்டல் செய்த 60 நாள்கள் கழித்துச் சினைப்பிடித்திருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். கருவூட்டல் செய்த சில வாரங்களிலேயே சினைப்பிடித்திருப்பதைப் பார்க்க முடியும் என்றாலும், அந்தச் சமயங்களில் சோதனை செய்யும்போது கரு கலைந்துவிட வாய்ப்புகள் உண்டு. இரண்டு மாதங்களில் கரு ஓரளவுக்கு வளர்ந்துவிடும் என்பதால், அந்தச் சமயத்தில் சோதனை செய்வது நல்லது.

சினைப்பிடித்திருப்பதைச் சில அறிகுறிகள் மூலமாகவும் அறிய முடியும். சினைப்பிடித்த மாடுகள், பருவத்துக்கு வராது (கோழை அடிக்காது). முதல்முறை சினைப்பிடிக்கும் மாடுகளுக்கு நான்காவது மாதத்தில் மடி இறங்கும். ஏற்கெனவே கன்றுபோட்ட மாடுகளுக்கு ஏழு மாதங்களுக்குப் பிறகுதான் மடி இறங்கும். கருவுற்ற மாடுகள் அமைதியாகக் காணப்படும். மெதுவாகத்தான் நடக்கும். மாட்டின் உடலில் ஒரு மினுமினுப்பு தெரியும். கருவுற்ற மாடுகளுக்குத் தினமும் 3 கிலோ அளவு அடர்தீவனம் கொடுத்து வர வேண்டும். தீவனத்தில் சரிவிகித சத்துக்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

கறவை மாடுகளில் கருவுற்றதிலிருந்து ஏழு மாதங்கள் வரை பால் கறக்கலாம். கருவுற்ற எட்டாம் மாதத்துக்குமேல், பால் உற்பத்திக்கான திசுக்கள் அழிந்து புதிய திசுக்கள் உருவாகும். அதனால், இந்தக் காலகட்டத்தில் கறவையை நிறுத்திவிட வேண்டும். அப்படி நிறுத்தினால்தான், கன்று ஈன்ற பிறகு, தரமான சீம்பால் சுரப்பதோடு, பால் உற்பத்தியும் அதிகரிக்கும். பாலில் கொழுப்புச்சத்தும் அதிகரிக்கும்.

அதே சமயம் பால் கறப்பதைத் திடீரென்று நிறுத்தினால் மடிநோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால், ஒரு நாள்விட்டு ஒரு நாள் பால் கறக்க ஆரம்பித்து, சில நாள்களில் நிறுத்த வேண்டும். சில மாடுகள் கருவுற்ற பிறகும் நன்றாகப் பால் கறந்துகொண்டிருந்தால், அடர் தீவனத்தைப் படிப்படியாகக் குறைத்து, பிறகு பால் கறப்பதை நிறுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick