“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை!”

கூட்டம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன்

‘பசுமை விகடன்’ மற்றும் ‘பசுமை நாமக்கல் இயக்கம்’ ஆகியவை இணைந்து... கடந்த ஜூலை 1-ம் தேதி நாமக்கல் சனு இண்டர்நேஷனல் ஹோட்டல் ரத்னா அரங்கில் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ எனும் தலைப்பில்  கருத்தரங்கை நடத்தின. 

இக்கருத்தரங்குக்குப் பசுமை நாமக்கல் அமைப்பின் தலைவர் வி.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். செயலாளர் தில்லை சிவக்குமார் தலைமை ஏற்றார். சுமார் முந்நூறு பேர் ஆர்வத்துடன் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நாமக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக இடவசதி உள்ளவர்கள் வீட்டில் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அதற்கான பயிற்சிகளை ‘பசுமை விகடன்’ இதழ் அளித்து வருவது பாராட்டத்தக்கது. எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பயிற்சிப்பட்டறைகள் வாயிலாகத் தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மெச்சத்தக்க செயல்.

 நாமக்கல்லில் உள்ள காவலர் குடியிருப்பில் நான் வசித்து வருகிறேன். அங்குள்ள காலி இடத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளேன். சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. கிலோ 130 ரூபாயை எட்டிவிட்டது. ஆனால், எனக்கு அதுகுறித்துக் கவலை இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் பாத்திகள் அமைத்து, சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளேன். எங்கள் குடும்பத்தேவைக்கு அது போதுமானதாக உள்ளது. அதேபோல் தக்காளி, வெண்டை, கத்திரி, கீரைகள் போன்ற வற்றையும் நடவு செய்துள்ளேன். குடியிருப்பில் வசிக்கும் மற்ற காவலர்களையும் வீட்டுத் தோட்டம்  அமைக்க வலியுறுத்தி வருகிறேன். நஞ்சில்லா உணவுதான் அடுத்த தலைமுறையை ஆரோக்கி யமனதாக்கும்” என்றார்.

வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து விளக்கப் படங்களுடன் வகுப்பெடுத்தார் வீட்டுத்தோட்ட வல்லுநர் கனகராஜ், “வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான கீரை, காய்கறிகளை உள்ளடக்கிய 10 பைகளை மட்டும் முதலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அதிலும் 22 நாள்களில் அறுவடைக்கு வரக்கூடிய கீரைகளை விதைக்க வேண்டும். கீரைகளில் தொடங்கிப் படிப்படியாகக் காய்கறிகள், பழச்செடிகள் என்று பயணித்துத் தொட்டிகளை அதிகப் படுத்தலாம். ‘முருங்கை முந்நூறு நோய்களைக் குணப்படுத்தும்’ என்பார்கள். ‘பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை’ என்பார்கள். முருங்கை, பப்பாளி ஆகிய இரண்டுமே பல நோய்களைக் குணப்படுத்தக்க கூடியவை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு முருங்கைச் செடிகள், ஒரு ஜோடி பப்பாளி மரங்கள் இருந்தால் மருத்துவச் செலவு குறையும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick