ஜீராபூல்... மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய நெல் ரகம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்! சென்ற இதழ் தொடர்ச்சி...பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

மது மாநிலத்துக்கென பிரத்யேக பாரம்பர்ய நெல் ரகங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகிய அம்சங்களைப் பொறுத்து சில பாரம்பர்ய ரகங்கள் இருக்கின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கெனப் பாரம்பர்ய நெல் ரகங்கள் உண்டு. அவற்றில் பல ரகங்கள் அழிந்துவிட்ட நிலையில்,

சில ரகங்கள் மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஜீராபூல்’  என்ற பாரம்பர்ய ரக நெல். ‘ஜீரா’ என்றால் சீரகம், ‘பூல்’ என்றால் பூ. சீரகப் பூவின் நறுமணத்தைக் கொண்டது இந்த ரகத்தின் அரிசி. கிட்டத்தட்ட நம்ம ஊர்ச் சீரகச் சம்பா மாதிரிதான். இதன் அரிசி சன்னமாக இருக்கும்.

சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள், பாரம்பர்யமாகச் சாகுபடி செய்துவந்த நெல் ரகம், ஜீராபூல். சில விவசாயிகள் மட்டுமே விதைத்து வந்த இந்த ரகத்தை மீட்டுப் பரவலாக்கியிருக்கிறார், ஆட்சியர் பிரசன்னா. சில ஆண்டுகளுக்கு முன் பல்ராம்பூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, இந்த நெல் குறித்துக் கேள்விப்பட்ட அவர், அதைப் பரவலாக்கியதோடு, விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.  இதுகுறித்துப் பேசிய பிரசன்னா, “பல்ராம்பூர்-ராமானுஜ்கஞ்ச் மாவட்டம், 2012-ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது. தனி மாவட்டமாக உருவாவதற்கு முன்பு வரை அங்கு நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ‘சுர்குஜா’ மாவட்டத்தில் இருந்துதான் பல்ராம்பூர் பிரிக்கப்பட்டது. ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களையும் தனது எல்லைகளால் தொட்டிருக்கிறது, பல்ராம்பூர் மாவட்டம். அதிகளவில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் மாவட்டம் இது. பெரும்பாலும் கோண்ட், உரால் இன மக்கள்தான் அதிகளவில் வசிக்கிறார்கள். மாவட்டத்திலுள்ள மக்களில் 60 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள்.

படிப்பறிவிலும் மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் நிறைந்த இந்த மாவட்டத்துக்கு, முதல் கலெக்டராக நான் பொறுப்பேற்றேன். புதிய மாவட்டம் என்பதால் ஏராளமான சவால்கள் இருந்தன. இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். அதைத்தவிர, சால் விதைகள், பீடி இலைகள் ஆகியவற்றைப் பறித்து விற்பனை செய்கிறார்கள். நெல்தான் பிரதான பயிர். அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், கடுகு பயிரிடுகிறார்கள். மழையை நம்பி, விவசாயம் செய்வதால் பெரும்பான்மையான விவசாயிகள் ஆண்டுக்கொருமுறை மட்டுமே சாகுபடி செய்வார்கள்.

மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அம்மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, அதிகாரிகளுடன் இணைந்து சில திட்டங்களைத் தொடங்கினேன். மாவட்டத்தில் அதிகளவில் பழங்குடியினர் வாழும், ‘டெஹ்ஷில்’ (Tehshil) எனும் கிராமத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது, நக்சல் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. ஒரு நதியைக் கடந்துதான் அந்தக் கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் அந்த மக்கள் வெளியே வர முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள், மருந்துகள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்படும். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அந்தக் கிராமத்துக்குச் சென்றேன். மலைகளால் சூழப்பட்டு மிக அழகாக இருந்தது. மக்கள் மிகவும் வெள்ளந்தியாக இருந்தனர். ‘அதிகாரிகள் என்ற அங்கியைத் தூக்கிக் கடாசிவிட்டு, மக்களோடு மக்களாகப் பேசுங்கள்’ என்று என் சக அலுவலர்களைக் கேட்டுக் கொண்டேன். அப்படிப் பேசியபோதுதான், அவர்கள் பாரம்பர்யமாகச் சாகுபடி செய்து வந்த ஜீராபூல் என்ற வாசனை அரிசி பற்றித் தெரியவந்தது.

அப்போது, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த செய்தி ‘பசுமை விகட’னில் வெளிவந்திருந்தது. அது நினைவுக்கு வந்தது. உடனே, இந்த ஜீராபூல் ரகத்தை நாமும் மீட்டெடுப்போமே என்று தோன்றியது. கே.வி.கே, வேளாண்மைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அந்த ரகத்தை மீட்டெடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினோம். ஜீராபூல் நெல் விதைகளை வைத்திருந்தவர்களிடம் இருந்து விதை நெல்லைச் சேகரித்தோம். ஆனால், டெஹ்ஷில் கிராம மக்கள் இதைச் சாகுபடி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாதம் ஒரு முறை கிராமத்துக்குச் சென்று, அம்மக்களைச் சந்தித்து இந்த ரகத்தைப் பயிரிடச் சொன்னேன்.

தொடர்ந்து வலியுறுத்தவும், இறங்கி வந்த அவர்கள் கோரிக்கை வைத்தனர். ‘எங்கள் கிராமத்துக்கு நீராதாரமாக இருக்கும் ‘சூரியநாளா’ ஓடையில் உள்ள தடுப்பணையின் கரையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். 2,300 மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களுக்குக் கான்கிரீட் அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டனர். நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்குக் கொடுக்கப்படும் சிறப்பு நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்கி... அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினோம். உடனே, அவர்கள் ஜீராபூல் நெல் சாகுபடியை ஆரம்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick