`வசதிங்கிறது வாழும் இடத்தில் இல்ல!’

பசுமைத் திரைபொன்.விமலா

காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்தைப் பதிவு செய்கிறது ‘கடம்பன்’ திரைப்படம். இயக்குநர் ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்தரின் தெரசாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் காட்டைப் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பற்றியும் படம்பிடித்துக் காட்டுகிறது. காட்டில் பிறந்து காட்டிலேயே வாழ்க்கை நடத்தும் மலைவாழ் மக்களையும் இயற்கை வளங்களையும் எப்படியெல்லாம் அழித்து, துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே திரைப்படத்தின் கதை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனத்தில் வசிக்கிறார்கள் மலைவாழ் மக்கள். அவர்களில் துடிப்பான இளைஞனாக வலம்வரும் ஆர்யா, அந்த மக்களின் நலனுக்காகப் போராடுவதுடன் சமூக விரோதிகளால் நிகழும் இயற்கை வளச் சுரண்டல்களையும், சமூக விரோத செயல்களையும் தட்டிக் கேட்கிறார்.

இயற்கையில் கிடைக்கும் தேன், கிழங்கு, தானியங்களை உண்டு, கூட்டமாக வாழ்க்கை நடத்தும் மலைவாழ் மக்களை, அங்கிருந்து துரத்திவிட்டு யானையின் தந்தங்கள், புலித்தோல், வனப்பகுதியில் உள்ள கனிம வளங்களை எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும் என்பது தனியார் நிறுவனத்தின் திட்டம். அதற்காகப் போலியான என்.ஜி.ஓ நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு அனுப்பி வைத்து, அவர்கள் மூலமாக அந்த மக்களை மலையைவிட்டு கீழே இறக்க நினைக்கிறது தனியார் நிறுவனம்.

இயற்கையாக காடுகளிலிருந்து மலைத்தேன் எடுக்கும் மக்களிடம் வளர்ப்புத் தேனீக்கள் குறித்து அறிமுகம் செய்கிறார்கள் என்.ஜி.ஓக்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக நம்ப வைக்கிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்களுக்கு நல்லது செய்வதுபோல நடித்து, கடைசியாக அவர்களைக் கடம்பவன மலையைவிட்டு கீழே இறங்கச் சொல்கிறார்கள்.

போலி என்.ஜி.ஓக்களின் இந்த நிபந்தனைக்கு  உட்படாத ஆர்யாவும், அந்த மலைவாழ் மக்களும் அவர்களை விரட்டி அடிப்பதுடன், பெரும் போராட்டத்துக்குப் பிறகு, மீண்டும் தங்களுக்குச் சொந்தமான கடம்பவனத்தை மீட்டு, வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

‘கடம்பன்’ திரைப்படத்தைப் போலவே, நிஜத்திலும் கேள்வி கேட்கவோ மீட்கவோ ஆளில்லாமல் பல மலைகளும் காடுகளும் சமூகவிரோத தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

‘வசதிங்கிறது வாழுற இடத்துல இல்ல... அது வாழ்க்கை முறையிலதான் இருக்கு’ எனத் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அப்படி வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், காடு எவ்வளவு முக்கியமானதென்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick