சீமைக்கருவேல மரம்... அப்புறப்படுத்த வேண்டியதா?

வாக்குமூலம் முனைவர் வெங்கடாசலம், படங்கள்: தி.விஜய், ஏ.சிதம்பரம்

சீமைக் கருவேல மரத்தின் மரண வாக்குமூலம் இந்த இதழிலும் தொடர்கிறது...

 ‘அய்யா நியாயன்மாரே...’

குறைந்த நீரில் முப்போகம் விளைவித்த சிறுதானியங்களை விட்டுவிட்டு, பணப்பயிர்மேல் பற்றுகொண்டு வாழையும் கரும்புமாய்ப் பயிரிட ஆரம்பித்தனர். அதற்காக, ஆயிரம் அடிவரை ஆழ்துளைக் கிணறுகளை வெட்டி நிலத்தடி நீரை வீணடித்தனர். அந்தப் பழியை என்மீது போட்டதை, நான் அமைதியாக ஏற்க வேண்டியதாகிவிட்டது. வேரோடு என்னைப் பிடுங்கும் இவர்களுக்குத் தெரியாதா... என் வேரின் நீளம் 15 அடிக்கு  மேல் இல்லை என்பது, அது தெரிந்தும் 70 அடி, 80 அடி என எங்கோ யாரோ கற்பனையாக எழுதி வைத்ததைக் காட்டி என்னைத் தண்டிக்கிறார்கள். இவர்கள் காட்டும் அந்த உதாரணம், எங்கோ ஓரிடத்தில் தோண்டிய குழியில் வளர்ந்த என் வேர். அதைப் பொதுமைப்படுத்தி ஏமாற்றி வருகின்றனர்.

நீர் நிலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டடங்களைக் கட்டி ஆக்கிரமிப்புச் செய்துள்ளது யார்? நிலத்தையெல்லாம் கான்கிரீட் காடாக மாற்றிவிட்டு தாவர அழிவுக்கு நீதான் காரணம் என்று என்னை நோக்கிக் கூறுவது எந்த வகையில் நியாயம்? என்னை முறைப்படுத்தி வளர்த்துப் பயன்படுத்தாதது எப்படி என் குற்றமாகும். உங்களின் தேவைக்கு ஏற்பதானே மற்ற பயிர்களையும் வளர்க்கிறீர்கள், அதேபோல என்னையும் வளர்க்கலாம் அல்லவா. நான் அபரிமிதமாக வளர ஊக்குவித்தது நீங்கள்தானே. என் விதைகளை ஆகாயத்திலிருந்து காற்றின் மூலம் பரவவிட்டது நீங்கள்தானே. ஏன், இன்று நீங்கள் போற்றும் தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக ஆண்டபோதுதானே. அவரின் நோக்கத்தைத்தானே நான் நிறைவேற்றி வருகிறேன். இலவச எரிவாயுவும் 100 யூனிட் மின்சாரமும் கொடுத்து என் பிழைப்பில் மண் விழச் செய்வீர்கள் என காமராஜருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், எனக்கு தெரிந்து இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தங்களது வெப்பத்தேவையை என் விறகைப் பயன்படுத்திதான் பூர்த்தி செய்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick